சாதி என்னும் சொல், ‘பிரிவு’
என்னும் பொருளில் ‘நீர்வாழ் சாதியுள் அறுபிறப்புரிய’ என்றும் ‘நீர்வாழ் சாதியுள் நத்தும்
நாகே’ என்றும் தொல்காப்பியத்தின் மரபியலில் ஆளப்பட்டு இருக்கிறது. அதற்குப் பின்னர்
அச்சொல், குலத்தூய்மையை காக்கும்/சுட்டும் சொல்லாகவே பன்னெடுங் காலமாகக் கருத்தப்பட்டு
வந்திருக்கிறது. எனவேதான் இருவேறு குலப்பிரிவிற் பிறந்த இருவருக்கு இடையே நிகழ்ந்த/நிகழும்
திருமணமானது குலத்தூய்மையற்ற திருமணம் என்னும் பொருளில் ‘கலப்புத் திருமணம்’ எனச் சுட்டப்படுகிறது. பிறப்பு, அகமணம், உணவுப் பழக்கம், தொழில், படிநிலை
அமைப்பு, அதிகாரம் ஆகிய ஆறு கூறுகளின் மீது சாதி கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்கின்றனர்
மாந்தரியலாளர்கள். இறுகிய இந்தக் கட்டமைப்பானது
இன ஆதிக்கம், போரில் வென்றவரின் ஆதிக்கம், மத ஆளுகை, தொழிற்பிரிவு, குலத்தேய்வு, படிமலர்ச்சி
என்பனவற்றுள் ஏதேனுமொரு கோட்பாட்டின் அடிப்படையில் அல்லது அவற்றுள் சிலவற்றின் இணைவில்
தோன்றியிருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது.
சாதிய அமைப்பு |
இவ்வாறு தோன்றுவிக்கப்பட்ட
பல்வேறு சாதிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அவற்றின் உச்சத்தில் பார்ப்பன சாதியை
இருத்தி சாதிய அடுக்குமுறை வகுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அடுக்குமுறையில் உள்ள சாதிகள்
ஒன்றொடு ஒன்று கலந்துவிடுவதைத் தடுக்கும் நோக்கில் தீண்டாமை என்னும் கொடுங்கருத்து
திணிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அமைப்பு முறை குலைந்துவிடாமல் நீடித்துநிலைபெற, சாத்திரங்கள்
வகுக்கப்பட்டு இருக்கின்றன. இச்சிந்தனை மரபிற்கு
வைதிகம் என்று பெயர். இவ்வைதிகம் அரசு ஆதரவு,
மதச் செல்வாக்கு, நிறுவனக் கட்டமைப்பு, செல்வப் பெருக்கு உள்ளிட பல்வேறு காரணிகளால்
தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. இதனால் இதன் உட்கிடையான சாதியமும் நிலைபேறடைந்தது.
<
எனினும் சாதியத்தையும்
அதனைக் காக்கும் வைதிகத்தையும் தகர்க்கும் முயற்சிகள் அவை முளைவிட்ட காலந்தொட்ட நிகழ்ந்து
வருகின்றன. கிறித்து பிறப்பதற்கு முன்னரே பெளத்தமும் சமணமும் இம்முயற்சியில் ஈடுபட்டன.
அவற்றிற்கு முன்னும் பின்னுமாக தோன்றிய, கடவுளை மறுத்த அல்லது கடவுளைப் பற்றிப் பேசாத,
பல்வேறு சிந்தனை மரபுகள் வைதிகத்தின் இருப்பை வினவிற்கு உட்படுத்தின. இங்ஙனம் எழும் வைதிக எதிர்ப்பு நெருப்பை அணைப்பதற்காக
இடையிடையே இராமானுசரைப் போன்ற மதச் சீர்திருத்தக்காரர்கள் தோன்றி மறைந்தார்கள். ‘சாதி சமயச் சழக்கை விட்டேன் அருட்சோதியைக் கண்டேனடி
அக்கச்சி சோதியைக் கண்டேனடி’ எனப் பாடி சாதியை மறுத்து ஆதனியப் புரட்சியில் ஈடுபட்ட
வள்ளலார் என்னும் மருதூர் இராமலிங்கரைப் போன்றவர்கள் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டு
மறைந்தார்கள். இவ்வாறான எதிர்ப்பு, சீர்திருத்தம், மறுப்பு என்னும் பல்வேறு தடைகளைத்
தாண்டி, சாதி இன்று வரை உயிர்ப்போடு இருக்கிறது. இது எங்ஙனம் நிகழ்கிறது?
