“மெய்மை”
(Fact) “கருத்து” (Opinion) என்னும் இரு சொல்களுக்கு இடையில் நுட்பமான, தெளிவான வேறுபாடு
இருக்கிறது. மெய்மை என்பது ஒன்றின் இருப்பை / மாறாத உண்மையைச் சுட்டுகிறது. கருத்து
ஒன்றைப் பற்றி ஒருவர் தனது பட்டறிவு, பகுத்தறிவு, கற்ற அறிவு ஆகியவற்றின் அடிப்படையில்
அவரது மனதில் உருவான அல்லது அவர் தன் மனதில் உருவாக்கிக்கொண்ட சிந்தனையைச் சுட்டுகிறது.
எடுத்துக்காட்டாக, ‘ஞாயிறு ஒரு நெருப்புக்கோளம்’ என்பது மெய்மை; இது காலம், இடம், ஆள்
ஆகியவற்றிற்கு ஏற்ப மாறுவதில்லை. ‘நேற்றைவிட இன்றைக்கு வெயில் அதிகமாக இருக்கிறது’
என்பது கருத்து; இது காலம், இடம், ஆள் ஆகியவற்றிற்கு ஏற்ப மாறக் கூடியது. எனவே இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் தானறிந்த மெய்மையையும்
தனது கருத்தையும் எடுத்துரைக்கின்றனர். அவற்றை அவ்வாறு எடுத்துரைக்கும் உரிமையையே கருத்துரிமை
என்கிறோம். ஒருவர் தன்னுடைய நோக்கில் கூறும்
கருத்தை, மற்றொருவர் வேறொரு நோக்கில் காணும்பொழுது அக்கருத்துகளுக்கு இடையே முரண்பாடுகள்
எழுகின்றன. இதனையே கருத்து வேறுபாடு என்கிறோம்.
இவ்வாறு கருத்து வேறுபாட்டினை உடைய இருவரும் மெய்மையை அறியும் நோக்கத்தோடு தத்தம்
கருத்துகளை விரித்துரைக்கும் பொழுது அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது. அதனால் மாந்தரினம்
பெரும்பயனை அடைகிறது.
அதனால்தான்,
“எனது கருத்தை எடுத்துரைக்க எனக்கு உரிமை இருக்கிறது; அதேவேளையில் அக்கருத்தை மறுத்துரைக்க
உனக்கு உரிமை இருக்கிறது. எனவே எனது கருத்தை எடுத்துரைக்கும் எனது உரிமைக்கும் அக்கருத்தை
மறுத்துரைக்கும் உனது உரிமைக்கும் ஊறு எழுகிறபொழுது நம் இருவரின் கருத்துரிமைக்காவும்
நாம் போராட வேண்டியது நம்மிருவரின் கடமையாகும்” என கருத்துரிமையில் நம்பிக்கை உடையவர்கள்
கருதுகிறார்கள். மாற்றுக் கருத்தை, மறுப்புரைகளை எடுத்துரைக்க அவர்களை அனுமதித்து அதன்
பின்னர் தன்னுடைய கருத்தை அவர்களுக்குப் புரியுமாறு விளக்கி உரைக்கவோ, தன்னுடைய கருத்து
தவறெனத் தெரிந்தால் அதனை மாற்றிக்கொள்ளவோ உடன்படுகிறவரே நாகரிகமானவர் என நம்புப்படுகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக ஈ.வெ.இராமசாமி பெரியார்
பேசிய கூட்டமொன்றில், அவரின் கருத்துகளை மறுத்து வினாவெழுப்பியவரது எழுதுகோலின் முனை
முறிந்தபொழுது ஈ.வெ.இரா. தனது பேனாவை அவரிடம் கொடுத்து மறுப்புக் கருத்துகளை எழுதும்படி
கூறிய நிகழ்வு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.
ஆனால் நடைமுறையில்,
பலரும் மெய்மையையும் கருத்தையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இரண்டும் ஒன்றென மயங்கி, ஒருவர் கூறுகிற காலத்தால்
மாறுபடக் கூடிய கருத்தை என்றென்றும் மாறாத மெய்மையென நம்புகின்றனர். அப்பொழுது அவர்கள்,
ஒருவர் கூறிய கருத்தை விட்டுவிட்டு அக்கருத்தைக் கூறியவரை தாக்கத் தொடங்குகின்றனர்.
