கைக்கு வந்த கண்ணதாசன் கல்யாணப்பரிசு

தேனி வரசக்தி விநாயகர் கோவிலில் ஒவ்வோராண்டும் நவராத்திரி கலை இலக்கிய விழாவாகக் கொண்டாடப்படும். இவ்விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை வந்திருக்கிறார்; கவியரங்கிற்கு அன்று, இலக்கியப் பேருரை ஆற்றுவதற்காக. அது என் அப்பா இறந்த 1977ஆம் ஆண்டாக இருக்க வேண்டும்; ஏனவே அவரது உரையை நான் நேரடியாகப் கேட்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் தனது வாழ்க்கையையும் இலக்கியத்தையும் கண்ணதாசன் நகைச்சுவையோடு எடுத்துரைக்கும் அந்தப் பேருரையின் ஒலிநாடாவை அதற்குப் பின்னர் ஆண்டுதோறும் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஒலிக்கவிடுவார்கள்; அப்பொழுது பலமுறை அதனைக் கேட்டிருக்கிறேன். அவ்வுரையில் தான் பெண்பார்த்த படலத்தையும் திருமணம் நடந்த கதையும் மிகச்சுவையாக கண்ணதாசன் விளக்கி இருப்பார். அதன் சாரம் இதுதான்:



கண்ணதாசன் திரைத்துறையில் நுழைந்தும் நுழையாத அந்தவேளையில் தன்கட்டுப்பாடு இல்லாமல் பெண்களோடு சுற்றுகிறார் என்னும் தகவல் காரைக்குடியில் இருந்த அவருடைய வளர்ப்பது தாயாருக்கு அண்ணன் ஏ. எல். சீனிவாசனால் சொல்லி அனுப்பப்படுகிறது. உடனே தாயார் கண்ணதாசனுக்கு பெண்பார்க்கத் தொடங்குகிறார். பத்து பெண்களை அவர் தேர்ந்தெடுத்துவிட்டு கண்ணதாசனை காரைக்குடிக்கு அழைக்கிறார். பின்னர் அவரை ஒவ்வொரு வீடாக அழைத்துச் சென்று தான் பார்த்த பெண்களை எல்லாம் காட்டுகிறார். இரவு வீட்டிற்குத் திரும்பிய பின், ‘அந்தப் பெண்களில் யாரைப் பிடித்திருக்கிறது?’ என கண்ணதாசனிடம் வினவுகிறார். அவரோ தனக்கு எல்லாப் பெண்களையும் பிடித்திருப்பதாகக் கூற, ‘அவர்களில் யாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாய்?’ என தாயார் வினவ, ‘அனைவரையும்’ என கண்ணதாசன் கூறுகிறார். இனி இவரிடம் கேட்டால் பயனில்லை என எண்ணிய தாயார், கண்ணதாசனை சென்னைக்கு அனுப்பிவிட்டு, ஒரு பெண்ணைப் பேசி முடிக்கிறார். கல்யாணத்தன்று கண்ணதாசன் ஊருக்கு வருகிறார். திருமணம் நடக்கிறது. முதலிரவு அறையில் கண்ணதாசன் அமர்ந்திருக்கிறார். மணப்பெண் உள்ளே வருகிறார். சிலப்பதிகாரத்தில் கண்ணகியை கோவலன் புகழ்ந்து பாடியதைவிட சிறப்பாக தன் மனைவியைப் புகழ்ந்து தன் எழுதிய கவிதை அவருக்கு கண்ணதாசன் படித்துக்காட்டுகிறார். ஆனால் அவர் மனைவி அக்கவிதைப் பாராடி ஒரு புன்னகையைக்கூட உதிர்க்கவில்லை. கண்ணதாசனுக்கு ‘சே’ என்று ஆகிவிடுகிறது. திருமணமாகி இரண்டு நாள்கள் கழிகின்றன. அப்பொழுதுதான் தன் மனைவிக்கு இரண்டு காதுகளும் கேட்காது என்னும் உண்மை கண்ணதாசனுக்குத் தெரிய வருகிறது.

கண்ணதாசனுக்கு மனைவியான அந்தப் பெண்ணின் பெயர் பொன்னழகி. அந்த அம்மையாரின் பொறுமையைப் பற்றியும் அந்த உரையில் அவர் குறிப்பிட்டு இருப்பார். அந்த அம்மையார் 30-5-2012ஆம் நாள் தனது 79ஆம் அகவையில் இறந்து போனார். கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களையும் அலமேலு, தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களையும் பெற்ற கண்ணதாசன் – பொன்னழகி இணையைரின் திருமணம் 1950 ஆம் ஆண்டில் நடந்தது என்னும் குறிப்பு கண்ணதாசன் பதிப்பகத்தின் விலைப்பட்டியலில் உள்ள அவரைப் பற்றிய குறிப்பில் இருக்கிறது. ஆனால் அது நடைபெற்ற நாள் அக்குறிப்பில் ஏனோ இடம்பெறவில்லை. சில மாதங்களுக்கு முன் எதிர்பாராத வகையில் அந்த நாளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.



பாரதிதாசன் நூல்களின் முதற்பதிப்புகளைத் தேடிச் சேர்க்கும் முயற்சியில் இருக்கும் நான், பழைய புத்தக்கடைகளில் கிடைக்கும் அவருடைய நூல்கள் எல்லாவற்றையும் புரட்டிப் பார்ப்பது வழக்கம். இதனை நன்கு அறிந்த மதுரையில் உள்ள பரணி புத்தக்கடை என்னும் பழைய புத்தகக்கடையை நடத்தும் பாலு, ஒருநாள் பாரதிதாசன் இயற்றிய தமிழியக்கம் நூலின் பழையபடி ஒன்றைக் கொடுத்தார். அதனை இரண்டாம் பக்கத்தைப் பார்த்தேன். இரண்டாம் பதிப்பு 1947 என இருந்தது. இதே பதிப்பு ஏற்கனவே என்னிடம் இருந்ததால் உற்சாகமின்றி முதற்பக்கத்தைத் திருப்பினேன். யாருக்கோ மணப்பரிசாக அந்த நூல் வழங்கப்பட்டு இருந்தது. பாலுவிடம் கதை பேசிக்கொண்டே யாருக்கு இது பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது எனப் பார்த்தேன். அதில், “கண்ணதாசன்” எனத் தொடங்கி ஏதோ எழுதப்பட்டு இருந்தது. அதனைப் பார்த்த்தும் உற்சாகமாகி பாலுவிடம் பேசிக்கொண்டிருந்த பேச்சை அப்படியே விட்டுவிட்டு அதில் எழுதியிருப்பதை கவனமாகப் பார்த்தேன். “கண்ணதாசன் – பொன்னழகி திருமணத்தன்று அளித்த அன்பளிப்பு” என முதல் வரி எழுதப்பட்டு இருந்தது. அடுத்து நா. முத்து புதுக்கோட்டை என பரிசளித்தவரின் பெயரும் ஊரும் குறிக்கப்பட்டு இருந்தன. அதற்குக் கீழே 9-2-50 எனக் குறிக்கப்பட்டு இருந்தது. ஆம் இன்றைக்கு சரியாக 64 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணதாசன் – பொன்னழகியின் திருமணம் நடந்திருக்கிறது!

கண்ணதாசனுக்கு அவர் நண்பர் கொடுத்த கல்யாணப்பரிசு எப்படியோ அவருடைய வீட்டைவிட்டு வெளியேறி எங்கெங்கோ சென்று, இப்பொழுது என்னை வந்து அடைந்திருக்கிறது.

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...