நஞ்சல்லவா?


                                                          ஆங்கில மூலம்: 
                                                   இராசகோபால் புத்தன்வீடு
                                                                 தலைவர் 
                                                      ஏக்தா பரிசத், புதுதில்லி


                                                        தமிழில்: அரிஅரவேலன்

அமிழ்தத்தின் பெயரால் நஞ்சினைக் குடிக்கிறோம் நாம்!  உண்மையிது. சுவைமிக்க இந்நஞ்சின் விளைவு மிகவும் கொடியது.  இதனை எப்படிக் குடிக்கத் தொடங்கினோம் என்பதனை நம்மில் எவரும் அறியோம்.  இது நமது குமுக அமைப்பிற்கு கணித்தற்கரிய தீங்கினை கொடுக்கிறது.   நம் குருதியோட்டத்தில் இந்நஞ்சு கலந்ததும் நம்முள் எழும் மாற்றங்களுக்கு எல்லையில்லை.  இப்பொழுதே இதன் செல்வாக்கினை நாம் கண்டறியாவிட்டால், நம் பொறுப்பின்மையின் விளைவுகளை எதிர்வரும் தலைமுறையினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சாதியமும் பிற மதங்களை மதிக்காமையும் இந்நஞ்சினை நாம் உண்டுவிட்டோம் என்பதற்கான அடையாளங்கள். இந்நஞ்சு இந்தியத் துணைக்கண்டத்தின் நீள அகலங்களில் வெகுவேகமாய் பரவிக்கொண்டிருக்கிறது.  இதன் கொடிய தாக்கத்திற்கு ஒவ்வொருவரும் உள்ளாகிறோம். நாம் இப்போக்கினை நிறுத்தியாக வேண்டும்.  இல்லையெனில் இத்துணைக்கண்டம் துண்டுதுண்டாகும். 

இக்கொடிய நஞ்சின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விரும்புவோரையும்கூட இந்நஞ்சு தன்னைக் குடிக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.  தற்பொழுதைய சூழல் இந்நஞ்சின் மீது ஒரு பயபக்தியை உருவாக்கியிருக்கிறது.  சாதியத்தையும் மதவாதத்தையும் அடிப்படையாகக்கொண்ட நம்முடைய அரசியல் எதிர்காலம் இருண்டதாக இருக்கிறது.  நமது தேர்தல் செயல்பாடுகள் அனைத்தும் சாதியத்தையும் சமயத்தையும் அடியாகக்கொண்ட அரசியலாய் இருக்கின்றன.  இதிலிருந்து ஏன் நாம் நாமாகவே விடுதலை பெறக்கூடாது?

