மேதா பட்கர் பல்வேறு சமுதாயச் செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து 2004 ஆம் ஆண்டில் மக்கள் அரசியல் முன்னணி (People's Political Front) என்னும் அரசியல் கட்சியை உருவாக்கினார். அக்கட்சி அவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சில இடங்களில் போட்டி இட்டது. அப்பொழுது, சமுதாயச் செயற்பாட்டு இயக்கங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது பற்றி காந்தியச் செயற்பாட்டாளரான பு. வீ. இராசகோபால் (P.V.Rajagopal), ஆட்சியாளர்களை வேலைவாங்க வேண்டிய சமுதாயச் செயற்பாட்டாளர்கள் ஆட்சியாளர்களாக இருப்பதைவிட ஆட்சியாளர்களை வேலைவாங்குபவர்களாக இருக்க வேண்டும் என்னும் பொருளில், “யானையாக இருப்பதைவிட யானைப்பாகனாக இருப்பதே சிறந்தது” என எங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் ஒன்றில் கூறினார். அவரின் கூற்றை இப்பொழுது ஆம் ஆத்மி கட்சியினர் உண்மை ஆக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
சிந்தாந்தமும் தொலைநோக்கும்:
இதற்கு முன்னர் அரசியல் கட்சியைத் தொடங்கிய சமுதாயச் செயற்பாட்டாளர்களான ஓய். டேவிட்டின் சமத்துவ சமுதாய இயக்கத்திற்கு வர்க்க வேறுபாடற்ற சோசலிச சமுதாயத்தையும் மேதாவின் மக்கள் அரசியல் முன்னணிக்கு காந்திய சோசலிச சமுதாயத்தையும் உருவாக்குவது என சிந்தாந்த அடிப்படையிலான தொலைநோக்கு இருந்தது. ஆம் ஆத்மிகளின் வழிகாட்டியான அண்ணா கசாரேவுக்கும் கிராம சுயராச்சியத்தை அமைக்க வேண்டும் என்னும் தொலைநோக்கு இருக்கிறது. ஆனால் தாங்கள் வலதும் அல்லர், இடதும் அல்லர் எனக் கூறிக்கொள்வதன் மூலமாக தமக்கு சிந்தாந்தமும் இல்லை; தொலைநோக்கும் இல்லை என்பதனை ஆம் ஆத்மிகள் தெளிவுபடுத்திவிட்டனர்.
ஊழல் எங்கெங்கும் புரையோடி இருக்கிறது எனபது உண்மைதான். அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் அதற்காக மக்கள் இயக்கங்கள் செயல்பட வேண்டும் என்பதும் சரியான பார்வைதான். இந்த ஒற்றைப் பார்வையை முன்வைத்துதான், ஊழல்வாணர்கள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை ஆம் ஆத்மிகள் வாக்குகளாக மாற்றினார்கள். யாருக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லாத சூழலில் காங்கிரசின் ஆதரவைப்பெற்று ஆட்சி அமைத்தார்கள். அதுவரை யானைப்பாகர்களாக இருந்தவர்கள் யானையாக மாறினார்கள்!
