நன்றி: http://www.azernews.az |
“என் பிள்ளையிடம்
பேசி அவனைக் கொஞ்சம் மாற்ற முடியுமா?” என இறுகிய முகத்தோடு அவர் வேண்டினார்.
“ஏன்? அவன்
செய்கிறான்?” என வினவினார் அந்த உளவியல் ஆற்றுப்படுத்துநர்.
“எல்லாவற்றிற்கும்
அடம்பிடிக்கிறான்?”
“நேற்று எதற்கு
அடம்பிடித்தான்?”
“நேற்று மட்டுமில்லை,
எப்பொழுதும் தொலைக்காட்சியின் தொலையியக்கியை அவனே வைத்துக்கொள்கிறான். ஒன்று மாற்றி
ஒன்று என குழந்தைகளுக்கான படங்களையே பார்த்துக்கொண்டு இருக்கிறான். மற்றவர்களை அதனைத்
தொடக்கூட அனுமதிப்பதில்லை”
“அவன் குழந்தைகளுக்கான
படங்களைப் பார்ப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல்?”
“அதில் வரும்
ஏதேனும் ஒரு கதைமாந்தராக தன்னை நினைத்துக்கொண்டு, அதேபோல பேசுகிறான்; சண்டை போடுகிறான்;
மற்றவர்களை அடிக்கிறான்.”
“அதில் உங்களுக்கு
என்ன சிக்கல்?”
“இப்படியே
போனால், அவன் தொலைக்காட்சிக்கு அடிமையாகி படிக்காமல் போய்விடுவானோ என அச்சமாக இருக்கிறது;
முரடனாக வளர்கிறானோ என கவலையாக இருக்கிறது.”
இந்த அச்சமும்
கவலையும் இன்றைக்கு பெரும்பாலான இந்தியப் பெற்றோர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றன; குறிப்பாக, தம் குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக
வரவேண்டும், அக்குழந்தை மீது தாம் இப்பொழுது இடும் முதலீடு பின்னாளில் பெரும்பயனை தமக்குத்
தரவேண்டும் எனக் கருதும் நடுத்தர பொருளாதாரக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு
மிக அதிகமாக ஏற்பட்டு இருக்கின்றன. அவற்றை
அதிகப்படுத்தும் வகையில், அறிவியற்றொழில்நுட்பக்
கொடையால் தகவற்றொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள பெரும்மாற்றத்தைப் பயன்படுத்தி,
குழந்தைகளுக்கான அசைவுரு படத் தொடர்கள் (Animation) 24
மணிநேரமும் வெவ்வேறு தொலைக்காட்சி வழங்கல்களில் காணொலிபரப்பப்படுகின்றன. கூட்டுடலுழைப்பின்
தேவையைப் பெருமளவு கோரும் வேளாண்மைத் தொழிலில் இருந்து பெரும்பாலான நடுத்தர
பொருளாதாரக் குடும்பங்கள் வணிகத்திற்கும் வெள்ளுடை வேலைகளுக்கும்
நகர்ந்துவிட்டதால், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக் குடும்பங்கள்
பெருகிவிட்டன. இதனால் குழந்தைகளுக்குக் கதைசொல்லும் முதியவர்களின் இருப்பு
வீடுகளில் குன்றிவிட்டது. மக்கள்தொகைப் பெருக்கக் கட்டுப்பாடு, பேருருக்கொண்டு
எழுந்து பொருளாதாரச் சுமை ஆகியவற்றால் ஒற்றைக் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின்
எண்ணிக்கை பெருகிவிட்டது. இதன் விளைவாக கதைபேசவும் கூடிவிளையாடவும் தோழர்கள் அற்ற
குழந்தைகள் பலர் தொலைக்காட்சியின் அசைவுரு படத் தொடர்களுக்கு அடிமையாகி
கிடக்கிறார்கள்.
