வந்த செய்தியும் வராத செய்தியும்

இந்தியாவின் மீது
இன்னபிற நாடுகள் பின்பற்றிய
தீண்டாமை தீர்ந்துபோனதென
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
பெருமிதம் மிளிரப் பேச
எங்களின் ஆலோசனைகளை எல்லாம்
அரசு ஏற்றுக்கொண்டதால்
இந்தப் பிரேரணையை நாங்கள்
ஆதரிக்கிறோம் என
எதிக்கட்சியின் மூத்த தலைவர்
இதமாய்க் கூற
எதிர்காலத்தில் உந்துகள் கூட
அணுசக்தியில்தான் இங்குமென
பகுத்தறிவுக் கட்சியைச் சேர்ந்தவர்
அரூடம் மொழிய
குரல்வாக்கெடுப்பின் வழியாக
எதிர்க்கட்சிகள் கொடுத்த
எல்லாத் திருத்தங்களோடும்
அணுவிபத்திற்கான இழப்பீட்டுப் பிரேரணை
மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாய்
அவைத்தலைவர்
செயற்கைப் புன்னகையோடு செப்பினார்
இது
வந்த செய்தி

வராத செய்தி
இராணுவ இசை முழங்க
இந்திய அமைச்சர்கள்
வரிசையில் நின்று
வாழ்த்துப்பாட
அதிகாரிகள்
அடக்கவொடுக்கமாய் நிற்க
அரசு முறைப் பயணமாக
இந்தியாவிற்கு வரவிருக்கிற
அமெரிக்க அதிபரை வரவேற்க
இந்தியாவின் சி.இ.ஓ.
மன்மோகன் சிங்
மலர்ச் செண்டுகளை அல்ல
இந்திய நாடாளுமன்ற
உறுப்பினர்கள்
அண்மையிற் கூட்டப்பட்ட
தங்களின் ஊதியம்
கட்டுபடியாகதே என
"உச்சுக்" கொட்டியதை
குரல் வாக்காய்க் கருதி
உருவாக்கப்பட்ட
எதிர்கால இந்தியர்களின்
மண்டையோட்டுக் கொத்தைக்
கொடுக்க இருக்கிறார்.
இது
வராத செய்தி

முதிர்ச்சி

உடலின் முதிர்ச்சி முதுமை
அறிவின் முதிர்ச்சி புலமை
அன்பின் முதிர்ச்சி காதல்
மனதின் முதிர்ச்சி ஞானம்
எதன் முதிர்ச்சி நாம்?

விடுதலையின் கதை!

தொடங்கிய இடத்திற்கே
திரும்பியிருக்கிறோம்
அவர்கள்
மீண்டும்
வணிகம் செய்ய வந்திருக்கிறார்கள்
இவர்கள்
மீண்டும்
கடன் வாங்கிக் கொண்டுக்கிறார்கள்
நம்மில் பலர்
அவர்களுக்கு
ஆள்பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்
அவர்கள் மேற்பார்வையில்
இவர்கள் நம்மை ஆள்கிறார்கள்
ஆளும் உரிமையையும்
விரைவில் இவர்களிடமிருந்து
அவர்கள் வாங்கிவிடுவார்கள்
அப்புறம் என்ன?
அப்பாவி மக்கள்
அடி தாங்க மாட்டாமல்
வெடித்தெழுவார்கள்
இவர்களில் சிலர்
அவர்களுக்காக
அப்பாவிகளை வதைப்பார்கள்
இன்னும் சிலர்
நெஞ்சு பொறுக்குதில்லையே
எனப் பாடல் புனைவார்கள்
இன்னும் சிலர்
அடிவாங்கிகள்
வெல்லப் போகிறார்கள் என்றதும்
அடிவாங்கிகளுக்கு
பஞ்சு மிட்டாய்க் கனவுகளை விற்பார்கள்
பாற்கடல் கடைந்து அமிழ்தம் வருகையில்
நஞ்சை
அடிவாங்கிகளுக்குக் கொடுத்துவிட்டு
அமிழ்தத்தை
அவர்கள் குடிப்பார்கள்
அன்றைக்கும்
என்னைப் போல் ஓராள்
விடுதலையின் கதையை எழுதுவார்
உங்களைப் போல் சிலர்
அதனைப் படித்துவிட்டு
“நல்லாயிருக்கு!”
“பிடிச்சிருக்கு!”
“மோசம்”
“வேற வேலையில்லை”
என அவரவர்க்குத் தோன்றியதைக் கூறிவிட்டு
அவரவர் வேலையைப் பார்ப்பார்கள்
நம்மைப் போலவே
யாராவது ஒருவர் சொல்வார்
“நம்மாலா என்ன பண்ணமுடியும்?”
இன்னொடுவர் சொல்வார்
“மாற்றம் மட்டுமே மாறாதது
எனவே இதுவும் மாறும்”
அடுத்தொருவர் சொல்வர்
“இதுவும் கடந்து போகும்
எங்கள் குருவின் காலைக் கழுவி
நீரைக் குடியுங்கள்”
எல்லாவற்றையும்
கேட்டு, பார்த்து மகிழ்வார்கள் பலர்
தொலைக்காட்சியின் முன்பு
ஆனால்
சிலர்…
மிகச் சிலர்…
கனவுகள் மிதக்காத கண்களோடு வந்து
காலத்தின் குரல்வளைப் பிடித்து நெரிப்பார்கள்
அப்பொழுதுதான்
விடுதலை விடுதலை பெறும்