அதற்குப் பின்னர் அரவிந்த் கெசுரிவால் மேற்கொள்ளும் கவனஈர்ப்பு வெற்று நடவடிக்கைகளும் கட்சிக்குள் இருக்கும் பதவி வேட்டைக்காரர்களின் கலகங்களும் பிற்போக்குச் சிந்தனையாளர்களான தலைவர்கள் சிலரின் கருத்துரைகளும் ஓர் அரசியல் கட்சியை நடத்த ஊழல் ஒழிப்பு என்னும் ஒற்றைச் செயற்றிட்டம் மட்டும் போதாது; சிந்தாந்த அடிப்படையிலான தொலைநோக்கும் அதனை அடைவதற்கான நிறுவன அமைப்பும் தேவை என்பதனை எடுத்து உரைக்கின்றன. தம்மை ஊழலுக்கு எதிரானவர்களாகக் காட்டிக்கொள்ளும் ஆம் ஆத்மிகளின் அரசியல் சிந்தாந்தம் தெளிவற்றதாக இருக்கிறது. அவர்கள் “மகாத்துமா காந்திக்கு ஜே” என்னும் முழக்கமிட்டும் மராட்டிய குல்லாயை அணிந்தும் தங்களை காந்தியவாணர்கள் எனக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள். ஆனால் காந்தியத்தின் அடிப்படைக் கேட்பாடுகளான சிற்றூர் மைய தற்சார்புப் பொருளாதாரம், அதிகாரப் பரவல், கதர் – கிராம தொழில்நுட்ப மேம்பாடு, மதநல்லிணக்கம் ஆகியன போன்றவற்றில் அவர்களுடைய நிலைப்பாடு என்னவென்பது இதுவரை தெளிவாகவில்லை. காசுமீர் பிரச்சனைக்கான அணுகுமுறையில் அவர்களுக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லை என்பதனை பிரசாந்த் பூசன், அரவிந்த கெசுரிவால் இருவரின் கூற்றுகளுமே எடுத்துரைத்துவிட்டன. சாதியம், இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலம், பெண்ணுரிமை, குழந்தைகள் உரிமை, அணுக்கொள்கை, உலகமயமாக்கம் ஆகியவன் போன்றவற்றில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை அவர்கள் வெளியிடவில்லை. இவைகளைப் போன்ற கொள்கைசார் பிரச்சனைப் பற்றிப் பேசுவதே அரசியல் ஆகும். ஊழல் ஒழிப்பு ஒரு செயற்றிட்டமே; ஒரு செயற்றிட்டமே அரசியல் ஆகாது என்பதனை ஆம் ஆத்மிகள் உணர வேண்டும்.
சொல் ஒன்றும் செயல் ஒன்றும்
இன்றைய அரசியல்வாணர்களுக்கு சொல் ஒன்றாகவும் செயல் வேறொன்றாகவும் இருக்கிறது என்பதுதான் ஆம் ஆத்மிகளின் குற்றச்சாட்டு. அப்படியானால் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்கிறார்களா என்னும் கேள்வி எழுகிறது. அரசு ஊழியர்கள் தம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்னும் அவர்களது கூற்று வரவேற்கத்தக்கது. அதேவேளையில் ஆம் ஆத்மி தலைவர்கள் தம் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்களா? குறிப்பாக அரவிந்த் கெசுரிவால் அரசு அதிகாரியாக இருந்தபொழுது தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைத்தாரா? இப்பொழுதும் அவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்களா? என்னும் வினாகள் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு (ஆம் ஆத்மிகளுக்கு) எழுகின்றன. அதற்கு விடைகூற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.
பதவி வேட்கையால் கலகம் செய்கிறார் எனக் குற்றம்சாட்டிற்கு உள்ளாகி இருப்பவர் வினோத் பின்னி. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்; ஆனால் இது கட்சியின் விதிகளுக்கு எதிரானது என ஆம் ஆத்மிகள் கூறுகிறார்கள். ஆனால் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அரவிந்த் கெசுரிவால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இடுவார் என அறிவிக்கிறார்கள். இவ்வாறு ஆளுக்கு ஏற்ப கட்சியின் விதிகளை மாற்றும் அல்லது வளைக்கும் முரண்பாடு ஆம் ஆத்மிகள் மாற்று அரசியல்வாணர்கள் அல்லர்; சொல் ஒன்றும் செயல் ஒன்றாகவும் வாழும் புதிய அரசியல்வாணர்களே என்பதனைத் தெளிவுபடுத்துகிறது.
