விருது வேண்டுமா விருது!

2014 நவம்பர் அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை

சில ஆண்டுகளுக்கு முன்னர், அப்பொழுது நான் பணியாற்றிக்கொண்டு இருந்த நிறுவனத்திற்குக் கடிதம் ஒன்று வந்தது. தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயர் அலுவலர் ஒருவர் அதில் கையொப்பமிட்டு இருந்தார்.  அச்சிடப்பட்டு இருந்த அக்கடிதம், அந்நிறுவனம் இச்சமூகத்திற்கு ஆற்றி இருக்கும் அளப்பரிய பணிகளைப் பாராட்டி மூன்று திங்களுக்குப் பின்னர் சென்னையில் நடைபெற இருக்கும் விழாவில் விருது வழங்க இருப்பதை பெருமகிழ்வோடு அறிவித்தது. மேலும் அக்கடிதம் கிடைத்ததும் குறிப்பிட்ட தொலைபேசி எண் ஒன்றில் உடனடியாகத் தொடர்புகொண்டு பேசும்படி அது தெரிவித்தது.  ‘நிலமற்ற ஏழையரின் நிலவுரிமைக்காக வடஇந்தியாவில் போரடிக்கொண்டு இருக்கும் காந்திய இயக்கம் ஒன்றின் பயிற்சி நடுவமான அந்நிறுவனத்தின் எந்த அளப்பரிய பணியை இந்த தமிழலுவலர் அறிந்தார்? எப்படி அறிந்தார்?’ என அறியும் ஆவல் உந்த, கொடுக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணை அழுத்தினேன்.  மறுமுனையில் அந்த தமிழலுவலரின் குரல் ஒலிக்க உரையாடல் தொடங்கியது.

“ஐயா, உங்க கையொப்பத்தோட ஒரு கடிதம் எங்க நிறுவனத்திற்கு வந்திருக்குது.”
“நீங்க அந்த நிறுவனத்தோட பொறுப்பாளரா?”
“ஆமா”
“உங்க நிறுவனத்துக்கு விருது கொடுக்க முடிவுசெஞ்சிருக்கோம். மூணு மாதம் கழிச்சு சென்னயில நடக்கிற விழாவில இந்த விருத கொடுப்போம். விழா பாரிமுனையில இருக்கிற ஏ.சி. அரங்கத்துள நடக்கும். அதுல ஒரு பெரிய இசை அமைப்பாளரோட இன்னிசைக் கச்சேரி இருக்கு. தமிழ்நாட்டோட பல பகுதியில இருக்கிற உங்கள மாதிரி பெரியவங்க நிறயப் பேரு வருவாங்க. அப்ப நீங்க விருது வாங்கினா உங்களோட புகழும் உங்க நிறுவனத்தோட புகழும் தமிழகம் முழுக்கப் பரவும். இல்லீங்களா?” தமிழலுவலர் விற்பனைப் பிரதிநிதிக்கே உரிய திறனோடு ‘விருது வலை’யை வீசத்தொடங்கினார்.

அவரது இலக்கு என்ன என்பதை அறியும் ஆவல் என்னுள் ஊற்றெடுக்க, “இது நீங்க தனியாளா கொடுக்கிற விருதா, இல்லை  எந்த அமைப்பாவது கொடுக்குதா?” என தூண்டிற் புழுவொன்றைத் தூக்கிப்போட்டேன்.

“இல்ல… இல்ல... பதிவுபெற்ற அமைப்பு ஒண்ணுதான் இந்த விருத தருது. அதுக்கு நான்  தலைவரா இருக்கேன். அன்னைக்கு உங்கள மாதிரி 300 பேருக்கு விருது கொடுக்கப்போறோம்.  நீங்க மதுர இல்லையா? அப்ப காலைல வைகைல கிளம்பி வந்தா விருது வாங்கிட்டு விழா முடிஞ்சு பாண்டியன்ல ஊருக்குத் திரும்பிரலாம்.  உங்க வேல கெடக்கூடாது பாருங்க. அதுனாலதான் இப்படி ஏற்பாடு பண்ணியிருக்கோம்.” என்று என அந்தத் தூண்டிற் புழுவைப் பிடித்து எனக்கு திருப்பிப் போட்டார். “அப்படியா!” என்றேன். இந்த மீன் சீக்கிரம் சிக்கிவிடும் என நினைத்தார் போலும். உரையாடலைத் தொடர்ந்தார்.

