நிறவெறி: ஆன்ட்ரூ சாக்சனைப் பின்பற்றும் டொனால்டு டிரம்ப்

ஆன்ட்ரு சாக்சன்
2016 நவம்பர் 8ஆம் நாள் நடைபெற இருக்கும் அமெரிக்க குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி (Republican Party) சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு டிரம்ப் அக்கட்சிக்கே திகிலூட்டுபவராக இருக்கிறார். பீதியூட்டுகிற, பாதுகாப்பைக் குலைக்கும் தொனியிலான அவரது உரைகளைக் கேட்கும் நீங்கள், ‘இதற்கு முன்னர் இதுபோல எப்பொழுதும் நடந்திருக்காது’ என எண்ணியிருக்கக் கூடும்.  ஆனால்,  அது உண்மை அன்று.
            முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வேட்பாளர் நியமனத்தை நோக்கி டொனால்டு டிரம்ப் செல்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால்,  1829ஆம் ஆண்டு முதல் 1837ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 7ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவரும் 20 டாலர் பிரேரணையில் சர்ச்சைக்குரிய முகத்தைக்கொண்டு இருந்தவருமான ஆன்ட்ரு சாக்சனின்  கடந்துசென்ற வாழ்க்கையோடு டிரம்ப்பின் வாழ்க்கை ஒத்திருப்பதாக வரலாற்று எண்ணம்கொண்ட நோக்கர்கள் சிலர் கருதுகின்றனர்.
# 1: போட்டியை நோக்குக
1829ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையை சாக்சன் வெல்வதற்கு முன்னரே, அமெரிக்க நாட்டின் கட்சிகள் மாறிக்கொண்டிருந்த 1824ஆம் ஆண்டில் அவர் குடியரசுத் தலைவராக முயன்று தோற்றிருந்தார். வடகிழக்குப் பகுதியின் வணிகர்களும் கூட்டாட்சி நிர்வாக ஆதரவாளர்களான கடன் கொடுப்பவர்களும் முக்கியத்துவம் பெற்றிருந்த கூட்டாட்சியினர் (Federalists) கட்சி,  சாதாரண மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் எனக் கூறிக்கொண்ட தென்பகுதியைச் சேர்ந்த நிலவுடைமையாளர்களும் விவசாயிகளும் நிறைந்த சனநாயக – குடியரசினர் கட்சி என்னும் இரண்டு கட்சிகளையே அமைப்பு அதுவரை கொண்டிருந்தது.
            1824ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தலில் சனநாயக – குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஐவர் போட்டியிட்டனர்; கூட்டாட்சியினர் ஒருவர் கூட போட்டியிடவில்லை.   சாக்சன் அதிகப் புகழையும் வாக்குகளையும் பெற்றிருந்தார்; ஆனால் போட்டியிட்ட ஐவரில் ஒருவர்கூட பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.  பன்னிரண்டாவது திருத்தத்தைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் அவை (House of Representatives ) எடுத்த முடிவின் விளைவாக ஜான் குயின்சி ஆடம்ஸ் (John Quincy Adams) குடியரசுத் தலைவர் ஆனார்.
டிரம்பின் போட்டியாளரான ஹில்லரி கிளின்ட்டனுக்கும் ஆடம்ஸுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.  ஜான் குயின்சி ஆடம்ஸ், முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் ஆட்மஸுக்கு மகன் என்றால், ஹில்லரி கிளின்டன் முன்னாள் முதல் பெண்மணி ஆவார்.  இருவரும் ஐவி லீக் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்;  அமெரிக்க நாட்டின் செனட்டர்களாகவும் மாநிலச் செயலாளர்களாகவும் பணியாற்றியவர்கள்; தாங்கள் வாழும் காலத்தில் நிறுவப்பட்ட அரசியலமைப்பின் பிரதிநிதிகள்.

