சென்னைப் புத்தகக்கண்காட்சியின் இறுதிநாள். நண்பர் பாலமுருகன் வருகைக்காகக் காத்துக்கொண்டும் நூல்களை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டும் திரிந்தேன். நண்பரிடம் இருந்து சில அழைப்புகள் வந்தன; எடுத்துப் பேசும் ஒவ்வொருமுறையும் இணைப்பு அறுந்தது. திருப்பி அழைத்தால் இணைப்பே கிடைக்கவில்லை. சலிப்படைந்து கைபேசியைச் சட்டப்பைக்குள் போட்டுக்கொண்டு சலிப்போடு வலப்பக்கம் இருந்த கடைக்குள் நுழைந்தேன். முழுக்க காலச்சுவடு பதிப்பக நூல்களாக இருந்தன. வெளியே வந்து பெயர்ப்பலகையைப் பார்த்தேன். சுதர்சன் என இருந்தது. பார்வையைக் கீழே இறக்கி, பொறுப்பாளர் இருக்கைக்கு அருகில் தொங்கிக்கொண்டு இருந்த நாட்காட்டியைப் பார்த்தேன். கோட்டோவியமாக அதில் வரையப்பட்டு இருந்த முகம் தெரிந்த முகமாக இருந்தது. சற்று கண்ணைச் சுருக்கிப் பார்த்த பொழுது (வயது ஆயிருச்சுல்ல) அது “கிருஷ்ணம்மாக்கா” என மதுரை காந்தி நண்பர்களாலும் “அம்மா” என திருவாரூர் மாவட்டத்தின் உழைக்கும் மக்களாலும் அழைக்கப்படும் “கிருட்டிணம்மா செகநாதன்” முகம்தான் அது. படத்திற்கு மேலே அச்சிடப்பட்டு இருந்த தேதியைப் பார்த்ததும் மனது துணுக்குற்றது. ‘இருக்குமா?... நமக்குத் தெரியாமல் போய்விட்டதே.’ என ஒரு நொடி பதறிப்போனேன்.
சற்று ஒதுங்கி நின்று, கைபேசியை எடுத்து எண்களை ஒற்றினேன். அம்மாவின் கைபேசியில் அழைப்புப் போய்க்கொண்டே இருந்தது. யாரும் ஏற்கவில்லை. ‘ஒரு வேளை உண்மைதானோ?’ என்றது மனது. ‘இருக்காது இருந்தால் அழைப்புப் போகாதே’ என ஆறுதலடைந்தது மனது. ‘சரி. எதற்கும் அவரிடம் கேட்டுவிடுவோம்’ என இன்னொரு எண்ணை ஒற்றினேன். மறுமுனையில், “சொல்லுங்க சார். நல்லாயிருக்கீங்களா?” என்றார் காந்தி, கிருட்டிணம்மாக்கு உதவியாளராக இருக்கும் அவர் பெயரன்.
“நல்லா இருக்கேன் காந்தி. அம்மா எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க சார். திருச்சில அக்கா வீட்டில இருக்காங்க சார். நாளைக்குப் பார்ப்பேன் சார்.”
“அப்பா இறந்தன்னைக்கு அம்மாவைப் பார்த்தது. கேட்டேன்னு சொல்லுங்க. சீக்கிரமா வந்து பார்க்கிறேன்.”
“சார், அப்பாவோட முதலாண்டு நினைவு நாள் பிப்ரவரில வருது. அந்த நாள சர்வோதய நாளா கடைபிடிக்கப்போறோம். காந்திக்கிராமம் ஊழியரகத்தில மூணுநாள் கருத்தரங்கம் இருக்கு. மறந்திராம வந்திருங்க சார்.”
“என்னைக்கு அப்பாவோட நினைவு நாள்?”
“பிப்ரவரி 12. கருத்தரங்கம் 10, 11, 12 மூணுநாளும் நடக்குது.”