சிரிப்பொலி

களிப்பின் ஒலியாய் கானகம் சிரிக்கையில்
ஓடைகள் சுழித்து ஓடிச் சிரிக்கையில்
காற்றும் நம்மோடு களித்துச் சிரிப்பதை
ஏற்றுப் பசுமலை எதிரொலி செய்யும்!

பசும்புல் வெளியது பளிச்செனச் சிரிக்கையில்
தத்துக் கிளிகள் தாவிக் குதிக்கையில்
இனிய தமது எழில்மிகு வாய்களால்
கலகல கலவென காண்போர் சிரிப்பர்

வண்ணப் பறவைகள் வளமாய்ச் சிரிக்கையில்
சிறுமணிப் பயிறும் செந்நிறப் பழங்களும்
விரிந்த பலகையில் விரவிக் கிடக்கையில்
என்னோ டிணைந்து இன்பம் பொங்கக்
கலகல கலவெனப் பாடி மகிழ்ந்து
வாழ்ந்து சிறந்திட வாரீர்! வாரீர்!!

ஆங்கிலக் கரு: வில்லியம் பிளேக்கு
தமிழ் உரு : யரலவழள

மீளும் கருவூலம்



அள்ளித் தரும் நிலம்

வள்ளலார் என அழைக்கப்பட்ட சிதம்பரம் இராமலிங்க அடிகளாரின் சிந்தனைக்குப் பின்னர் தமிழ் மக்கள் தம்முடைய வேர்களைத் தேடும் பணிகளில் பல்வேறு வகைகளில் ஈடுபடத் தொடங்கினர். மொழிப்புலத்தில் மறைமலையடிகள், திரு.வி.க., தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், அருளி எனத் தொடரும் ஒரு படையும் மெய்யியற் புலத்தில் க. நெடுஞ்செழியன் போன்றோரும் இசையியற் புலத்தில் தமிழிசை மூவர்கள் தொடங்கி வீ.பா.க. சுந்தரம், மம்மது எனத் தொடரும் ஒரு பெரும் படையும் நூலகவியற் புலத்தில் வே. தில்லைநாயகனாரும் பொறியியலற் புலத்தில் கொடுமுடி சண்முகம் போன்றோரும் இலக்கண இலக்கியக் கோட்பாட்டுப் புலத்தில் தண்டபாணி சுவாமிகள் தொடங்கி ச.வே.சு. வி.அய்.சு வழியாக எண்ணற்றோரும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மொழிந்தவை தவிர வெவ்வேறு துறைகளிலும் விதவிதமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோலவே வேளாண்மையிலும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அத்தகு முயற்சிகளில் ஒன்றுதான் பாமயன் என்னும் மு. பால்சுப்பிரமணியன் எழுதிய “அள்ளித் தரும் நிலம்” என்னும் நூலும் ஆகும். அந்நூலுக்கு நான் எழுதிய பதிப்புரை கீழே தருகிறேன். படித்த பின்னர் உருபாய் 120 விலையுள்ள அவ்வரிய நூலை வாங்க விரும்பினால் “பனுவற்சோலை, 15/பி பயோனியர் குடியிருப்பு, திருமங்கலம் 625 706, மதுரை மாவட்டம்” என்னும் முகவரிக்கு பணவிடையை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