இச்சூழலைப்
பயன்படுத்தி ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு என்னும் கருத்தாக்கத்தை
குழந்தைகளின் மனதில் அவர்களும் அவர்தம் பெற்றோர்களும் அறியாத வகையில் விதைப்பதற்கு
ஏற்ற அசைவுரு படத்தொடர்கள் உருவாக்கப்படுகின்றன; கதைமாந்தர்கள்
தோற்றுவிக்கப்படுகிறார்கள். தமக்கான
சிறந்த முன்மாதிரிகளை தம் இல்லங்களில் இழந்துவிட்ட குழந்தைகள் அப்படத் தொடர்களில்
வரும் கதைமாந்தர்களையே தம் முன்மாதிரிகளாகக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அதன்விளைவாக அத்தொலைக்காட்சிக் கதைமாந்தர்களின்
உருவங்களைக் கொண்ட வண்ணம்தீட்டும் புத்தகங்கள் சந்தையில் பெருகிக் கிடக்கின்றன.
அவற்றின் நுகர்வோராக மாறிவிட்ட குழந்தைகள் முரடர்களாக மட்டுமன்று, கருத்தியல்
அடிமைகளாகவும் அவர்களை அறியாமலேயே உருவாகி வருகிறார்கள்.
இச்சூழலை
மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது தமிழ் குழந்தை இலக்கியச்
சூழல். 1901ஆம் ஆண்டில் கவிமணி
தேசிகவிநாயகனாரால் தொடங்கி வைக்கப்பட்ட குழந்தைப் பாடல்கள் என்னும் இலக்கியத்துறையானது
இயற்கை, உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பாடும் வாய்பாட்டிற்குள் முடங்கிவிட்டது.
நூல்களும் செய்தித்தாள்களும் (பொது நூலகங்களுக்கு) வழங்கல் சட்டம், 1954 (The Delivery of
Books and Newspapers (Public Libraries) Act, 1954) என்னும் சட்டத்தின் கீழ் சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு வழங்கப்படும்
நூல்களில், குழந்தை இலக்கிய நூல்களைப் பற்றிய அடைவை ‘தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை’
என ஆண்டுதோறும் வெளியிடும் அளவிற்கு இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான நூல்கள், 1980ஆம்
ஆண்டிற்குப் பின்னர் பெருக்கெடுக்கவில்லை. வெளிவரும் நூல்களிற் பல குழந்தைகளின் அகவுலகத்தை
அறிந்து, அதற்கேற்ப எழுதப்பட்டவையாக இல்லை. அதன்விளைவாக அந்நூல்கள் குழந்தைகளை ஆர்வத்தோடு
படிக்கத் தூண்டுபவைகளாக இல்லை; அவை அறிவுரைகளும் தகவல்களும் நிரம்பியவைகளாகவே
இருக்கின்றன.
தமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகைகள் 1964 / 1966 |
குழந்தைகளுக்கான
இதழ்களின் எண்ணிக்கையோ கைவிரல்களின் எண்ணிக்கை அளவிற்கு குறைந்துவிட்டது. 1950 முதல் 1980 வரை ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’
என ஒன்றை உருவாக்கவும் அதன் சார்பில் ‘குழந்தை எழுத்தாளர் யார்? எவர்?’ என
படைப்பாளர் அடைவு வெளியிடும் அளவிற்கு பெருகியிருந்த குழந்தை இலக்கியப்
படைப்பாளிகளின் எண்ணிக்கை பெருமளவு மெலிந்துவிட்டது. இருக்கும் படைப்பாளிகளில் பலரும் பழைய
பாடல்களையும் நூல்களையும் பார்த்துப் ‘போலச் செய்பவர்’களாக இருக்கிறார்களே ஒழிய
புதியன புனைபவர்களாக, குழந்தைகளின் அகவுலகத்தை அறிந்து அவருள்
அரும்பிக்கொண்டிருக்கும் ஆற்றல் மலர்களுக்கு எழிலூட்டும் படைப்புகளை
இயற்றுபவர்களாக இல்லை.
தமிழ்நாட்டரசின் கல்வித்துறை நடத்திய போட்டியில் முதற்பரிசை வென்ற நூல் |
“குழந்தைகள்
நாட்டின் வளரும் செல்வங்கள். அவர்கள் உடலால் மட்டும் வளர்பவர்களா? இல்லை; அறிவு
ஆற்றலிலும் வளர்பவர்கள். ஆகவே வெறும் பாட நூல்களோடு நில்லாது, பல நூல்களையும்
படிக்க வேண்டும். அதற்காகக் குழந்தை இலக்கியத்தைப் பெருக்க வேண்டும்” என்னும்
நோக்கத்தோடு குழந்தை இலக்கியப் போட்டி நடத்தி அதில் முதற்பரிசு வெற்றி பெற்ற “பூச்சி
வாழ்க்கை” என்னும் குழந்தைகளுக்கான அறிவியல் நூலை படங்களோடு அழகுற அச்சிட்டு
1950களில் வெளியிட்ட தமிழ்நாட்டரசின் கல்வித் துறையோ, தற்பொழுது மதிப்பெண்
வேட்டைக்காரர்களாக மாணவர்களை மாற்றிக்கொண்டு இருக்கிறது.