கூண்டுக்கிளிகள் கூண்டின்மீது பூசப்பட்ட தங்கமுலாமைக் கண்டு மகிழ்வதுபோலவும் தங்கச்சங்கிலியால் தளைப்படுத்தப்பட்ட கைதி விலங்கின் மதிப்பினைக்கண்டு பெருமிதம் கொள்வதுபோலவும்; அடிமைகள் சிலவேளைகளில் தமது அடிமைத்தனத்தை பெருமிதத்துடன் தூய்த்து மகிழ்தல் போலவும் சாதியத்துவ, மதத்துவ நோயால் தாக்கப்பட்ட நாமும் அதிலிருந்து விடுதலைபெறுவதற்கு மாறாக அந்நிலைகண்டு மகிழ்கிறோம்; பெருமிதம் கொள்கிறோம். நாம் அந்நோயின் செல்வாக்கிலிருந்து நாமாகவே விடுபடவேண்டும்.  இல்லையெனில் நமது குமுதாய அமைப்பு முழுவதும் வீழும். சாதி, சமய சிக்கல்களை எழுப்புவதன் மூலம் வெறுப்பையும் எதிர்ப்பையுமே குமுதாயத்தில் பரப்பிக்கொண்டு இருக்கிறோம் என்பதனையும் இது மாந்தரினச் சுரண்டலையே நிலைபேறாக்கும் என்பதனையும் நாம் உணர வேண்டும். சாதியத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் தேர்தலில் போட்டியிடுவது மரபிற்கு முரணானதல்லவா? நாம் உறவுகளையும் நட்புகளையும் சாதி, சமயத்தின் அடிப்படையில் ஏற்படுத்திக்கொள்வதும் நல்லது கெட்டதை அவைகளே முடிவுசெய்வதும் இயற்கைக்கு மாறானவை அல்லவா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் சில செய்தித்தாள்களில் நான் கிறித்துவன் என்றும் மதம் மாற்றுவது எனது வேலையென்றும் எழுதப்பட்டிருந்தது.  இதனைக் கண்ணுற்ற எனது நண்பர்கள், நான் கிறித்துவன் என்றதை மறுக்கும்படியும் நான் ஓர் இந்துவே என்று அறிவிக்கும்படியும் அறிவுறுத்தினர்.  அனுமன் தனது நெஞ்சினைப் பிளந்துகாட்டியதைப்போல நானும் என் நெஞ்சினைப் பிளந்துகாட்டி நான் நூறு விழுக்காடும் இந்து என்பதனை மெய்ப்பிக்க வேண்டும் என்றனர்.  ஆனால், அவ்வறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாது அமைதி காத்தேன்.  நஞ்சிற்கு முறிவு நஞ்சன்று.  “நான் கிறித்துவனோ, இந்துவோ அல்லன்.  நான் மனிதன்.  நல்ல மனிதனாக விளங்க விரும்புபவன்.  நான் இந்துவா, கிறித்துவனா, இசுலாமியனா என்பது ஒரு பொருட்டன்று.  நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்; விரும்புகிறேன்.  என்னைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் ஓரிலக்கை நோக்கிச் செல்கின்றன.  அவைகளின் பாதைகள் வேறானாலும் அடையுமிடம் ஒன்றுதான்.  நான் எம்மத்தைச் சார்ந்தவன் என்பது எனக்கு முதன்மையானதன்று; மாறாக நான் எத்தகையவன் என்பதுதான் முதன்மையானது” என அந்நண்பர்களிடம் கூறினேன்.

பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வாரியத் தலைவர் திருமிகு பிரமதாய் சர்மா, “இந்நாட்டில், உன்னுடைய வேலைகள் பற்றியோ; இந்நாட்டிற்கு நீ என்ன செய்துகொண்டு இருக்கிறாய் என்பதனைப் பற்றியோ கேட்க மாட்டார்கள்.  மிக எளிதாக உனது சாதியையும் சமயத்தையும் கேட்பார்கள்” என ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். 

ஒருவர் நாட்டிற்கு என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பதே இக்குமுகாயத்தில் அவரின் தகுதியையும் பதவியையும் முடிவு செய்யவேண்டும் என்றாலும், அவர் யார் என்பதே ஒருவரை மதிப்பிடும் அளவுகோலாக இருக்கிறது.  ஒருவரின் சமுதாய தகுநிலையை இந்நஞ்சே முடிவு செய்கிறது.  நஞ்சே அமிழ்தமாக இருக்கிற முட்டாள்களின் வானுலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.  இது பொய்த்தோற்றம் அல்லவா?  நமது சிந்தனையை மழுங்கடிக்கும் வெறியம் (Alcohol) அல்லவா?  நம் கண்களை மூடியிருக்கும் திரையை நாம் அகற்றியாக வேண்டும்.  பொன்விலங்கோ, இரும்பு விலங்கோ, அது உடைத்தெறியப்பட வேண்டும்.

சில அரசியல் கட்சியினரும் காந்தியவாணர்கள் எனச் சொல்லப்படும் சிலரும் தங்களது அதிகார நலத்தைக் காத்துக்கொள்ள சாதி சமயப்பற்றோடு திரிவது முரண்நகை ஆகும்.  மனிதக்கடவுள் என மதிப்படுபவர்கள் பேய்களைப் போல் செயல்படுவது இறைபழிப்பு அல்லவா?  கிறித்துவ, இந்து, சீக்கிய நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்த ஒருவர் மதகூட்டுறவையும் நல்லெண்ணத்தையும் பரப்பும் வேலையில் பரபரப்போடு அலைவது இரக்கம் தரத்தக்கதாய் இருக்கிறது.  இறைநம்பிக்கையாளர்கள் சிலர் மதவெறியிலும் மதஅடிப்படைவாதத்திலும் திருப்தியடைகிறார்கள்.