வெற்று வேடங்கள்
வெற்று கவனஈர்ப்பு நடவடிக்கைகள் (Stunt) அரசியலரங்கில் விரைவில் பொருளற்றவைகளாக மாறிவிடுகின்றன. அத்தகு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கோமாளிகளாகத் தம்மைத்தாமே ஆக்கிக்கொள்கிறார்கள். அப்பொழுது அந்தப் பணியை ஆம் ஆத்மிகள் “மிகச் சிறப்பாக”ச் செய்துகொண்டு இருக்கிறார்கள். பதவியேற்பு நாளில் புதைதொடர்வண்டியில் (Metro Train) வந்தது; அரசு வீடு வேண்டா, அரசு வண்டிகள் வேண்டா என முதலில் கூறிவிட்டு பின்னர் அவற்றை வேண்டிப்பெற்றது என அவர்களது வெற்று வேடங்கள் வெளிப்படுகின்றன.
இலக்கற்ற ஏவுகணைகள்
அரசியல்வானில் சுடர்விட நினைப்பவர்களுக்கு தமது நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதனைச் செயற்படுத்துவதற்குப் பொருத்தமான உத்தியைத் தேர்ந்தெடுத்துச் செயற்படுத்த முடியும். இந்திய விடுதலைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற சோசலிசக் குடியரசுகளைக் கொண்ட ஒன்றியமாக விடுதலைபெற்ற இந்திய ஒன்றியம் அமையும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை அமல்படுத்தக் கோரித்தான் இந்தியா விடுதலைபெற்ற நாள் முதலே ம. பொ.சி. தன்னுடைய தமிழரசுக் கழகத்தின் வழியாகப் போராடினார். திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட தி.மு.க. மாநிலத் தன்னாட்சி என்னும் புதிய பெயரில் அக்கருத்தை சாரமற்ற வடிவில் தூக்கிப் பிடித்தது; இப்பொழுதும் தேவைப்படும்பொழுது பயன்படுத்திக் கொள்கிறது. மாநிலத் தன்னாட்சி என்னும் அக்கருத்தாக்கத்தின் அடிப்படை நோக்கம் ஒன்றிய அரசில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே ஆகும். அக்கருத்தாக்கத்தை பொது அரங்கில் விவாதப் பொருளாக மாற்றுவதற்கான அருமையான வாய்ப்பு, ‘தில்லி நகர காவல் துறை யாருடைய அதிகாரத்திற்கு உட்பட்டது?’ என்னும் சிக்கலில் உருவானது. அரவிந்த் கெசுரிவாலுக்கு மாநில தன்னாட்சி என்னும் அரசியற்கோட்பாட்டு நோக்கம் இல்லை; அதனால் தில்லி காவல்துறை தில்லி ஒன்றியப்பரவின் அரசுக்குக் கட்டுப்பட்டது என்னும் எதிர்நோக்கிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. எனவேதான் அவ்வாய்ப்பை போராட்டம் நடத்தி தன்னை விளம்பரம் செய்துகொள்ளல் அவர் பயன்படுத்தினார். அதன் விளைவு, அவரது அரசியல் அறிவின் அளவு அம்பலப்பட்டுவிட்டது. அவரது முயற்சிகள் இலக்கற்ற ஏவுகணைகளாக பாய்ந்து விழுந்தன.