<
குலத்தூய்மைக்கு வாயிலாகக்
கருதப்படும் சாதியானது உணவு, திருமணம், தொழில் ஆகிய மூக்கூறுகளிலும் உயிர்ப்போடிருக்கிறது;
வாய்ப்புக் கிடைக்கும்பொழுது வெளிப்படுகிறது என்கின்றனர் குமுகாயவியலாளர்கள். எனவேதான் அனைவரும் பொதுவிடத்திற் கூடி உண்ணுதல்,
சாதி கடந்த திருமணங்கள், குலத்தொழில் முறையை மாற்றி பட்டம்/பயிற்சித் தொழில் முறை என்பன
சாதியொழிப்பிற்கான முயற்சிகளாக முன்னெடுக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் அம்முயற்சிகள் பெரும் எதிர்ப்பிற்கு
உள்ளாகின்றன அல்லது நீர்த்துப்போன சடங்குகளாக கொண்டாடப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, உணவை
ஆக்குவதிலும் அதனைச் சேர்ந்து உண்பதிலும் இருக்கும் சாதியப் பாகுபாட்டை உடைக்கும் முயற்சியாக
‘சமபந்தி போஜனம்’ என்னும் பொதுவிடத்தில் அனைவரும் கூடி உண்ணும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன;
நடத்தப்படுகின்றன. ஆனால், சாதியக் காப்பாளர்கள் அதனை ஒரு கொண்டாட்டமாக மாற்றி, சாதியப்
படிநிலையில் கீழடுக்கில் இருத்தப்பட்டவர்களால் ஆக்கப்பட்ட உணவை உண்பதைத் தவிர்த்து,
மேலடுக்கிலோ இடையடுக்கிலோ இருப்பவர்களால் ஆக்கப்பட்ட உணவை அனைவரும் பகிர்ந்துண்ண வழங்கி
அதன் நோக்கத்தை சிதறடிக்கிறார்கள். இந்துத்துவர்களால்
புரட்சித்துறவி என்ன பட்டம்சூட்டப்படும் விவேகானந்தரோ, எல்லா சாதியினரும் புலாலுண்பதை
கைவிட்டு, பூணூலணிந்து, காயத்திரி மந்திரம் கூறினால் பார்ப்பனராகிவிடலாம் என்கிறார்.
இதனை சி. சுப்பிரமணிய பாரதி தனது “ஜாதிக்குழப்பம்” என்னும் கட்டுரையில் வழிமொழிகிறார். இதனைத்தான் இன்றைய இந்துத்துவ அமைப்புகளும் காவி
அரசும் வெவ்வேறு வடிவங்களிற் கூறுகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் அனைவரையும் சமமாகக்
கருதும் புரட்சிகரமான திட்டமாக இது தோன்றம் தரும். ஆனால் இதன் உட்கிடை, புலாலுண்பவர்கள்
சாதியப் படிநிலை அமைப்பில் கீழானவர்களே என்பதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அவர்களின்
உணவு இறையாண்மையை (Food Sovereignty) தகர்ப்பதே
ஆகும்.
மெக்காலே கல்விமுறையால்
தொழில்வழி சாதியம் தகர்ந்துவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகி இருக்கிறது. அதில் ஓரளவு
உண்மையும் இருக்கிறது. ஆனால் கோயிற்கருவறைக்குள் நுழைந்து ஆற்றும் பூசைத் தொழிலும்
கழிவறைகளையும் கழிவோடைகளையும் தூய்மை செய்யும் தொழிலும் இன்றைக்கும் சாதியின் அடிப்படையில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
பூசைத்தொழிலை குறிப்பிட்ட கல்வித்தகுதி பெற்ற எந்தச் சாதியினரும் மேற்கொள்ளலாம் என
சட்டம் இருக்கிறது; அதன்படி பயிற்சிபெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவருக்குக்
கூட பூசகர் பணி இன்று வரை வழங்கப்படவில்லை; அதற்கு அவர்கள் பிறந்த சாதி தடையாக இருக்கிறது!
1929ஆம் ஆண்டில் செங்கற்பட்டில்
நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில், “மக்கள் தங்கள் பெயரோடு சாதி அல்லது வகுப்பைக்
காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டும்” என்பது உள்ளிட்ட சாதி
மறுப்பு முடிவுகளை எடுத்து அவற்றைத் தமிழகமெங்கும் பரப்புரை செய்ததன் விளைவாக சாதியக்
கட்டமைப்பில் பல்வேறு உடைப்புகள் உண்டாயின.
குறிப்பாக சாதி மறுப்புத் திருமணங்களும் சாதி கடந்த திருமணங்களும் நிகழ்ந்தன.
அவற்றுள் பெரும்பான்மையான திருமணங்கள், சாதிய அமைப்பில் இடைநிலையில் உள்ளவர்களுக்கு
இடையேயும் மேல்நிலையில் உள்ளவர்களுக்கும் இடைநிலையில்
உள்ளவர்களுக்கும் இடையிலும் நடைபெற்றன. அங்ஙனம் மணமுடித்தோரில் பெரும்பாலோர் அந்தந்த
சாதியினரால் விலக்கி வைக்கப்பட்டனர்; வெறுத்து ஒதுக்கப்பட்டனர். ஆனால் அண்மைக் காலத்தில்
முதல் அல்லது இரண்டாம் தலைமுறையாகக் கல்வி பெற்று, பொருளாதாரத்தில் இடைநிலையை எட்டிப்பிடிக்கிற
சாதிப் படிநிலையில் கீழ்த்தட்டில் இருப்பவர்கள் சாதியை மறுத்தோ, சாதியைக் கடந்தோ திருமணம்
செய்கிறபொழுது சாதியக் கலவரங்கள் வெடிக்கின்றன; சாதியமைப்பில் கீழ்த்தட்டில் இருப்பவர்கள்
கொலை செய்யப்படுகின்றனர்; அவர்களின் தலைகள் துண்டிக்கப்படுகின்றன. இங்ஙனம் சாதி சாகாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?