காந்தியத்தைப் புறம்தள்ளி பொருள்முதல் கோட்பாட்டை தழுவிக்கொள்வதனால் நம் சமுதாயத்திலிருந்து ஏற்றத்தாழ்வுகள் அழிந்துவிடும் என நான் கருத்துரைக்க மாட்டேன்.  இதற்கு அப்பால், காந்தியவாணர்கள் என்றும் கடவுளின் அடியார்கள் என்றும் சொல்லப்படுவர்களின் அருளுரைகளை கவனிக்கும்படி எல்லாரையும் வேண்டுகிறேன்.  முறிமருந்தில்லாத நஞ்சினை இவர்கள் பரப்புகிறார்கள்.  இத்துணைக்கண்டம் மேலும் பிளவுபடாதிருக்க வேண்டுமானால், பிரிவினைப்போக்கிற்கு மதிப்புயர்வளிக்கும் இந்நஞ்சின் பரவலை நாம் தடுத்தாக வேண்டும்.  வெறுப்பிற்கும் பொறையின்மைக்கும் மாற்றாக அன்பிற்கும் கூட்டுறவிற்கும் நாம் இடம் கொடுத்தாக வேண்டும்.  காந்தியைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பேசும் நமது செயல்கள் காந்தியமாகவும் கடவுளியமாகவும் இல்லாதிருப்பது அபத்தமல்லவா?  அகவொழுங்கற்ற நமது நடத்தையை எக்கணத்தில் உணர்கிறோமோ, அக்கணத்திலேயே இந்நஞ்சின் நாட்டியம் குன்றிவிடும்.

நமது குமுகாயத்தையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு வன்முறை வளர்ந்திருக்கிறது.  நாம் நக்சலியர்களுக்கு அஞ்சுகிறோம், அவர்களின் வன்முறையை காவல்துறை அல்லது பட்டாளத்தின் ஆகப்பெரிய வன்முறையால்தான் கட்டுப்படுத்த முடியும் என்று தவறாக கட்டமைக்கப்பட்ட கருத்தினை ஆழமாக நம்புகிறோம்.  வன்முறையற்ற அமைதிப் பேச்சுகளைத் துவங்குவதன் வழியே வன்முறையை கட்டுப்படுத்த முடியும்.  சமுதாயத்தில் அமைதி மேலோங்கியிருக்க வேண்டும் என விழைகிறோம், ஆனால் விழைவு மட்டுமே எவ்விளைவையும் ஏற்படுத்திவிடாது. விழைவுகள் குதிரைகளானால் பிச்சைக்காரர்கள் அதன்மேல் ஏறிச்செல்வர் என்பது சொலவடை.  வன்முறையை நிறுத்த, அனைவரும் அறியத்தக்க சில செயல்களையேனும் நாம் செய்தல்வேண்டும்.  அங்ஙனம் செயல்படுவதற்கு முன்னர் வன்முறை என்பது என்ன, அதன் வடிவங்கள் எவையெவை என்பதனை அறிதல் வேண்டும்.  அடுத்த வீட்டில் ஒருவர் பட்டினியால் சாகக்கிடப்பதும் அது நம்மை பாதிக்காதிருப்பதும் அவரை பட்டினியால் சாகவிடுவதும் வன்முறைதான்.  பிறரைச் சுரண்டி செல்வங்களைக் குவிப்பதும் வன்முறைதான்.  சில மாந்தரை கொத்தடிமைகளாக வைத்திருப்பதும் வன்முறைதான்.  ஏழை ஒருவரை அச்சுறுத்தி அடக்கி ஆள்வதும் வன்முறைதான்.  இத்தகு வன்முறைக்கு பங்களிக்க அனுமதித்தால், நாம் எத்தகு நியாயத்தையும் செய்யவில்லை என்பதே உண்மை.  நியாயம் என்பது வன்முறையின் பயன்பாட்டை தொடரவிடாது தடுப்பதில்தான் இருக்கிறது. 

மேம்பாட்டிற்காக நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஏழை ஒருவர் விலை கொடுக்கிறார் என்பதே உண்மை.  எடுத்துக்காட்டாக, வேளாண்மை மேம்பாட்டிற்காக கானக அழிப்பு நிகழும்பொழுதும் சாலைகள் இடப்படும்பொழுதும் தொழிற்கூடங்கள் அமைப்படும்பொழுதும் பழங்குடியினர் விலைகொடுக்க வேண்டியிருக்கிறது.  அவர்கள் இத்தகு மேம்பாட்டினை எதிர்க்காமல், இதற்கு சாட்சிகளாக சாலையோரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.  நலக்கேடாக, உண்மையான மேம்பாடு எது என்பதை இதுவரை நாம் அறியவில்லை.  1984 ஆம் ஆண்டு போபால் நகரில் ஒரே இரவில் ஈராயிரம் மக்கள் இறந்தபொழுதுதான் மேம்பாட்டிற்கு இருண்ட பக்கமும் இருக்கிறது என்பதனை உணர்ந்தோம்.  அந்த இருண்டபக்கம் நம்மை சுடுகாட்டிற்கே இட்டுச் செல்லும் என்பதனை அறிந்தோம். 