“குழந்தைகள்
இலக்கியத்தை மேம்படுத்தல்” என்பதை தன்னுடைய ஐம்பெரும் நோக்கங்களில் ஒன்றாகக்கொண்ட,
இந்திய ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி
அமைப்பான இந்திய தேசிய நூல் அறக்கட்டளையைப் (National Book Trust, India) போன்ற ஓரமைப்பு இதுவரை தமிழ்நாட்டரசால் உருவாக்கப்படவில்லை. தி. சு. அவினாசிலிங்கனாரால் உருவாக்கப்பட்ட
தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட குழந்தைகள் கலைக்களஞ்சியம் நெ.து.சுந்தரவடிவேலு
பொதுக்கல்வித் துறை நெறியாளராக இருந்தபொழுது வெளியிட்ட ஓரிரு நூல்களைத் தவிர குழந்தை இலக்கிய நூல்கள் எதனையும் தமிழ்நாட்டரசு
வெளியிட்டதாகத் தெரியவில்லை.
தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட மழலைத் தளிர்கள் என்னும் நூல் |
இந்திய
ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மைசூர் நகரில் இயங்கும்
இந்திய மொழிகள் நடுவண் நிறுவம் வழங்கிய நிதியுதவியால் தஞ்சாவூர் தமிழ்ப்
பல்கலைக்கழகம் “மழலையர் பாடல் இயற்றும் செயலரங்கு” ஒன்றினை 1994 செப்டம்பர்
திங்களில் ஒருங்கிணைத்து, அதில் இயற்றப்பட்ட 408 பாடல்களை 53 பிழைத்திருத்தங்களோடு
“மழலைத் தளிர்கள்” என்னும் நூலை வெளியிட்டது. இந்த நூலைத் தவிர வேறு எந்த குழந்தை
இலக்கிய நூலையும் தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்தப் பல்கலைக்கழகமும் வெளியிட்டதாகத்
தெரிவியவில்லை.
நேரு குழந்தைகள் புத்தகாலய வரிசை நூல்களில் சில |
இந்திய
தேசிய நூல் அறக்கட்டளை வெளியிடும் “நேரு குழந்தைகள் புத்தகாலயம்” வரிசை நூல்களிலோ
பெரும்பாலானவை மொழிபெயர்ப்பு நூல்களாகவே இருக்கின்றன. இராசம் கிருட்டிணன், வல்லிக்கண்ணன், தங்கமணி,
அழ. வள்ளியப்பா, கி. ராஜநாராயணன்
ஆகியோரைப் போன்ற சிலர் எழுதிய மிகச் சில நூல்களே தமிழில் நேரடியாக
எழுதப்பட்ட நூல்களாக இருக்கின்றன. இதனால் அதைக் கதைமாந்தர்களின் பெயரும்
நிகழிடமும் பண்பாடும் தமிழகக் குழந்தைகளின் மனதிற்கு பெருமளவு நெருக்கமாக இல்லை.
குழந்தை
இலக்கியத்திற்கு முதலிடம் வழங்கி நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் தமிழ்நாட்டில்
மிகக் குறைவாகவே இருக்கின்றன. ஆனால் அவை பெரிதும் முயன்று வெளியிடும் நூல்களை, தம்மளவில்
குழந்தை இலக்கியப் படைப்பாளராக இருந்த வே. தில்லைநாயகம் பொதுநூலக இயக்குநராக
இருந்த காலத்தில் வாங்கப்பட்ட அளவிற்கு, தமிழ்நாட்டரசு பொதுநூலகத் துறை
பெருமளவிற்கு வாங்குவதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டு அரசு, அரசு உதவிபெறும்
பள்ளிகள் எதிலும் பள்ளி நூலகர் என்னும் பணியிடமே இல்லை. அதனால் உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளி நூலகங்கள் நூல்களை அடைந்துவைக்கும் பண்டகசாலைகளாகவே இருக்கின்றன.
தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் நூலகங்களே இல்லை. சென்னை, மதுரை
போன்ற பெருநகரங்களைத் தவிர பிற ஊர்களில் உள்ள பொதுநூலகங்களில் குழந்தைகள் நூலகப்
பிரிவு இல்லை. இதனால் மாணவர்களிடையே குழந்தை இலக்கிய நூல்களைப் படிக்கும் பழக்கம்
குன்றியிருக்கிறது; அப்பழக்கத்தைத் தூண்டிப் பெருக்கும் விருப்பமும் ஆர்வமும்
அவர்தம் ஆசிரியர்களிடம் துளிர்விடவே இல்லை.
இந்நிலையால்தான்,
ஓடி ஆடித் திரியவும் உவப்போடு குழந்தை இலக்கிய நூல்களைப் படித்து மகிழவும் வேண்டிய
குழந்தைகள் தொலைக்காட்சியில் காணொலிபரப்பப்படும் அசைவுருபடத் தொடருக்கு
அடிமையாகிக் கிடக்கிறார்கள்; தொலையியக்கியைக் கைப்பற்றி தம் ஆதிக்கத்தை
நிலைநிறுத்த அடம்பிடிப்பவர்களாக மாறுகிறார்கள்.
இந்நிலை மென்மேலும் தொடருமானால், பொறுப்புடைய இளைஞர்களாக (Responsible
Youth), குழந்தைகள் உருவாகத் தேவையானவை என உலக நலவாழ்வு அமைப்பால்
பரிந்துரைக்கப்பட்டுள்ள தன்னையறிதல், ஒத்துணர்தல், தகவற்றொடர்பு, பிறருடன் பழகும்
திறன், படைப்பாக்கச் சிந்தனை, ஆய்வுச் சிந்தனை, முடிவெடுத்தல், சிக்கலைத்
தீர்த்தல், உணர்வுகளுக்கு ஈடுகொடுத்தல், மனவழுத்தத்திற்கு ஈடுகொடுத்தல் என்னும்
வாழ்க்கைத் திறன்கள் எவையும் இல்லாதவர்களாக அக்குழந்தைகள் எதிர்காலத்தில் மாறிவிட
வாய்ப்பு இருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்காக தமிழ்ப் படைப்பாளிகளால் தமிழகச் சூழலில்
குழந்தை இலக்கியம் பெருக வேண்டிய தேவை இப்பொழுது அதிகரித்து இருக்கிறது. அத்தகு நூல்களை ஆக்குவற்கான ஆற்றலுடைய
படைப்பாளர்கள் சிலரும் நம்மிடையே வாழ்கிறார்கள். அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம் (RMSA), கல்வி ஆராய்ச்சிக்கும் பயிற்சிக்குமான தேசிய அவை (NCERT), தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, கல்வி
ஆராய்ச்சிக்கும் பயிற்சிக்குமான மாநில அவை (SCERT), கல்வியியல் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்திய
தேசிய நூல் அறக்கட்டளை (NBTI), இந்திய மொழிகள்
நடுவண் நிறுவம் (CIIL) ஆகியனவற்றைப்
போன்ற நிறுவனங்கள் குழந்தை இலக்கிய படைப்பாளர் பயிலரங்களை ஒருங்கிணைப்பதன்
வாயிலாக இளம் படைப்பாளர்களை குழந்தை இலக்கியப் பணியில் ஈடுபடுத்தவும் பல்வேறு
துறைகளில் புத்தம்புது குழந்தை இலக்கியங்களை உருவாக்கவும் இயலும். தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வி அமைச்சகம் ஒவ்வொரு
நிதி ஆண்டிலும் தனது கணிப்பீட்டில் (Budget) குழந்தை இலக்கிய மேம்பாட்டிற்கென கணிசமான தொகையை ஒதுக்கீடு
செய்ய வேண்டும்.
அம்ருதா இதழின் 2015 சூன் மடலில் வெளிவந்த கட்டுரை
சிறப்பான கட்டுரை...
ReplyDeleteநன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்ருதா இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் கட்டுரை வெகு சிறப்பாக உள்ளது... பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteஅருமையான கட்டுரை .