“சரி காந்தி. கட்டாயம் வந்திறேன். காலச்சுவடு இதழ் ஒரு நாட்காட்டி வெளியிட்டு இருக்காங்க. அதில அம்மாவோட படம் போட்டிருக்காங்க. பார்த்தீங்களா”
“பார்க்கலையே. அப்படி வெளியிட்டதே எங்களுக்குத் தெரியாதே”
“சரி. கிடைச்சா வாங்கிப் பாருங்க. நன்றி!”
இணைப்புத் துண்டித்துவிட்டு, கடைக்குத் திரும்பினேன். கிருட்டிணம்மாள் ஓவியத்திற்கு மேல் 12.2.2013 என தேதி எழுதப்பட்டு இருந்தது. பொறுப்பாளரிடம், ‘இப்படி தேதி போட்ட என்ன பொருள்?’ என்றேன். அவர் என்னை ஏற இறங்க என்னைப் பார்த்தார். ‘இது கூட தெரியல. புத்தகம் வாங்க வந்திட்டான். கேணப்பய” என்பதைப் போல ஏளச்சிரிப்பு உதட்டில் பரவ, ‘இந்தத் தேதில அவங்க இறந்திட்டாங்கன்னு அர்த்தம்’ என்றார்.
“உங்களுக்கு உறுதியாத் தெரியுமா?’
“காலச்சுவட்டோட வெளியீட்டுல 99% தப்பே இருக்காது”
“அப்படின்னு யாரு சொன்னா?’
“எங்க வாசகர்கள்தான். ஏன்னா எங்க உழைப்பு அப்படி. எதையும் ஆதாரத்தோடதான் வெளியிடுவோம்”
உரையாடல் நடந்துகொண்டு இருக்கும்பொழுது அங்கு வந்தடைந்த பாலமுருகன் அமைதியாக உரையாடலைக் கவனிக்கத் தொடங்கினார்.
“ஆனா இந்த தேதி தப்பா இருக்கே”
“இல்ல சார். சரியாதான் இருக்கும். நீங்க தெரியாமச் சொல்றீங்க”
“சார். அந்த அம்மா உயிரோட நல்லா நடமாடிக்கொண்டும் நிலவுரிமைக்காகப் போராடிக்கொண்டும் இருக்காங்க. இப்பத்தான் அவர் பெயரன்கிட்ட பேசினேன்.”
“அப்படியா!”
“ஆமா”
“அதான் இத விக்க வேணாம்னு இப்ப சொல்லி அனுப்பிச்சாங்க போல” எனக் கூறியவாறே நாட்காட்டியை கழற்றினார்.
“வாங்க பாலா போகலாம்”
“என்ன செய்தி அரி?”
நடந்ததைக் கூறினேன்.
“அப்ப அதுல எழுதியிருக்க தேதி?’
“அது செகநாதன் அண்ணாச்சி இறந்த நாள். அவங்களுக்கு கிருட்டிணம்மாள் செகநாதனுக்கும் செகந்நாதனுக்கும் வேறுபாடு தெரியவில்லை. அதனால்தான் அண்ணாச்சி இறந்த நாளை அம்மா இறந்த நாளாகக் குறித்திருக்கிறார்கள்”
“அடக் கொடுமையே”
பேசிக்கொண்டே இருவரும் அடுத்த கடைக்குப் போனோம்.
Subscribe to:
Post Comments (Atom)
கலகத் தமிழிசைக் கலைஞர்
கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...
-
இன்றைக்கு சுஜாதாவிற்கு நினைவுநாளாம். யாரோ ஒரு நண்பர் என்னையும் சுஜாதாவின் புகழ்பாடும் “ எழுத்தாளர் சுஜாதாவின் விசிறிகள் குழு ” என்னும் முக...
-
சின்னையில் பிறந்து, வதிலையில் வளர்ந்து, மதுரையில் பயின்று, சென்னையில் சிறந்தவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா. இவர் மதுரை ...
-
தேனி வரசக்தி விநாயகர் கோவிலில் ஒவ்வோராண்டும் நவராத்திரி கலை இலக்கிய விழாவாகக் கொண்டாடப்படும். இவ்விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை வந்திர...
No comments:
Post a Comment