உண்மையான பொருளில் நாம் மதநம்பிக்கை உடையவர்களானால், நாம் ஏழைகளை வணங்க வேண்டும்.  நமது மேம்பாடு அவர்களது தியாகத்தை வேண்டி நிற்கிறது.  ஏழை மக்கள் எழுந்து நின்று தமது பிறப்புரிமைக்காக, மேம்பாடு எனச் சொல்லப்படுபவைக்கு எதிராக, ஓங்கிக் குரல் கொடுப்பதில்லை.  அங்ஙனம் குரல் கொடுத்தால், நாம் எழுந்து நின்று அவர்கள் குரல் கொடுப்பதே குற்றம் என்பதுபோல ஆவேசமாக அவர்களை எதிர்க்கிறோம்.  ஏன் நாம் அவர்களை எதிர்க்கிறோம்?  அவர்களுக்கு தமது நேர்மையான கோரிக்கைகளை நம் முன் எடுத்து வைப்பதற்கு உரிமையில்லையா?  பணக்காரர்கள் கையிலும் வலிமையுள்ளவர்கள் கையிலும் ஏழைகளை வாடவிடுதல் எங்ஙனம் நாட்டுப்பற்றாகும்?

இப்போக்கு நமது சிந்தனையில் எங்கோ தவறு இருக்கிறது என்பதையே  காட்டுகிறது. உண்மையான நாட்டுப்பற்றாளர் யார், அதற்கு எதிரானவர் யார் என்பதனை நாம் முடிவுசெய்ய முடியவில்லை.  சில கற்பித ஆதாயத்திற்காக பேரளவு இழப்பிற்கு நாம் ஆயத்தமாய் இருப்பது பொருத்தமாகவாக இருக்கிறது?  நமது நலத்தினை பாதுகாக்க முனையும்பொழுது அடுத்தவீட்டில் இருப்பவர் நலனை எண்ணிப்பார்ப்பதும் நாட்டுப்பற்றுதான்.  எல்லையற்ற, ஆனால் மிக விரிந்த உருவெளியை உள்ளடக்கிய நாட்டு நலன் என்பது ஒரு தனியாளின் நலனைவிட மிக உயரத்திலேயே எப்பொழுதும் இருக்கிறது.    உண்மையான நாட்டுப்பற்று என்பது ஒருவர் தன் சாதி, சமயத்திற்கு அப்பால் தன்னாட்டு மக்கள் மீதும் தன்னாட்டின் மீதும் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பே ஆகும்.  நாம் இவ்வுண்மையை உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.  அப்பொழுதுதான் உண்மையான நாட்டுப்பற்று எது என்பதனை அறிய முடியும். 

அகம் காட்டும் முகம்

 
                                                               எங்கள் வீட்டுக் கண்ணாடி
                                                                        எதிரே உள்ள எதனையும்
                                                              எந்த மாற்றம் இன்றியே
                                                                       எடுத்துக் காட்டல் போலவே

                                                             என்றன் அழகு முகத்திலே
                                                                      என்றன் உள்ளம் உணர்கின்ற
                                                             எல்லா உணர்வும் தெரியுமே
                                                                       இதனை அறிவேன் நானுமே

வாழ்ந்து தழை!



புள்ளல்லவே? - நீ
புழுவல்லவே? - பின்
புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்?
கல்லல்லவே? - நீ
கசடல்லவே? - பின்
கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்?
மண்ணல்லவே? - நீ
மரமல்லவே? - பின்
மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்?
விழலல்லவே? - நீ
வெற்றல்லவே? - பின்
வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்?