அதிலும் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் அல்லது நிலைநிறுத்தப்பட விழையும் ஆதிக்கத்திற்கு
எதிரானதாக எடுத்துரைக்கப்படும் மெய்மையும் கருத்தும் இருக்கும்பொழுது அதனை எடுத்துரைப்பவர்
பெரும் தாக்குதலுக்கு உள்ளாகின்றார்.
கலீலியோ கலிலி |
இந்நிலை நெடுங்காலமாகவே
உலகெங்கும் நிலவி வருகிறது. வேதியம் கோலோச்சிய நாளில் அதன் கருத்துகளை மறுத்துரைத்து
அவற்றிற்கு மாறான புதிய கருத்துகளை எடுத்துரைத்தற்காக புத்தர் இன்னலுக்கு உள்ளனார். சாக்ரடீசு நஞ்சருந்திச் சாகுமாறு பணிக்கப்பட்டார். அண்டத்தின் நடுவில் அசையாது நிற்கும் புவியை ஞாயிறும்
பிற கோள்களும் சுற்றிவருகின்றன என்னும் கருத்து நிலவிய காலத்தில் கலீலியோ கலிலி அதனை
ஆராய்ந்து, தான் பெற்ற அறிவின் துணையோடு மறுத்தார். அண்டத்தின் நடுவில் இருக்கும் ஞாயிறை
புவியும் பிற கோள்களும் சுற்றிவருகின்றன என்னும் மெய்மையை எடுத்துரைத்தார். அந்த மெய்மை
அன்றைய கிறித்துவ மத ஆதிக்கத்திற்கு எதிராக இருந்ததனால் இடையறாத இன்னலுக்கு ஆளானார்.
சைவ மதக் கருத்துகளை மறுத்துரைத்ததனால் அனல்வாதம், புனல்வாதம் எனப்பெயரிட்டு சமண இலக்கியங்கள் பல அழிக்கப்பட்டன. எண்ணாயிரம் சமணர்கள்
கழுவேற்றிக் கொல்லப்பட்டார்கள். இருப்பினும் காலந்தோறும் புதிய கருத்துகள் தோன்றிய
வண்ணம் இருக்கின்றன. அதனை எடுத்துரைப்போர் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளாகிக்கொண்டே
இருக்கிறார்கள். பலவேளைகளில் இந்த தூற்றுதல்
அச்சுறுத்தலாகவும் அழித்தொழிப்பு ஆணைகளாகவும் மாறிவிடுகின்றன. இவ்வரிசையில்தான் அண்மையில்
ஃபிரான்சு நாட்டின் சார்லியும் தமிழ்நாட்டின் பெருமாள் முருகனும் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
முற்றாதிக்கம்
நிலவும் நாடுகளில் மட்டுமே கருத்துரிமை நெரிக்கப்படுகிறது; மாறாக, மக்கள்நாயகம் நிலவும்
நாடுகளில் கருத்துரிமை காக்கப்படுகிறது என்னும் படிமம் பொதுவாக உலகெங்கும் உருவாக்கப்பட்டு
இருக்கிறது. உண்மையில் எல்லா நாடுகளிலும் அந்தந்த நாட்டின் ஆதிக்கத்திற்கு எதிராகக்
கருத்துரைப்போரின் குரல்வளைகள் நெரிப்பட்டன; நெரிக்கப்படுகின்றன; நெரிக்கப்பட உள்ளன. அவ்வகையில்தான் மக்கள்நாயகம் நிலவும் மதச்சார்பற்ற
இந்தியக் குடியரசில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் குரல்வளை நெரிக்கப்பட்டு இருக்கிறது.