“ஆமாங்க ஐயா.  உங்க முழுவுருவப் புகைப்படத்த மறக்காம அனுப்பி வைச்சுருங்க. அத விருதுக் கேடயத்துல சிலை மாதிரி நிறுத்தி வைக்கனும். அப்புறம் சென்னயில 300 பேருக்கு விருது. ஏசி அரங்கு. இன்னிசைக் கச்சேரி. இதுக்கெல்லாம் கொஞ்சம் செலவாகும். அதுனால நீங்க உங்க பங்களிப்பா ஒரு மூவாயிரம் ரூபாயும் அந்த புகைப்படத்தோட அனுப்பி வைச்சிங்கன்னா நல்லாயிருக்கும்.”
“முதல்ல நிறுவனத்துக்கு விருதுன்னு சொன்னிங்க. இப்ப எனக்கு விருதுன்னு சொல்லிறீங்க”
“உங்களுக்குன்னா என்னா, உங்க நிறுவனத்துக்குன்னா என்னா. எல்லாம் ஒண்ணுதான.”
“எங்க நிறுவனத்த உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“டெலிபோன் டைரக்டரில பாத்தேன்”

எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. உரையாடலைத் துண்டித்தேன்.  சில திங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள பல அலுவலங்களில் அந்த தமிழலுவலரிடம் வாங்கிய விருதுக் கேடயங்கள் காட்சி அளித்தன.

அதன் பின்னர், இதுபோன்ற “விருது”கள் பற்றி பலரிடம் உசாவியபொழுது, அவற்றுள் பலவற்றின் பின்னணிக் கதைகள் இதனைப்போலவே இருந்தன.  இவ்வாறு ‘விருது விற்றல்’ நிகழ்வின் நோக்கங்களாக விருது வழங்கும் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதும் அதன் நிறுவனருக்கு புகழொளி கூட்டுவதாகவுமே இருக்கின்றன. தகுதியற்று இவர்கள் விற்கும் விருதுகளை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள். சிலவேளைகளில் அதுநாள் வரை கண்டுகொள்ளப்படாத தகுதியுடையோர் சிலரும் இந்த விருதுகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 

புகழ்பெறாதவர்கள் புகழ்பெறும் நோக்கத்தோடு புகழில்லாதவர்களுக்கு விற்கும் விருதுகள் ஒருபுறம் என்றால் புகழ்பெற்றவர்கள் புகழ்பெற்ற நிறுவனத்தின் வழியாக புகழ்பெற்றவர்களுக்கு வழங்கும் விருதுகள் மற்றொரு வகை. இந்த ‘புகழ் விருது’களின் நோக்கங்கள் வழங்குபவரைப் பொருத்து மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன.   தன்னை தானே விளம்பரம் செய்துகொள்ளும் வித்தையைக் கற்ற ஒருவர் கொடுக்கும் விருதின் நோக்கம் தன்னை மேலும் விளம்பரம் செய்துகொள்வதாக இருக்கிறது.   பரம்பரைச் செல்வந்தர்கள் சிலரும் திடீர் செல்வந்தர்கள் பலரும் தகுதியுடைய சிலருக்கு தத்தம் நிறுவனங்களின் வழியோ, தாம் புரவலராக இருக்கும் நிறுவனங்கள் வழியோ ‘விருது’களை வழங்கி தம் மீது வீசப்படும் அல்லது வீசப்படக் காத்திருக்கும் விமர்சனக் கணைகளை மறைக்க அல்லது மறக்கவைக்க முனைகிறார்கள்.  முற்போக்குப் பார்வை, அறநோக்கு வாழ்க்கை என தம் படைப்புகளின் வழியே உரத்து முழங்கிய தகுதியுடைய சிலர், இந்த தகுதியற்றவர்களிடம் விருதுகள் பெறும்பொழுது, தம்நிலையில் இருந்து அவலவீரர்களாக வீழ்ந்துவிடுகிறார்கள்.