கண்ணைத் திற! - கீழ்
விண்ணை அறி! - இரு
கைகளை ஏனினும் கட்டுகிறாய்?
கூட்டை உடை! - சங்கை
ஊதி எழு! - சேவல்
கூவிய பின்னுமேன் தூங்குகிறாய்?
அச்சம் அறு! - தலை
வணங்க மறு! - பழம்
ஆண்டையைக் கண்டேன் மருளுகிறாய்?
அழுகை விடு! - தாழ்
வகத்தை ஒழி! - விதிச்
சகதியில் ஏனினும் பிறழுகிறாய்?

இலக்கை அமை! - அதை
எட்ட முனை! - அதில்
இடைவரும் தடைகளைத் தாண்டவிழை!
தொடர்ந்து முயல்! - தோன்றும்
துயரம் களை! - உன்றன்
தோள்வலி நன்கு துலங்கஉழை!
விளையும் பயன்! - பகிர்வில்
வேண்டும் சமன்! - அதை
வென்றிடத் தோழமை மறுத்தல்பிழை!
ஒப்பை அழை! - மனம்
ஒன்றி உழை! - இந்த
உலகம் பொதுவென வாழ்ந்துதழை!

காக்கைச் சிறகினிலே - சனவரி 2013 - பக்.32-33

"அட
யாருங்க இப்ப 
சாதி பார்க்கிறா?"

காக்கை சிறகினிலே இதழில்

"அட
யாருங்க இப்ப 
சாதி பார்க்கிறா?"

 
"ஆமா!
யாரு இப்ப
சாதி பார்க்கிறா!!"

சங்கட மடத்துக்கு
அக்னி கோத்திரம்
சைவ மடத்துக்கு
பிள்ளைவாள் மாத்திரம்
பேரூருக்கு
வெள்ளாளக் கவுண்டர்
கோவிலூருக்கு
நாட்டுக்கோட்டைச் செட்டி
சாமித்தோப்புக்கு
நாடார் அய்யா

"அட
யாருங்க இப்ப 
சாதி பார்க்கிறா?" 
"ஆமா!
யாரு இப்ப
சாதி பார்க்கிறா!!"

பார்ப்பனருக்கு
பாரதியார்
வாணியருக்கு
மகாத்துமா காந்தி
வேளாளருக்கு
வ.உ.சிதம்பரம்
கவுண்டருக்கு
பொன்னர் சங்கர்
தேவருக்கு
பசும்பொன் முத்து
சேர்வைக்கு
மருதிருவர்
கள்ளருக்கு
பாப்பாபட்டி மூக்கையா
முதலியாருக்கு
திருப்பூர் குமரன்
கோனாருக்கு
அழகுமுத்து
நாடாருக்கு
காமராசர்

"அட
யாருங்க இப்ப 
சாதி பார்க்கிறா?" 
"ஆமா!
யாரு இப்ப
சாதி பார்க்கிறா!!"

"எஸ்சி தவிர
எவரும் சம்மதம்"
மணமக்கள் தேடி
இந்துவில் விளம்பரம்
"கலப்புத் திருமணமா?
கழுத்துக்கு மேல தலையிருக்காது!"
மாநாட்டொன்றில்
மிரட்டற் பேச்சு
"அந்தத்  தொகுதியில
இந்த ஆள நிறுத்து
இவங்க ஆளுக
அங்க அதிகம்"
தேர்தற்களத்தில்
வேட்பாளர் தேர்வு

"அட
யாருங்க இப்ப 
சாதி பார்க்கிறா?" 
"ஆமா!
யாரு இப்ப
சாதி பார்க்கிறா!!"

கருவறைக் கல்லுக்குப்
பூசை பண்ண
பூணூல் பார்ப்பான்
தெருக்கூட்ட
சாக்கடை வார
பீயள்ள
அருந்ததிக் குடும்பம்

"அட
யாருங்க இப்ப 
சாதி பார்க்கிறா?" 
"ஆமா!
யாரு இப்ப
சாதி பார்க்கிறா!!"

பொறுத்துப்
பொறுத்துப் பார்த்த
குப்பாயி வெடிச்சா....
"காதல் கல்யாணம் கலவி
கல்வி பூசை பதவி
துறவு உறவு நட்பு
வேலை பகை கட்சி
சுடுகாடு இடுகாடு கருமாதி
எல்லாத்துலயும் சாதி பாக்கிறது
நீங்கதாண்டா
களவாணிப் பயலுகளா!!"