உண்மையில் ‘சாதி’ ஓர்
இயற்பொருளன்று; ஒரு மனப்பாங்கு. இந்த மனப்பாங்கு இந்தியத் துணைக்கண்டத்தில் பிறந்த
ஒவ்வொருவரின் ஆழ்மனதிற்குள்ளும் பதியனிடப்பட்டு இருக்கிறது. இது தலைமுறை தலைமுறையாக மரபு, பண்பாடு, பெருமிதம்,
குல அடையாளம், வழிபாடு என்னும் பல்வேறு மேற்பூச்சுகளோடு கடத்தி வரப்பட்டு இருக்கிறது.
இதனால்தான் இந்திய துணைக்கண்டத்திற்குள் நுழைந்த கிறித்துவம், இசுலாம் உள்ளிட்ட எல்லா
மதங்களையும் சாதி ஆரத் தழுவிக்கொள்கிறது.
சாதி எதிர்ப்பாளர்கள், சாதி மறுப்பாளர்கள் மனங்களிலும்கூட அவற்றின் எச்சம் இருந்துகொண்டே
இருக்கிறது. இக்கட்டான சில சூழல்களில் அது தன்னுடைய தலையைத் தூக்கி எழுகிறது; அதனை
உடனே கண்டுணர்ந்து நசுக்கும் பொழுது அடங்கியொடுங்கி அடுத்த வாய்ப்பிற்காகக் காத்துக்கொண்டு
இருக்கிறது. இது இன்றைய காலகட்டத்தில், ‘சாதி
அடையாளம், சாதி உணர்வு, சாதி வெறி’ என்னும் மூன்று வகைப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
‘எனக்கென ஒரு சாதி அடையாளம் இருக்கிறது அதன் கட்டுதிட்டங்களுக்கு ஏற்ப நான் வாழ்வேன்.
அதனை இயன்ற வரை காக்க முயல்வேன். எனது கையை மீறிப்போகிற பொழுது செயலற்று இருந்துவிடுவேன்’
என்பது சாதி அடையாளம் என்னும் முதல் வகை.
‘சாதி எனது அடையாளம்; அது எனக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. எனவே அதனைப்
பாதுகாப்பது எனது கடமை’ என்பது சாதி உணர்வு என்னும் இரண்டாம் வகை. சாதி அடையாளம், பெருமிதம்
என்னும் உணர்வை முன்னிரு வகையினரின் மனதில் தொடர்ந்து ஊதிப்பெருக்கி அதன் வழியாக தன்னுடைய
செல்வாக்கை, புகழை, ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள முனைதல் என்பது சாதிவெறி என்னும்
மூன்றாம் வகை. கூர்ந்து நோக்கினால் இம்மூன்று வகையான மனநிலைக்கும் அடித்தளமாக அவர்தம்
தாழ்வுமனப்பான்மை அமைந்திருக்கிறது. இத்தாழ்வுமனப்பான்மையானது
மூன்றாம் வகையினரிடம் உயர்வுமனப்பான்மையாக வெளிப்படுகிறது.
எனவே, சாதி ஒழிய வேண்டுமென
விரும்புகிற ஒவ்வொருவரும் அவ்வொழிப்பு வேலையை முதலில் தம்முடைய மனத்திற்குள் இருந்தே
தொடங்க வேண்டியிருக்கிறது. இரண்டாவதாக, புதுமைப்பித்தன்
வேலா.இராமமூர்த்தி, பெரியாரியர்கள், பொதுவுடைமையாளர்கள் ஆகியோரைப் போன்று தன்சாதி விமர்சனத்தை
மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு இப்பாதையில்
தொடர்ந்து பயணிக்கிற பொழுதே நாம் நம்முடைய சாதியினைத் துறந்து மாந்தர்களாக வாழ முடியும்;
ஞால மாந்தர்களாக மலர முடியும். சுருங்கச் சொன்னால்,
“சாதியினால் மானிடர்க்குக்
கலக முண்டாம்
கலகத்தால் மானுடர்க்குக் கவலை பெருகும்
சாதியினால் மானிடர்க்குச்
சாவு முண்டாம்
சதிகளுண்டாம் தற்கொலைமுதற் கொலைக ளுண்டாம்
ஆதலினால் சாதியினைத் துறப்பீர்
உலகத்தீரே
அத்தொன்றே நீங்களுய்ய வழியாம்
சாதியினால் சகலரு மொழியக்
கூடும்
சாதியினைக் கொன்றால்தான் மனிதம் வாழும்!”
இவ்வளவு சாதிப்பாகுபாடா ஐயா.? இதை படித்து மலைத்துவிட்டேன்.அதன் தொடர்ச்சியோ என்னவோ இன்றும் நம் நாட்டில் சமயவெறி காணப்படுகிறது..அருமையான செய்தி ஐயா..
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கள்..