தொ.மு.சி.ரகுநாதன் |
இவருக்கு முன்னால், மோ.க.காந்தியின் இல்லற பிரமச்சரியம் என்னும்
கருத்தை “முதலிரவு” என்னும் தன்னுடைய புதினத்தின் வழியாக மறுத்த தொ.மு.சி.ரகுநாதனின்
குரல்வளை அந்நூலிற்கு தடைவிதித்ததின் வழியாக நெரிக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப்
பின்னர் அவருடைய படைப்புகளை நாட்டுடைமை ஆக்கிய தமிழ்நாட்டரசு அந்நூலிற்கு விதிக்கப்பட்ட
தடையை நீக்கியதா எனத் தெரியவில்லை. பெரியார் ஈ.வெ.இராமசாமியின் சிந்தனைகள் சிலவற்றின்
தொகுப்பான ‘பொன்மொழிகள்’, கா.ந.அண்ணாதுரையின் ‘ஆரியமாயை’, புலவர் குழந்தையின் ‘இராவண
காவியம்’ ஆகிய நூல்களை தடைசெய்ததன் வாயிலாக அந்நூலாசிரியர்களின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன.
பாரதிதாசனின்
‘தமிழியக்கம்’ என்னும் நூலில் உள்ள சில வரிகள் சிலருக்கு உவப்பாக இல்லை என்பதால்
1984ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து அந்நூல் நீக்கப்பட்டும்
(இதற்குப் பெயர்தான் நகைமுரணோ!), இன்குலாப்பின் கவிதையொன்று இராசராசன் பற்றிய பெருங்கதைகளைச்
சுட்டது எனபதற்காகவும் புதுமைப்பித்தனின் இரண்டு கதைகளின் வரிகள் சிலவற்றைத் தவறுதலாகப்
புரிந்துகொண்டு சிலர் குரல்கொடுத்தார்கள் என்பதற்காகவும் அவை பாடத்திட்டத்தில் இருந்து
நீக்கப்பட்டு அவர்தம் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. நாட்டார் வழக்காற்றில் உள்ள பாலுணர்வுக்
கதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘வயதுவந்தோர்க்கு மட்டும்’ என்னும் பெயரில் நூலாக வெளியிட்டதற்காக
இராசநாராயணனின் குரல்வளை நெரிபட இருந்தது. நகைச்சுவை துணுக்கு ஒன்றை வெளியிட்டதற்காக
ஆனந்த விகடன் இதழின் அப்பொழுதைய ஆசிரியர் சீ. பாலசுப்பிரமணியன் சட்டப்பேரவைத் தலைவரின்
‘வானளாவிய’ அதிகாரத்தால் சிறை வைக்கப்பட்டார். செல்வம், சுனில் என்னும் இரு இதழாளர்களை
சட்டப்பேரவைக் கூண்டிலெற்றிக் கண்டிக்க ஆணையிடப்பட்டது. இவையெல்லாம் வெளிப்படையாக, பலரும் அறிய நிகழ்ந்தவை. இவற்றைவிட பன்மடங்கு அளவில் வெளியே தெரியாமல் மாற்றுக்
கருத்தைக் கூறியதற்காக எழுத்தாளர்களும் இதழாளர்களும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்;
ஆளாகிக்கொண்டு இருக்கிறார்கள்.
மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளரின் அலுவலகத்தில் இருந்து "அமைதிப் பேச்சுவார்த்தைக்கு" பின்னர் வெளியே வரும் பெருமாள் முருகன் |
இவை எல்லாவற்றிற்கும்
உச்சமாக மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளரின் அலுவலகத்திற்குச் சென்று ‘அமைதி’ கூட்டத்தில்
உருவாக்கப்பட்ட அறிக்கையில் கையொப்பம் இட்டுவிட்டுத் திரும்பிய பெருமாள் முருகன் என்னும்
எழுத்தாளன் தன்னுடைய மரணத்தை பெ.முருகன் என்னும் தன்னுடைய இயற்பெயரால் தானே அறிவிக்கும்
அவலம் நிகழ்ந்திருக்கிறது.