காக்கைச் சிறகினிலே - ஆகசுடு 2012 - பக்கம் 25

மு.வ.வைப் பற்றிய மூவா நினைவுகள்

கற்றதைக் கூறும் சாதாரண ஆசிரியர் (கிளிப்பிள்ளையர்?), விரித்துக் கூறும் விரிவுரையாளர், விளக்கிக் கூறும் புலமையாளர், சமூக உணர்வூட்டும் நல்லாசிரியர் என  ஆசிரியர்களை நான்கு வகையினராகப் பிரிக்கிறார் நூலாசிரியர் முனைவர் ம.ரா.போ.குருசாமியார்.  இவர்களுள் தலையாயவரான நல்லாசிரியர் என்பவர் பாடப் பகுதிகளை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு அப்பால், மாணவர்தம் புரவலராக, உற்றுழி உதவும் நண்பராக, வழிவகுத்து நடத்தும் தந்தையாக, தாயாக விளங்குவார் என வரையறுக்கிறார். இந்த வரையறைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்தான் நூற்றாண்டு காணும் தன் பேராசிரியர் முனைவர் மு. வரதரானார் என்கிறார் தொண்ணூறாண்டு காணும் மாணவரான முனைவர் ம.ரா.போ.குருசாமியார்.   இதனை அவருக்கும் தனக்கும் இடையே நிலவிய 30 ஆண்டுகால உறவை நினைவுகூர்ந்து எழுதிய 19 கட்டுரைகளின் வழியாக நிறுவுகிறார். அத்தோடு நல்லாசிரியர், நற்பண்பாளர், கடமை நோன்பிநர், நெகிழ்மனநிலையிநர் என மு.வ.வின் ஆளுமையையும் எடுத்துரைக்கிறார்.

நல்லாசிரியர்:

“கல்வி நிலையத்தின் சுவர்களுக்கு அப்பால் விரிந்து கிடக்கின்ற உலகத்தைப் பற்றியும் மாணவர் தெரிந்து, புரிந்துகொள்கிற வகையில் கற்பிப்பதே ஆசிரியரின் கடமையாகும்” என்கிறது முனைவர் இராதாகிருட்டிணன் தலைமையிலான பல்கலைக்கழகக் கல்வி பற்றிய குழுவின் அறிக்கை. அக்கூற்றிற்கு ஏற்ப, தான் நடத்திய வகுப்புகளிலும் எழுதிய நூல்களிலும் ஆற்றிய சொற்பொழிவுகளிலும் நல்லாசிரியராகத் திகழ்ந்திருக்கிறார் பேராசிரியர் மு.வ.  தன் மாணக்கர்கள் நன்கு கற்க வேண்டும்; தடையின்றிக் கற்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். அதற்காக அம்மாணக்கர்தம் குடும்பத்தாரோடு பேசியும் பொருளுதவி புரிந்தும் தன்வீட்டில் உணவும் உறைவிடமும் வழங்கியும் புரவலராய் இருந்திருக்கிறார்.  
தேர்வில் புதுமையாய் விடையளித்த மாணவருக்கு இரட்டை மதிப்பெண்கள் வழங்கி அச்சிந்தனையை ஊக்குவித்ததோடு "உலகோடு ஒன்றி வாழ்" என எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறார். அந்த புதுமையான விடையை கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்னரும் நினைவுகூர்ந்து ஒரு விழாவில் அந்த மாணவரைப் பாராட்டியிருக்கிறார். மாணவர்தம் உரிமைகளை பல்கலைக்கழகத்திலும் இயக்குநரகத்திலும் போராடிப் பெற்றுக்கொடுத்து உற்றுழி உதவும் நண்பராய் இருந்திருக்கிறார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தி இருந்திருக்கிறார். அவர்கள் வேலைவாய்ப்புப் பெற உதவி, வீடுகட்டிக் கொள்ள வலியுறுத்தி வழிவகுத்து நடத்தும் தந்தையாய், தாயாய் இருந்திருக்கிறார். அதன்பின்னர் அவர்கள் தம் உள்ளத்தை, அறிவை, உடலை, பொருளை மேம்படுத்திக் கொள்வது எப்படி என அவ்வப்பொழுது அறிவுறுத்தி முன்னேற்றத்தின் வழிகாட்டியாக  மு.வ. இருந்திருக்கிறார்.