ReplyDeleteகுழந்தை நூல்கள் பற்றி விரிவாக அலசி இருக்கிறீர்கள்.குழந்தைகளையும் பெரியவர்கள் போல் திக்ழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.குழந்தைக்குரிய இயல்பை தொடர்ந்தால் எதிர்காலம் பாழாகி விடுமோ என்று அஞ்சுகிறார்கள். சூப்பர் சிங்கர் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திறமைகளை வளர்க்கிறோம் என்ற பெயரில் குழந்தைத் தன்மையை மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன. குழந்தை இலக்கியம் மீண்டும் மறுமலர்ச்சி பெறவேண்டும்.
தங்களது கருத்தை முழுமையாக ஏற்கிறேன். குழந்தை இலக்கியம் குன்றிவிட்டது என்பதே உண்மை. நல்ல ஒரு பொருண்மையில் ஆழமாக விவாதித்துள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteநன்றி
Deleteதமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாண்டியராஜன் முகநூலில் எழுதியுள்ள பின்னூட்டம்
ReplyDeleteஅருமையான பதிவு. இப்போது எழுத்தாளர்களுக்கு ஒரு பெரிய விசயமாக தெரிவது 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட புத்தகம் எழுதினால்தான் மதிப்பு என்ற நினைப்பு. மற்றொன்று சினிமாவுக்க கதை எழுதி பேருவாங்குவது. குழந்தைக்கு எழுதுகிறவர்களை எழுத்தாளர்கள் லிஸ்டுக்கே கொண்டுவருவது கிடையாது. இந்த போக்கு இப்போது நீடித்திருக்கிறது என எண்ணுகிறேன்.
நன்றி பாண்டியராஜன்
Deleteஅம்ருதா இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் கட்டுரை வெகு சிறப்பாக உள்ளது... பாராட்டுக்கள்
ReplyDelete:-)
Deleteகுழந்தை இலக்கியம் குன்றிவிடவில்லை. அள்ள அள்ளக் குறையாக் குவியலாகக் கொட்டிக் கிடக்கிறது. எழுத்தாளர்கள் அதனை மறைக்காமல் இருந்திட வேண்டும். பெயர் பெற்றுவிட்ட எழுத்தாளர்களின் பாதையும் பயணமும் மாறிவிட்டது. அமைப்பு சார்ந்த செயல்படும் எழுத்தாளர்களே இந்தப் பணியைத் தொடர வேண்டும் என்பது என் கருத்து.
ReplyDeleteசிறப்பானதும், காலத்திற்கேற்ற தேவையானதுமான கட்டுரை.
மகிழ்ச்சியும் நன்றியும்.
விசாகன்.
நன்றி விசாகன்
Deleteகாந்திகிராமம் அறக்கட்டளையின் செயலாளரும் தணிக்கையாளருமான திருமிகு கி. சிவகுமார் மின்னஞ்சலில் அனுப்பிய பின்னூட்டம்:
ReplyDeleteமிக அருமையான கருத்து. குழந்தைகளின் கலை மற்றும் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம். எங்கள் குழந்தைகளின் வாடாமலர் அனுப்புகிறோம்.அவர்களுக்கு என்று தனியாக மின்னஞ்சல் இருக்கின்றது. அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன் உங்கள் நண்பன். கே. சிவக்குமார்
புத்தகம் வேண்டும்
ReplyDeleteபுத்தகம் மட்டுமன்று
நன்றி ஐயா
Deleteஇதழாளர் பா. திருமலை மின்னஞ்சலில் அனுப்பிய பின்னூட்டம்
ReplyDeleteமிக அருமையான கட்டுரை. அவசியமான கட்டுரையும் கூட
தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் மின்னஞ்சலில் விடுத்த பின்னூட்டம்...
ReplyDeleteநாட்டுத்தேவை உணர்ந்தும், மக்கள் தேவை உணர்ந்தும் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைக்கு என் பாராட்டுகள். குழந்தைகளுக்கான பாடல்களை வரைவோர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்துவோர்கள் குறைந்ததும், உண்மையான மழலையர் பாடல்கள் அடங்கிய நூல்களை வாங்கி ஆதரிப்போர் குறைந்ததும், போலிப் படைப்புகள் சந்தைக்குள் நுழைந்ததும் மழலைப்படைப்புகள் குறைந்தமைக்குரிய காரணங்களுள் சிலவாகும்.