இதோ அப்பதிப்புரை:

மீளும் கருவூலம்

தம் பண்டங்களுக்குச் சந்தை தேடிய, தேடுகிற பேரரசியத்தின் (Imperialism) அகோரப் பசிக்கு உணவாக அதன் கொள்ளிவாய்க்குள் பன்னெடுங் காலமாக நம் முன்னோர் பட்டறிவில் உருவான நம் மண் சார்ந்த பல்வேறு தொழில் நுட்பச் செல்வங்களை வீசி எறிந்தோம். அவற்றுள் நம் வேளாண்மையும் ஒன்றாக இருந்தது. தொழில் நுட்பத்தின் பெயரால் அவை உமிழ்ந்த நச்சுகளை எல்லாம் வாரியெடுத்து அணைத்துக்கொண்டோம். நாகரிகம் அடைந்து விட்டதாக நம்பத் தொடங்கினோம். புதிதக் கோலம் (Modernity) புனைந்துள்ளோம் என்று புளகிதம் அடைந்தோம். நம் வயல்வெளி எங்கும் விதைகள் என்று நம்பி மரபீனி மாற்றக் கண்ணி வெடிகளை நடத் துடிக்கிறோம், உரங்களுக்கு மாற்றாய் வெடிப் பொருள்களை நிறைக்கிறோம், அதிக விளைச்சல் மாயையில் சிக்கி நோய்களை அறுவடை செய்கிறோம்.

காலம் செல்லச் செல்ல, இயற்கையின் கோலம் மாற மாற, நிலவெளி எங்கும் நேர்ந்த இழப்புகள், சங்க காலத் தமிழரைப் போல, மாந்தன் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியதன் தேவையை உணர வைத்துள்ளன. உலகு முழுவதும் வேர்களைத் தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. இதுநாள் வரை நாகரிகம் அற்றவர்களெனப் புனைந்து உரைக்கப்பட்ட பழங்குடியினரும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களும் தம் நினைவுக் கிடங்குகளில் தேக்கி வைத்திருந்த அறிவுச் செல்வங்களை திரட்டும் வேலைகள் ஆய்வாளர்களால் செயலுருப் பெறுகின்றன. வேளாண்மையின் வேர்களை மீட்கும் வேலையும் வெகுவேகமாய் நடக்கிறது.

இவ்வேர் மீட்புப் பணியின் விளைபொருள்களாய் வெளிவரும் எம்மக்கள் தம் பட்டறிவால் கண்டறிந்து குமுகாய உடமையாய் வைத்திருக்கும் அறிவுச் செல்வங்களுக்கு தன்பெயரில் முற்றுரிமை பெற பேரரசியம் முனைகின்றது. இந்நிலையில் குமுகாய அறிவுத்தொகுதியை குமுகாயத்திற்கு உடமையாக்குவதற்கும் பரவலாக்குவதற்கும் அதனை ஆவணப்படுத்தி பரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அப்பணியின் ஒரு கூறாய், நம் மண் சார்ந்த வேளாண்மை முறைகளைத் திரட்டி, அறிவியல் நோக்கில் ஆய்ந்து, கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளி, இணைக்கத் தக்கன இணைத்து, களத்தில் ஆய்ந்து, விளைவுகளைக் கண்டறிந்த பின்னர் தேர்ந்த கோட்பாடுகளையும் தொழில் நுட்பங்களையும் தொகுத்து நூலாக்கி தங்கள் கைகளில் தந்திருக்கிறோம். படியுங்கள். பயன்படுத்துங்கள். பரப்புங்கள்.

இந்நூலாக்கப் பணியை அறிஞர் பாமயன் அரும்பாடுபட்டு செய்திருக்கிறார். அவருக்கு நன்றி.

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...