#2: கருத்தியல் மீது உள்ளுணர்வு
சாக்சன் கரோலினாவில் பிறந்தவர். அவர் தானே முயன்று கற்ற வழக்கறிஞர்; 1812ஆம் ஆண்டில் நிகழ்ந்த போரில் தேசிய கதாநாயகனாக உருவானவர்; பிரதிநிதிகள் அவைக்கு டென்னிசியிலிருந்து முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இத்தகு தகுதிகள் எவையும் டொனால்ட் டிரம்புக்குக் கிடையாது. ஆனால் சாக்சனிடமிருந்த ஒரு முக்கியமான பண்பு டிரம்பிடம் இருக்கிறது; அவர் கருத்தியலை(ideology)விட கருத்தின் (idea) பிரதிநிதியாக இருக்கிறார்.
1824ஆம் ஆண்டில் பிரதிந்திகள் அவையின் தேர்வாக ஆடம்ஸ் இருந்தார். மக்களின் விருப்பத்திற்கு எதிரான உயர்தட்டினரின் நாசவேலைக்குச் சான்றாக, சாக்சனுடைய ஆதரவாளர்கள் ‘ஊழல் பேரத்தால்’ பூசிமெழுகப்பட்டார்கள்.  1828ஆம் ஆண்டில் அதே உயர்தட்டினரை எள்ளிநகையாடி சாக்சன் குடியரசுத் தலைவராக உயர்ந்தார், தற்பொழுது வாசிங்டனுக்கு எதிராக டிரம்பு செல்வதைப் போல.
 “நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளின் பிரதிநிதியாக சாக்சன் இருந்தார்” என்கிறார் வால்டர் ஆர் மீடு (Walter R Mead) என்னும் வரலாற்றாளர்.  கூட்டாட்சி அரசாங்கத்திடம் அதிகாரமும் ஆதிக்கமும் குவிந்திருக்கின்றன; அவற்றைக் கொண்டு சமூகத்தின் நலத்தை மேம்படுத்தவும் காக்காவும் வாய்ப்புள்ள அனைத்தையும் செய்ய வேண்டும் என்னும் கருத்தே அவரது உலகப்பார்வையின் இதயமாக இருந்தது. டிரப்பு, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக விழைந்த போதிலும் வலிமையான மைய அரசாங்கம் வேண்டுமென வாதிடுகிறார்; பொருளாதாரம் மற்றும் நாட்டின் பாதுக்காப்பில் அதற்குரிய பங்கை வலியுறுத்துகிறார்; சாதாரண மக்களின் பாதுகாவலான தன்னைத்தானே திட்டமிட்டு முன்னிறுத்திக் காட்டுகிறார்.
மேலும், சாச்சனியர்கள்  (Jacksonians) அமெரிக்கா போரை நாடிச் செல்லக்கூடாது; ஆனால், போருக்கு அழைக்கப்பட்டால், “நிபந்தனையற்ற ஒப்படைவையும் முழுமையான வெற்றியையும்” அடைய வேண்டும் என நம்புகின்றனர்.  “ஐ.எஸ்.ஐ.எஸ். அச்சத்தின் மீது வெடிகுண்டை வீசுவேன்” என டிரம்பு கூறும்பொழுது, ஆன்ட்ரு சாக்சன் புகுத்திய பாதுகாப்பின்மை, தேசியவாதம், நாட்டுப்பற்று ஆகியவற்றைக்கொண்டு சொற்சிலம்பம் ஆடுகிறார்.

# 3 சாதாரண மக்களிடம் முறையீடு
டிரம்பும் சாக்சனும் அரசியல் நிறுவனத்திற்கு அப்பால் வாக்காளர்களின் உணர்வுகளிடம் முறையிட்டார்கள்.  ஃபோபர்ஸ் 400 நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கும் டிரம்பு, வால் ஸ்டீரிட் வங்கியினரை விமர்சிப்பதைப் போலவே ஆன்ட்ரு சாக்சன் பணக்காரராகவும் அதிகாரமுடையாகவும் இருந்தபோதிலும்,  பணக்காரர்களும் அதிகாரவர்க்கத்தினருக்கும் எதிராகச் சென்றார்.  சாக்சனின் இந்த முரண்பாடு, அவருடைய முறையீட்டிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
அமெரிக்காவின் இதயப்பகுதியில் மிகஅதிகமாக உள்ள  டிரம்பின் ஆதரவாளர்கள்,  அரசியற்சரிநிலைப் போக்கு (trend of political correctness) வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டது என நம்புகிறார்கள்.   கடலோர அறிவாளிகளிடம் இருந்துவந்த அழுத்தம், அவர்களது சொந்த எண்ணங்களைப் புரட்டிப்போட்டது. இதற்கு வலுவூட்டும்விதமாக, அரசியற்சரிநிலையை இழிவுபடுத்தியும் ‘ஐந்தாம் நிழற்குடைச்சாலையின் நடுவில் நின்று, வாக்காளர்களை இழக்காமல் சிலரைச் சுட’ அவரால் முடியும் என்னும் தனக்கு மிகவும் விசுவாசமான தன் ஆதாரவாளர்களின்  பாராட்டிப் பராமரித்தும் டிரம்ப் நடந்துகொள்கிறார்.
               சாக்சனின் வாக்கு வங்கியாக இருந்த, “இதுபோலச் சொல்க” என்னும் சாக்சனின் ஆளுமையையும் சமூக நல்லிணக்க அலட்சியத்தையும் பாராட்டிய உள்நாட்டு வாக்காளர்களை இவர்கள் நினைவூட்டுகிறார்கள்.  “சாக்சன் தன் முதன்மை அரசியல் எதிரியை சுடவும் தன் குடியரசுத் துணைத்தலைவரை தூக்கிலிடவும் விரும்பியபொழுதிலும் பெருமளவு பிரபல ஆதரவினைப் பெற்றிருந்தார்” என சாக்சனைப் பற்றி ஒரு மேற்கோள் உண்டு.
 