தான் எழுதிய கட்டுரைகளை, நூல்களை மாணவர்களிடம் படிக்கச் செய்து, அவர்களுடைய கருத்துகளைக் கேட்டிருக்கிறார்.  அவர்கள் கூறிய திறனாய்வுகளை கூர்ந்து கவனித்திருக்கிறார். அவற்றுள் கொள்வன கொண்டிருக்கிறார். தான் படித்த புதினங்கள், நூல்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றி மாணவர்களுடன் ஆய்வுரையாடல் நிகழ்த்தியிருக்கிறார். அப்பொழுது தோன்றிய கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு செந்தாமரை, கள்ளோ? காவியமோ? போன்ற புதினங்களைப் படைத்திருக்கிறார்.

அதேவேளையில் அம்மாணவர்கள் தவறு செய்தபொழுது கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு, உண்மையான கோபத்தோடு கண்டிக்கும் காவலராகவும் இருந்திருக்கிறார். இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து எடுத்துக்கூறுவதன் வழியாக, நல்லாசிரியர் ஒருவரின் பணி, தன் வகுப்பறைக்குள் வரும் மாணவருக்கு அவர்தம் பாடநூலில் உள்ளதைக் கற்பிப்பதோடு முடிவடைவதில்லை; மாறாக அவர்களை நல்ல மாந்தர்களாக மாற்றுவதுவரை தொடர்கிறது என்பதனை இன்றைய ஆசிரியர்களுக்கு நினைவூட்டி, அவர்கள் நல்லாசிரியராகத் திகழும் வழியைக் கூறாதுகூறுகிறார் நூலாசிரியர்.

நற்பண்பாளர்:

மு.வ. பேராசிரியராக, பல்கலைக் கழக துறைத் தலைவராக, துணைவேந்தராக உயர்ந்த பொழுதும் அடக்கமே உருவாக இருந்திருக்கிறார்; துணைவேந்தரான தன்னை, தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வரவேற்க இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் ஆரவாரத்தை விலக்கி, யாருக்கும் அறிவிக்காமற் பல்கலைக் கழகத்திற்குச் சென்று, பொறுப்பை ஏற்றிருக்கிறார். தனக்கு மணிவிழா எடுக்க வேண்டா என மறுத்திருக்கிறார். அமெரிக்கப் பல்கலைக் கழகம் வழங்கிய முதுமுனைவர் பட்டத்தை தன் குடும்பத்தாரிடம்கூடக் காட்டாது தன்னுடைய படுக்கைக்குக் கீழே போட்டு வைத்திருந்து இருக்கிறார்.  இவ்வாறு அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்கு இலக்கணமாக மு.வ. வாழ்ந்ததை நினைவுகூர்வதன் வழியாக, தம் வாழ்வைச் செம்மையாக அமைத்துக்கொள்ள சான்றோர் (Rolemodel) இல்லாது தவிக்கும் இன்றைய தலைமுறைக்கு "இதோ! உங்கள் சான்றோர்!!" என முனைவர் பேராசிரியர் மு.வரதராசனாரை அவர்தம் மாணாக்கர் முனைவர் ம.ரா.போ.குருசாமியார் முன்னிறுத்துகிறார்.

கடமைநோன்பிநர்:

சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு 21 ஆண்டுகள் தொடர்ந்து துணைவேந்தராக இருந்தவரும் உலகப் புகழ்பெற்ற மருத்துவருமான ஆற்காடு இலக்குவமணசுவாமியாரின் வழிகாட்டுதலால்தான் திருப்பத்தூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த வித்துவான் மு.வரதராசன், சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறையின் தலைவர், பேராசிரியர், முனைவர் மு.வ.வாக உயர்ந்து இருந்திருக்கிறார்.  அந்த வழிகாட்டி இயற்கை எய்திய நாளில், மு.வ.விற்கு மதுரையில் இருந்து கடமையாற்ற வேண்டிய கட்டாயம். தன்னுடைய கடமையைத் தடையின்றி நிறைவேற்றுவதா? வழிகாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி செய்நன்றி காத்தலா? என்னும் இக்கட்டான நிலையில், 'முதலிற் கடமை; பின்னர் செய்நன்றி காத்தல்' என கடமை நோன்பிநராக வாழ்ந்திருக்கிறார் மு.வ.  இந்நோன்பு இன்றைய தலைமுறையும் நோற்க வேண்டிய ஒன்றாகும்.