மணல்மேட்டு மழலைகள் என்ற நூலினை 1997 அளவில் வெளியிட்டேன். சந்தைப்படுத்த வாய்ப்பில்லாமல் போனது. எங்கள் வீட்டுச் சேய்கள் என்ற பேராசிரியர் தங்கப்பாவின் நூலினை வெளியிட்டோம். போதிய ஆதரவு இல்லாமல் பதிப்புப்பணியிலிருந்து பின்வாங்கிவிட்டேன்.
அரசு ஆதரவின்மை, அயல்மொழிக்கல்வி இவற்றை எதிர்த்து மழலைத் தமிழை மீட்டுக்கொணரும் செயல் எனக்கு நம்பிக்கை தருவதாக இல்லை.
மிகவும் அருமையான கட்டுரை அரி!
ReplyDeleteஒருசாராரை மட்டுமே சாடாது, எல்லாக் கோணங்களிலும் ஆய்ந்தெழுதுதல் உமக்கு கைவந்த கலை! பெற்றோர், குடும்பச்சூழல், குமுதாயம், பள்ளி, பள்ளித்துறை, எழுத்தாளர்கள், பதிப்போர், அரசு என பல கோணங்களைக் கடுகு தெறித்தார்ப் போல உரைத்தமை அருமை! "Need of the hour" என்பதைப்போல் இன்றைய சிக்கல், சிக்கலைத் தீர்க்க என்ன தேவை என ஆராய்ந்ததை உரியோர் புரிந்து செயல்பட்டால் இளைய சமூகத்தை காப்பாற்றலாம். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இன்றளவும் அசைவுறு படங்களை மிகவும் விரும்பி அனுபவித்துப் பார்க்கும் என்னாலேயே தொ(ல்)லைக்காட்சியின் முன் அமர இயலாததால் பிள்ளைகள் உண்மையில் பாவம்! குழந்தை இலக்கியப் புத்தகங்கள் என்ற முடங்கியிருக்கும் குதிரையை எழுப்ப இக்கட்டுரை சவுக்கடியாக அமைந்தால் மிக்க மகிழ்ச்சியே!
நன்றி இராசுகுமார்
Deleteமதுரை காமராசர் பல்கலைக் கழக ஒப்பிலக்கத்துறை பேராசிரியர் முனைவர் காஞ்சனா சோமசுந்தரம் முகநூலில் அனுப்பிய பின்னூட்டம்
ReplyDeleteகட்டுரை ஒரு ஆய்வறிக்கை போல தேவையான பல குறிப்புகளுடன் நன்றாக உள்ளது. பிரச்சனையை எல்லா நோக்குநிலைகளில் இருந்தும் ஆழ்ந்து பார்த்து கருத்தும் ஆலோசனைகளும்கூறி இருக்கிறீர்கள். உரியவர்கள கண்ணில் பட்டு மனதைத் தூண்டவேண்டும்.ஒற்க் குழந்தையாக நிற்பது, கூட்டுக்குடும்பம் குலைந்தது போன்ற பல காரணங்களால் குழந்தைகள் படக் காட்சிகளை நோக்கித் தள்ளப் படுகிறார்கள். குழந்தை இலக்கியம் இன்மையும் காரணம். ஆனால் சில குழந்தைகளுக்கான நல்ல படங்களையும்குழந்தைப்பாடல்களையும் நானே பார்த்திருக்கிறேன் நல்லதைத்தேடி ,குழந்ந்தைகளுக்குத் தருவது பெற்றோரின் பொறுப்பு
நக்கீரனார் மின்னஞ்சலில் அனுப்பிய பின்னூட்டம்
ReplyDeleteவணக்கம் அரவேலன்:
அருமையான கட்டுரை. பல தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி.
குழந்தைகள் தொலைக்காட்சிக்கு, கணினிக்கு, நிகழ்பட விளையாட்டுக்களுக்கு அடிமையாகிறார்கள் என்பது ஒரு பொதுவான பிரச்சினையே. இதனால் உடல், உள நலம் சார்ந்த பிரச்சினைகள், கல்விச் சிக்கல்கள், சமூகச் சிக்கல்கள் உருவாகின்றன. அமெரிக்கப் பண்பாட்டு ஆதிக்கம் தமிழ்ச் சூழலில் இந்தச் சிக்கலை மேலும் கூர்மையக்கிறது.