#4. நிறுவனத்தின் மீதான குற்றம்
 “இதுபோன்ற கருத்துரைகள் அரசியல் நிறுவனத்தைப் புண்படுத்தும். சாக்சனை தகுதியற்றவர், அவமரியாதைக்குரியவர், ஆத்திரக்காரர், அபயகரமானவர் என்றெல்லாம் அழைத்து அவரை தாமஸ் ஜெபர்சன் எச்சரித்தார்.  பின்னர், அரசியல் தலைவர்கள் “வாய்ப்பேச்சு வீரர்கள்” எனக் கண்டித்த சாக்சன், தனது அமைச்சரவையில் பொதுப்பணியில் அனுபவமற்ற வணிகர்களை இடம்பெறச் செய்தார்.

டொனால்ட் டிரம்பு
இதேபோன்ற உறவே தற்போதைய குடியரசுக்கட்சித் தலைவர்களுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நிலவுகிறது. அவர்கள் இவரை, அபாயகரமானவராகவும் ‘தேர்ந்தெடுக்கப்படக் கூடாதவரா’கவும் காண்கிறார்கள். டிரம்ப் சங்கடம்தரும் குடியரசுத் தலைவராக இருப்பார் என கருத்துக் கணிப்புகளின் பொதுக்கருத்தாக இருந்தபோதிலும் அவர் இன்னும் உறுதிப்பாடு உடையவராகவும் பெருகிவரும் ஆதரவாளர்களைக் கொண்டவராகவும் இருக்கிறார்.

#5: இனவாதம்
சாக்சனைப் போலவே டிரம்பும் வெள்ளையரிகளிடமே முக்கியமாக முறையிடுகிறார். வெள்ளையர்களின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அவரது வாகையர்களாகும். மெக்சிகனிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வருகிறவர்கள் போதைப்பொருள்களை கடத்தி வருகிறார்கள்; குற்றங்களிலும் வல்லுறவிலும்  ஈடுபடுகிறார்கள் என கு குளசு குளான் (Ku Klux Klan) தெரிவித்த கருத்தை அவர் மறுத்தார்.  வீடற்ற இசுபானியர் ஒருவரை அவரது விசிறிகள் அடித்தனர் என்பதை அவர் கேட்டது அவர்களை “உணர்ச்சிகரமானவர்கள்” என அழைத்தார். யூத குடியரசுக் கட்சியினர் சிலரைப் போல தானும் பேச்சுவார்த்தையாளர் என்பதனால் அவர்கள் தன்னைப் புரிந்துகொள்வர்கள் என்றார்.  வெள்ளை மேலாதிக்கவாதியின் பாராட்டை மறுகீச்சிட்டார். இருப்பினும் “நீங்கள் சந்தித்தவர்களிலேயே இவர்தான் மிகக்குறைவாக இனவாதம் பேசுபவர்” என்னும்  பிம்பத்தையும் தக்கவைத்துக்கொள்கிறார்.
            டிரம்பின் தற்காப்புவாதம் புரிந்துகொள்ளக் கூடியதே. ஏனென்றால், அவரது இனவாதம் தனித்தன்மை வாய்ந்தது. அவர் ஆப்பிரிக-அமெரிக்கர்களையும் லத்தினோகளையும் பிற வெள்ளையர் அல்லாதவர்களையும் துல்லியமாகக் குறிப்பிட்டு வெறுக்கவில்லை; சாச்சனைப் போலவே அவர்களது உரிமைகளை மதிக்க மறுக்கிறார்.  வெள்ளைப் பெரும்பான்மையினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வரை சிறுபான்மையினர் அவர்கள் தம் வாழ்க்கையை வாழ முடியும்.
            வரலாற்றில், சாக்சனைவிட சிறப்பாக இக்கருத்தை வேறு எந்த குடியரசுத் தலைவரும் பிரதிநிதித்துவப்படுத்தியது இல்லை. அவர், வெள்ளையர்களின் குடியிருப்பில் இருந்து வெகுதொலைவில் “இந்தியர்”களைக் குடியேற்ற வகைசெய்த இந்தியர்களை அப்புறப்படுத்தல் சட்டத்தில் கையொப்பமிட்டுவிட்டு, அதனை “அரசாங்கத்தின் இரக்கம் மிகுந்த கொள்கை” என “மகிழ்ச்சி”யோடு அறிவித்தார்.  
     