இந்திய அரசமைப்புச்
சட்டத்தின் சட்டக்கூறு19 (1) (அ) இந்தியர் ஒவ்வொருவருக்கும் தம் கருத்தை எடுத்துரைக்க உரிமை
அளித்திருக்கிறது. இதில் உள்ள ‘கருத்து’ என்னும்
சொல் தன்னுடைய கருத்தை எடுத்துரைப்பதற்கு மட்டுமன்று, மற்றவரின் கருத்தை மறுத்துரைப்பதற்கும்
உரிமை அளிக்கிறது. மாறாக ஒருவர் மற்றொருவரை கருத்துரைக்கக் கூடாது என தடைசெய்யவோ, கருத்துரைப்பவரின்
உள்ளத்திற்கும் உடலுக்கும் உரிமைக்கும் உயிருக்கும் உறவிற்கும் ஊறுவிளைவிக்க உரிமை
வழங்கவில்லை. ஆனால் ‘இந்துத்துவத்’தை இந்நாட்டில் நிலைநிறுத்தத்
துடிக்கும் ‘தேசியத் தன்னார்வலர்கள்’ (இராசுடிரிய சுயம்சேவக்குகள்) என்னும் மத அமைப்பினரும்
திருச்செங்கோட்டுப்பகுதியில் உள்ள 44 சாதிய அமைப்புகளும் இணைந்து பெருமாள் முருகன் படைத்த மாதொருபாகன் புதினத்தை
எரிக்கிறார்கள்; அவரது படத்தை செருப்பால் அடிக்கிறார்கள்; மாதொருபாகன், ஆளண்டாபச்சி,அர்த்தநாரி, ஆலவாயன் ஆகிய புதினங்களைத் தடை செய்யவும் அவரை, இந்திய குற்றவியல் சட்டத்தின்
சட்டக்கூறு 509கீழ் கைது செய்யவும் வேண்டும் என்கிறார்கள்; “சிலராவது உணர்ச்சிவசப்படத்தான் செய்வார்கள்; ஏன் அவர்கள் வன்முறையை கையில்
எடுத்தாலும் எடுக்கலாம்” எனக்கூறிவிட்டு அதே பதிவின் இறுதியில் அவரது ஒளிப்படத்தை, கைபேசி எண்ணை, வீட்டு
முகவரியை, அவர்தம் மனைவி, குழந்தைகள் பெயரை வெளியிட்டு மிரட்டி இருக்கிறார்கள். இவை யாவும் பெருமாள் முருகன் தனது படைப்பில் கூறப்பட்டுள்ள
செய்திக்கு நாட்டுப்புறவியல், பண்பாட்டு மானிடவியல் சான்றுகள் உள்ளன; அவற்றை ஆ.சிவசுப்பிரமணியன்,
தியடோர் பாசுகரன், அ.கா.பெருமாள் ஆகிய ஆய்வறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனச் சுட்டிக்காட்டி,
மாற்றுக் கருத்துரையவர்கள் தகவுடைய அறிஞர்களோடு வந்தால் அவர்களோடு கலந்துரையாடவும்
தான் அணியமாக இருப்பதாகத் தெரிவித்து, திருச்செங்கோட்டு மக்களின் மனதை நோகடிக்கும்
பகுதிகளை அடுத்த பதிப்பில் மாற்றிவிடுகிறேன் என அறிவித்த பின்னரும் நிகழ்ந்திருக்கின்றன.
காவல் துறையினர் பெருமாள் முருகனுக்கு பாதுகாப்புக் கொடுக்க முடியாது என கைவிரித்திருக்கின்றனர்.
அதனால் அவர் அவ்வூரைவிட்டே வெளியேறி இருக்கிறார். மீண்டும் அமைதிக் கூட்டம் என மாவட்ட
நிருவாகத்தால் அழைக்கப்பட்ட அவர் தன்னுடைய கருத்தைக் கூறக்கூட அனுமதிக்கப்படாமல் தனியறையில்
அமர வைக்கப்பட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார். இது முறையன்று
எனக் கூறிய அவர்தம் வழக்கறிஞரிடம், “நீங்கள் கூறிவிட்டு போய்விடுவீர்கள்; இவர் இந்த
ஊரில் வாழ வேண்டும் அல்லவா?” என அமைதிக் கூட்டத்திற்கு பொறுப்பாளராக இருந்த அலுவலர்
கூறியிருக்கிறார். அக்கூற்றின் பொருளை ஏதாவது ஓர் அறிஞர் உரை எழுதிய பின்னர்தான் இத்தமிழ்
குமுகாயம் புரிந்துகொள்ள வேண்டுமா என்ன?