ஐயத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்
ஊழலுக்கு எதிராகக் களமாடுபவர்கள், ‘சீசரின் மனைவி ஐயத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்’ என்பதைப் போல, தாம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதனை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தாமும் தாம் சார்ந்திருக்கும் நிறுவனங்களும் அமைப்புகளும் கையாளும் நிதியை பற்றிய தகவல்களை வெளிப்படைத்தன்மையைக் கொண்டவைகளாக ஆக்க வேண்டும். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்னால், அரவிந்த் கெசுரிவால் அரசின் செயற்பாட்டில், குறிப்பாக நிதிப் பயன்பாட்டில், வெளிப்படைத்தன்மையை கோரிப்பெறும் தகவல் உரிமைச் சட்டச் செயற்பாட்டாளராக விளங்கி விருது பெற்றவர். ஆனால் அவரது நிறுவனத்தின் நிதிக்கணக்குகளின் வெளிப்படைத்தன்மை பற்றி அண்ணா கசாரேயின் போராட்டத்திற்கு முன்னும் பின்னும் வினாகள் எழுந்தவண்ணம் இருந்தன. அந்த வினாகளுக்கு இன்றுவரை அவர் தெளிவான விடைகளை அளித்ததாகத் தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்காக தொடர்ந்து வெளிநாட்டில் நிதி திரட்டப்படுகிறது. யார் எவ்வளவு நிதியை அக்கட்சியை அளித்திருக்கிறார்கள் என்னும் தகவல் அக்கட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் இவ்வாறு பெருமளவு நிதியைத் திரட்டுவதற்கான நோக்கமும் அதனைச் செலவிடுவதற்கான செயற்றிட்டமும் அங்கு காணப்படவில்லை. அல்லரசு அமைப்புகள் (Non – Government Organizations) சில தாம் களத்தில் அதுவரை ஆற்றிய பணியை எடுத்துரைத்து நிதி திரட்டுவதைப்போல இச்செயல் இருக்கிறது. இவை ஆம் ஆத்மிகளின் நோக்கத்தையே ஐயத்திற்கு உரியதாக மாற்றுகின்றன.
எனவே, இந்திய முதலாளிகள் சுதந்திரா என்னும் கட்சியை வளர்த்தெடுத்ததைப் போல, இந்துமத வெறியர்கள் பாரதிய சனதா என்னும் கட்சியை முன் நிறுத்துவதைப்போல, அரசியல் தெளிவற்ற அல்லரசு அமைப்புகள் சில ஆம் ஆத்மியை வளர்த்தெடுக்கின்றனவோ என்னும் ஐயம் தோன்றுகிறது. இந்த ஐயத்தை நீக்கவும் தமக்கும் அரசியல் சித்தாந்தம் உண்டு என மெய்ப்பிக்கவும் தாம் சொல்வீரர்கள் அல்லர்; செயல்வீரர்கள் என வாழ்ந்துகாட்டவும் வேண்டிய கட்டாயம் ஆம் ஆத்மிகளுக்கு இருக்கு நேர்ந்திருக்கிறது. ஆம்! இந்த யானைப் பாகர்கள் தாம் வெற்றிகரமான யானைகளே என மெய்ப்பிக்க வேண்டிய நெருக்கடியில் நிற்கிறார்கள். மெய்ப்பித்தால் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது; தவறினால் கால ஏட்டில் எழுதப்பட்ட ஒற்றை வரியில் அவர்களது வரலாறு முடிந்துவிடும். ஒளிமயமான எதிர்காலமா? ஒற்றைவரி வரலாறா? என்னும் இரண்டு வாய்ப்புகளில் தமக்குத் தேவையான ஒன்றை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இப்புது அரசியல்வாணர்கள் மாற்று அரசியல்வாணர்களாக மாறினால் அவர்களை ஏற்கவும் மாறவில்லை என்றால் மறுதலிக்கவும் சாமானிய மக்களான நமக்கு உரிமை இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
கலகத் தமிழிசைக் கலைஞர்
கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...
-
இன்றைக்கு சுஜாதாவிற்கு நினைவுநாளாம். யாரோ ஒரு நண்பர் என்னையும் சுஜாதாவின் புகழ்பாடும் “ எழுத்தாளர் சுஜாதாவின் விசிறிகள் குழு ” என்னும் முக...
-
சின்னையில் பிறந்து, வதிலையில் வளர்ந்து, மதுரையில் பயின்று, சென்னையில் சிறந்தவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா. இவர் மதுரை ...
-
தேனி வரசக்தி விநாயகர் கோவிலில் ஒவ்வோராண்டும் நவராத்திரி கலை இலக்கிய விழாவாகக் கொண்டாடப்படும். இவ்விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை வந்திர...
No comments:
Post a Comment