 

நெகிழ்மனநிலையிநர்:

"நல்லவராக மட்டுமன்று வல்லவராகவும் இருக்க வேண்டும்", "உணர்ச்சிக்கன்று; அறிவிற்கே முதன்மை தர வேண்டும்" முதலிய அறிவிற்கு முதன்மைதரும் கருத்துகளைத் தன்னுடைய படைப்புகள் நெடுக வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் எடுத்துரைப்பார் மு.வ.  அதன்படியே தன்னுடைய அறிவுத்திறத்தால் உயர்ந்தவர் அவர். இருப்பினும் அவரும் உணர்விற்கு ஆட்பட்டு நெகிழ்மனநிலையிநராக இருந்திருக்கிறார்.  தன்னுடைய வீட்டிற்கு வந்த திரு.வி.க. உண்டு வீசிய மாதுளைவிதையில் இருந்து முளைத்த மாதுளம் செடியை வெட்டிவிடும்படி பலர் கூறியபொழுதும் மறுத்திருக்கிறார்.  தனக்கு அடையாளம் நல்கிய பச்சையப்பன் கல்லூரியை, பலநாள்கள் தாயின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு அவரது காலடியைச் சுற்றிவரும் குழந்தையாக, பலநாள்கள் சுற்றியிருக்கிறார்.  இறுதிநாளில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும்பொழுது அக்கட்டிடத்தைப் பார்த்து, கையெடுத்து வணங்கியிருக்கிறார். இந்த நெகிழ்மனநிலையை நூலாசிரியர், "பக்தியும் பாசமும் இருக்கும் இடத்திற் பகுத்தறிவு செயலற்றுப் போகும்" என்னும் குறிப்போடு பதிவு செய்கிறார்.  இதன்வழியாக, 'எப்பொழுதும் எதனையும் அறிவுக்கண் கொண்டு மட்டும் நோக்காமல், சற்று உணர்வுக்கண் கொண்டும் நோக்குங்கள்' என வாசகர்களுக்கு நூலாசிரியர் உணர்த்துவதாகக் கருதலாம்.

 

குறையொன்று உளது...

கணினியின் வருகைக்குப் பின்னர் தமிழ்நூல்களின் வடிவழகு கூடியிருக்கிறது. ஆனால், பனுவல்களில் இலக்கணப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் மலிந்துவிட்டன. அதற்கு அச்சகங்களில் மொழியறிந்த பிழைதிருத்துவோர் இல்லாமையும் ஒளியச்சுச் செய்வோரின் மொழியறிவு இன்மையும் காரணங்களாக இருக்கின்றன.  இல்லையென்றால், தமிழிலக்கணத்தில் ஊறிய பேராசிரியரின் இந்நூலிலும் "ஆசு+சிரியன்" (பக்.9), "அப்படியேயா" (பக்.14), "இரவுநேர விலக்கு" (பக்.34), "உரிமையை வீறி மீறியது" (பக்.37), "ஒரு அறிக்கை" (பக்.44), "படித்த முடித்த" (பக். 53), "ரா.பி.சேனுப்பிள்ளை" (பக்.67), "«டி" (பக்.72), "ஒரு அதிர்ச்சி" (பக்.82), "நீஙக்ள்" (பக்.82), "அழீத்து" (பக்.92) முதலிய பிழைகள் இடம் பெற்றிருக்குமா? நூல்களைப் எப்பிழையும் இன்றி அச்சிட்டு வழங்கிய தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் சாது அச்சுக்கூடத்தைப் போல அச்சிடும் இன்னோர் அச்சுக் கூடம் இனியேனும் தோன்றுமா? 
 
நிறைவாய், மாணவர் ஒருவர் தன் ஆசிரியரைப் பற்றி எழுதிய நினைவலைகளாக மட்டும் இந்நூல் திகழவில்லை; இன்றைய ஆசிரியர்கள் தம்மை நல்லாசிரியர்களாக உயர்த்திக்கொள்ளவும் மாணவர்கள் தம்மை நன்மாணாக்கராக வளர்ந்து உயரவும் உதவும் வழிகாட்டியாகவும் இந்நூல் திகழ்கிறது.

மூவா நினைவுகள்; முனைவர் ம.ரா.போ.குருசாமி; பக்கங்கள் 96; விலை 40 உருபாய்;
விஜயா பதிப்பகம், 20 ராஜ வீதி, கோயம்புத்தூர் 1.;  முதற் பதிப்பு அக்டோபர் 2011
 

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...