திராவிட வேரும்
இடதுசாரி மனச்சாய்யும் உடைய, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துகளை தன்னுடைய படைப்புகளில்
ஊடும் பாவுமாக வெளிப்படுத்துகிற, சாதி மறுப்பை தன் சொந்த வாழ்வில் நிகழ்த்திக் காட்டிய,
சாதியக் கட்டுமானத்தை மீறியதால் சாவிற்கு உள்ளான ஒருவருக்கு தன்னுடைய நூலொன்றை படையலாக
வைத்த, விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்க விழையும் நேர்மையான
அரசு அலுவலர் ஒருவரைப் பற்றி நூலெழுதிய பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளனை மிரட்டி,
இன்னலுக்கு உள்ளாக்கி முடக்குவதன் வழியாக சாதி மறுப்பில் ஆர்வம் செலுத்துகிற இளைய தலைமுறையினருக்கு
‘நாங்கள் கிழிக்கும் கோட்டைத் தாண்டினால் உங்களுக்கும் இதே கதிதான்” என மறைமுகமாக அச்சுறுத்தி
சாதியக் கட்டுமானத்தை காக்க முனைவதே மாதொருபாகனை எதிர்க்கும் சாதிய அமைப்பினரின் நோக்கமாக
இருக்க வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத்
தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள பாரதிய சனதா கட்சி, தமிழகத்தில்
ஆங்காங்கு இந்து மத உணர்வை, வெறியைத் தூண்டி, தன்னை இந்துமதத்தின் காவலனாகக் கட்டமைத்து
15 திங்களுக்குப் பின்னர் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடத்தைப்
பெற்று ஆட்சி அமைக்க விழைகிறது. அதன் தொடக்கப்
புள்ளியாக இந்த நிகழ்வை தனது தாய் அமைப்பின் வழியாக நடத்துகிறது.
எனவேதான்
பெருமாள் முருகனுக்கு எதிராக திரண்டு நிற்கும் அமைப்புகள், அவர் தனது புனைவின் வழியாகக்
கூறும் ‘கருத்தை’, திருச்செங்கோட்டைப் பற்றி அவர் கூறும் ‘மெய்மை’யாகக் கட்டமைத்து
அவரை இன்னலுக்கு உள்ளாக்குகின்றன. அதன் வழியாக மதவெறியை, சாதியத்தை, ஆணாதிக்கத்தை நிலைநிறுத்த
முனைகின்றன. அவற்றை மறுத்து மக்கள் நாயகத்தை, மானுட நேயத்தை வளர்த்தெடுக்க விழைவோரை
முடக்க முயலுகின்றன. ஆனால், கனன்றுகொண்டிருக்கும்
எரிமலையை கமண்டலத்து நீரால் அணைத்துவிட முடியாது என அவர்கள் அறியவில்லை.
அம்ருதா 2015 பிப்ரவரி இதழில் வெளவந்த கட்டுரை
அம்ருதா 2015 பிப்ரவரி இதழில் வெளவந்த கட்டுரை
சரியில்லை அல்லது பிடிக்கவில்லை என்றால் சரியான முறையில் புண்படாதவாறு திருத்த வேண்டும், பேசி உணர்த்தி மாற்றல் வேண்டும்! வற்புறுத்தலோ, வருத்தப்படவைத்தலோ, மிரட்டலோ கலாச்சாரமில்லை. சக மனிதரும் நல்ல படைப்பாளியுமான பெருமாள் முருகன் அவர்களுக்கு நேர்ந்த அவலங்கள் மனதை பிழிந்து வாட்டுகின்றன; வெறுப்பும், கோபமும் தலைக்கேறுகின்றன. உமது எழுத்தாலும், நடந்த கொடுமைகளின் தாக்கத்தாலும் உருவானது எனது எண்ணத்தைத் தெரிவிக்கும்; வாசகர்கட்கு அறிவுறுத்தும் 18 கண்ணிகள் கொண்ட “வாசகராற்றுப்படை” என்ற நேரிசை வெண்பா. இதனை உமது மற்றும் பெருமாள் முருகன் அவர்களின் மலர்த்தாள்களில் பணிவன்போடு சமர்ப்பிக்கின்றேன்! குற்றமிருப்பின் பொறுக்காது எனக்குணர்த்திக் களைவீர்:
ReplyDelete-------------------------------------------------------------------------------------
வாசகராற்றுப்படை (நேரிசை வெண்பா)
-------------------------------------------------------------------------------------
எழுத்தின் எழுச்சி:
-------------------------------------------------------------------------------------
1 அறிவை வளர்த்து இருளைக் களையும்
செறிவாய் அமையும் எழுத்து – அறியாத
2 மக்கள் மனத்திலும் தக்கதோர் சால்பினை
புக்கும் அறிஞர்கட்ச் சொல்லே – அக்கரைகொள்
-------------------------------------------------------------------------------------