தமிழில் குழந்தை இலக்கியம் குன்றியதற்கு அல்லது வளர்ச்சி அடையாதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று நீங்கள் குறிப்பிட்டது போன்று அரசின் மந்தைத்தனம். ஆனால் அவற்றில் ஒரு முதன்மைக் காரணம் தமிழிநாட்டில் தமிழ்வழிக் கல்வி அற்றுப் போதலே. இதனால் தமிழில் வாசித்தல் என்பது என்பதற்கான தேவை, ஆற்றல், வாய்ப்பு இல்லாமல் போகிறது. குழந்தைகள் இயல்பாக வாசிக்க விரும்பும் காமிக்ஸ் போன்றவற்றுக்கு இருக்கும் பண்பாட்டுத் தடை. (இது ஒரு பாசாங்குப் பண்பாடு. இதே பண்பாடுதான், சிறுவர்களை பெரியோர்களுக்கான திரைப்படத்தைப் பார்க்க விடுகிறது, பாடல்களைப் பாட விடுகிறது.) அடுத்தது நூல் வெளியீட்டாளர்களிடம் புத்தாக்கம், படைப்பாக்கம் இல்லாமை. இவை எல்லாம் சேர்ந்ததுதான் ஹாரி போட்டர் நூல்கள் தமிழ்நாட்டில் வெகுவாக விற்பனை ஆகின்றன, ஆனால் தமிழ் சிறுவர் இலக்கியம் புறக்கணிக்கப்படுகிறது.
ஆனால் இதற்கான தீர்வு அரசை முழுதும் தங்கி இருப்பதில் இல்லை. இதற்கான தீர்வு பண்பாட்டு மாற்றத்தில், கல்வி மாற்றத்தில், வாசிப்பு ஊக்குவிப்பில் உள்ளது. எளிதல்ல. மேற்குநாடுகளில் Free-Range Kids அல்லது Free-Range Parenting என்ற ஒரு கருத்துரு வந்துள்ளது. இதே போன்று தாய்மொழிக் கல்வியின் மீட்டெடுப்பு, வாசிப்பு ஊக்குவிப்பு போன்றவை சாத்தியம் ஆகலாம்.
அன்புடன்,
நற்கீரன்
சிறப்பான கட்டுரை! நன்றி!
ReplyDeleteநன்றி!
Deleteபர்வதவர்த்தினி மின்னஞ்சலில் அனுப்பிய பின்னூட்டம்:
ReplyDeleteவணக்கம் தோழர்!
கட்டுரை படித்தேன். செறிவாக இருந்தது. உங்களின் ஆதங்கம் நம்மில் பலரது ஆதங்கமும்கூட. வாசிப்பை நேசிக்கச் செய்ய வேண்டிய பள்ளிகளே நூலகங்களைச் செழுமைப்படுத்துவதுமில்லை. நூலகர்களை முறையாக நியமித்து, ஊக்கப்படுத்துவதுமில்லை.பள்ளிகளில் வாரம் இருநாள், நூலகத்தில் வாசிப்பு நேரம் என்று முன்னர் ஒதுக்கப்பட்டு வந்தது. இப்போது, கைத்திறன் வகுப்பு(தையல், டிராயிங்) விளையாட்டு வகுப்பு போல அவையும் காணாமல் போய்விட்டன.
அவை, என் போன்ற முந்தைய தலைமுறை புலம்புகிற செய்தியாகிவிட்டன.
”தமிழில் இல்லையா குழந்தை இலக்கியம்/” என்று நான் முன்னர் செம்மலரில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். இரு பத்தாண்டுகளுக்குப் பின்னும் அதே சூழலில், உங்களின் கட்டுரையைப் படித்தபோது, பல வருடங்களாக, நாம் குழந்தைகளுக்கு ஏதும் செய்யாமல் இருக்கிறோமோ என்று குற்ற உணர்வு தலைதூக்குகிறது.
ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலை உங்களின் கட்டுரை தூண்டி இருக்கிறது.
நன்றி தோழரே!
தோழமையுடன்,
வர்த்தினி