       இந்த பழங்குடியினர் தம்மளவில் அச்சுறுத்துகிறவர்கள் அல்லர், ஆனால் வெள்ளையரின் வளமைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டவர்கள். எனவேதான், சாக்சன் மிசிசிபி ஆற்றிற்கு மேற்கே பழங்குடியினரை கட்டாயமாக அப்புறப்படுத்த ஆணையிட்டார்.  அப்பொழுது 4000 செரோகியர்களும் (Cherokee) 3500 கிரிக்கியர்களும் (Creeks) மாண்டனர் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் “கண்ணீரின் சுவடுகள்” என அறியப்படுகின்றன.
            சனநாயகக் கட்சியின் தந்தையென சாச்சனை சிலர் மதிப்பர்.  அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் பொழுது அத்தகுதி அவருக்கு வாய்த்தது. 1824ஆம் ஆண்டில் தனது ஆதரவாளர்களின் பாதையில் அவர் சென்றார். இதனால் அவர் 1828 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கும் 1832ஆம் ஆண்டின் மறுதேர்தலுக்கும் செலுத்தப்பட்டார்.   அவர்தம் குடியரசுத் துணைத்தலைவரான மார்டின் வான் புயுரன் (Martin Van Buren, அவருக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, சனநாயகக் கட்சியினருக்கு சாதாரணர்களிடமான தங்களது முறையீடே தங்களை அதிகாரத்தில் இருத்தியிருக்கிறது எனத் தெளிவுபடுத்தியது.
            டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அரசியல் மேம்பாட்டின்  புதிய ஊழியைக் கட்டியம்கூறுபவராக எஞ்சியிருப்பார் என்பதனைக் காணலாம்.  டிரம்ப்  பெரும்பான்மையான முதன்மை வாக்குகளை வெல்வாரேயானால் வேட்பாளர்களை நியமிக்கும் விதிகளை மாற்றுதல்  அல்லது வழக்காறுகளோடு பேச்சுவார்த்தை நடத்துதல் பற்றிய பேச்சுகள் நிலவுகின்றன.  இலக்கை அடைதலின் பாதையில்  அவர் எச்சமாக இருப்பார். டிரம்ப் போட்டியில் நுழைந்த விதிகளின்படி அவர் வென்ற வேட்பாளர் நியமனத்தை அவர் மறுக்கக்கூடும்.  அவ்வாறு நிகழ்ந்தால், குடியரசுக் கட்சியினர் 1824 – 1828 காலகட்ட நிகழ்வுகளை நினைவுபடுத்திக் கொண்டு, 2020 ஆம் ஆண்டில் அவர்கள் எதனை எதிர்ப்பார்க்க வேண்டும் என்பதனை தமக்குள் தாமே வினவிக்கொள்ள வேண்டும்.
<><><><><><><><> 

அமெரிக்காவிலுள்ள எக்சஸ் பல்கலைக்கழக அரசாங்கத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் ஹின்னா யானிடெல் ரெனின்ஹர்டுட் 2016 மார்ச் 11ஆம் நாளிட்ட ‘த கான்வர்சேசன்’ இணைய இதழில் எழுதிய “ஆன்ட்ரூ சாக்சன்: டொனால்டு டிரம்பின் குடியரசுத் தலைமைக்கு முன்னோன்” கட்டுரையின் தமிழாக்கம்.



நன்றி: மின்னம்பலம்.காம் 2016 மார்ச் 16 புதன்
https://minnambalam.com/k/1458086401

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...