எழுத்தாளன் அவசியம்:
-------------------------------------------------------------------------------------
3 கலைஞர், எழுதும் கலையைத் துணையாய்
கலங்கா மனதொடு கொள்வர் – சிலகாலம்
4 கற்பனை யான கதையை உரைப்பதும்
கட்புலன் துன்பம் களையவே – கட்டிய
-------------------------------------------------------------------------------------
அறியாமையின் விளைவு:
-------------------------------------------------------------------------------------
5 கலையலங் காரத்தைக் காணாது, கொண்ட
விலைபோகா கொள்கை புகுத்தல் – அலையும்
6 மனிதர்அச் சால்பை உணராது தூற்றல்
கனிவான உள்ளத்தைத் தாக்கும் – பனுவல்
-------------------------------------------------------------------------------------
ஆய்தல் அவசியம்:
-------------------------------------------------------------------------------------
7 குணம்குற்றம் நாடிபின் மிக்கதை கொள்ளார்
பணப்பலம் ஆட்பலம் கொண்டதால் – காணாக்
8 குறையை மிகையாய்க் கருதிபின் தாக்கி
மறைக்கும் கொடுமையைக் காண்மின்! – நிறைவாய்
-------------------------------------------------------------------------------------
வரலாறு வேறு, கதை வேறு, உணர்வீர்:
-------------------------------------------------------------------------------------
9 கதையினைச் சொல்லுதல் குற்றமோ? கேட்ட
கதையை எழுதினால் காழ்ப்பேன்? – உதைகள்
10 என்றவோர் அச்சம் எழுத்தருக் கேன்?நீதி
மன்றம்செல் லாததுவும் ஏனோசொல்? – கொன்றிடுவோம்
-------------------------------------------------------------------------------------
அச்சுறுத்தல் அவசியமா:
-------------------------------------------------------------------------------------
11 என்றும், வெளியேற் றுவோமென் றுரைத்துமா
நன்னெண்ணம் காட்டுவீர்? கூறுமின் – சொன்னதில்
12 குற்றமே என்றாலும் கூறுதட்கு ஆறுண்டு!
சுற்றம் தாக்கிடும் எண்ணமேன்? – வற்றா
-------------------------------------------------------------------------------------
பழுதாக்காது பழுது பார்க்கலாமே :
-------------------------------------------------------------------------------------
13 தெழுதிடும் ஆற்றல் கொழுத்தோர் அறியார்
பழுதைக் களைவது தேவை – வழுவா
14 துரைப்பின் உடனே சரிபார்ப்பர் சான்றோர்,
கறைகளைக் கொல்வர் கலைஞர்! – முறையாய்
-------------------------------------------------------------------------------------
வாழுமின், வாழவிடுமின்:
-------------------------------------------------------------------------------------
15 வழியினில் சென்றால் அனைவரும் வாழ்வர்
பழிசொல் கலைஞரைக் கொல்லும் – இழிவாய்
16 முறையில்லா செய்கையால் அச்சம் விளைந்தால்
குறைவில்லா ஆற்றல்வீ ணாச்சே! – சிறையைத்
-------------------------------------------------------------------------------------
கலையைக் கொல்லாதீர்:
-------------------------------------------------------------------------------------
17 தமக்கெனச் செய்துஅதில் பூட்டிப் பிணம்போல்
சுமையோடு வாழ்வெதற்கு கூறுவீர் – அமைதியாய்
18 பேனா பிடித்த கரத்திற்குத் தேவையோ
வீணர் வகுத்த தடை!
-------------------------------------------------------------------------------------
இவ்வாறான சமூக அவலங்களை ஒளியூட்டி பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். இவற்றைப் படித்தாவது சரியான முறையில் கருத்து சுதந்திரம் தளைத்தோங்கட்டும்!