பெயர்

எனதென்பது எனதில்லை
என்றன் பெற்றோடுடையது
என்றன் நண்பருடையது
என்னுடையதெல்லாம்
என்பிள்ளைகள் முகமாய்

அவரவர் உடையதை
அவரவர் சுமக்க
ஆவதில்லை இங்கு

யாராருடையதையோ தூக்கியெறிந்து
என்னுடையதை மட்டும் ஏற்கலாமென்றால்
இறுதி வரைக்கும்
யாருடையதோ
என்னுடையதாய்

விசிறி விசிறி விரட்டினாலும்
காதுக்கருகில்
மீண்டும் மீண்டும்
ரீங்காரமிடும் கொசுவைப்போல
பழையதே வந்து நிற்கிறது
நானாய்
எனதாய்

உதறிய பின்னும் விலக மறுக்கும்
இத்திணிப்பை என்ன செய்யலாம்?

தொடர்பில்லையென்று தண்டோரப்போட்டால்
விலகுமென்றனர் சிலர்
இதுதான் நானெனத்
தாளிகை விளம்பரம் தாவென்றனர் பலர்
இரண்டும் செய்தேன்
எதுவும் பயனில்லை

என்ன செய்தால் தகுமென எண்ணிக்கிடக்கையில்
நீ
நீயாகு முன்னர்
நான்
நானாக விடு
எல்லாம் சரியாகுமென்றனர்
மகளும் மகனும்

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...