தனியார் விற்கும் அல்லது வழங்கும் இத்தகு விருதுகளின் கதை இதுவென்றால்,  இந்திய இலக்கிய மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ‘இலக்கியக் கழகம்’ (சாகித்திய அகாதெமி) 1955ஆம் ஆண்டு முதல், இடையில் ஐந்தாண்டுகள் நீங்கலாக, ஒவ்வோராண்டும் விருது வழங்குகிறது. அவ்விருதை வழங்கத் தொடங்கிய நாளில் இருந்தே தொடங்கிய முணுமுணுப்புகள் மெல்ல மெல்ல வளர்ந்து, கவிஞர் தமிழ்நாடன், “சாகித்திய அகாதெமி தமிழ் விருதுகள் சில விவரங்கள் விசாரங்கள்” என்னும் சிற்றேடு  ஒன்றினை எழுதும் அளவிற்கு வளர்ந்தது.  தகுதியுடையவர்களுக்கு காலம் கடந்து வழங்கப்பட்டது, தகுதியுடையவரின் தகுதியற்ற படைப்பிற்கு வழங்கப்பட்டது, தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டது என இவ்விருது பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருக்கின்றன.   தமிழ்மொழியின் ஞானபீட விருது என்று புகழப்பட்ட தமிழ் பல்கலைக் கழகத்தின் இராசராசன் விருது வெகு சிலருக்கே வழங்கப்பட்டு அரசியல் காரணங்களால் முடக்கப்பட்டுவிட்டது. அவ்விருது வழங்கப்பட்ட பொழுது பல கண்டனங்களும் கருத்தாடல்களும் முகிழ்த்தன.  தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளைப் பெறுவதற்கு உரிய தகுதிகளைவிட, அரசியல் தகுதிகள் அதிகம் தேவைப்படுவதாக பேச்சுகள் நிலவுகின்றன.  இருப்பினும் படைப்பாளர்களுக்கு விருதுகொடுத்துப் பாராட்டுவதற்குத் தகுதியுடையனவாக இந்த அமைப்புகள் இருக்கின்றன என இலக்கிய உலகம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது.  எனவேதான், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இவ்வமைப்புகள் ஓவ்வோராண்டும் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரை அறிவித்ததும் அத்தேர்வு பற்றி வெளிப்படையான கருத்தாடல்கள் நிகழ்கின்றன.  பாராட்டுகளும் கண்டனங்களும் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால்,  விளம்பர விருதுகள் பற்றி இதுபோன்ற கருத்துரைகளோ, கண்டனங்களோ பொதுவெளியில் உரைக்கப்படுவது இல்லை.  இதனால் இத்தகு விருதுகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டு இருக்கிறது.  விருது வழங்கியவர்கள் தம்மை தமிழ்க்காவலராகக் கருதிக்கொள்கிறார்கள். தகுதியுடைய தமிழறிஞர்கள் சிலர் இவர்களுக்குத் துணையாக இருப்பதுதான் வேதனையின் உச்சம்.  தகுதியுடைய படைப்பாளரை ஏற்று, பாராட்டி, புகழந்து, கொண்டாடி ஊக்குவிக்க தகுதியுடையவர்கள் தவறும்வரை இந்த அவலங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.  

இவைகளுக்கு அப்பால்,  கலை - இலக்கிய மேம்பாட்டில் உண்மையான அக்கறையும் படைப்பாளிகளைப் பாராட்டி ஊக்குவிப்பதில் தன்னலமற்ற விருப்பமும் உடைய அமைப்புகள் சில இல்லாமற் போய்விடவில்லை.  அந்த அமைப்புகள் நல்லறிஞர்கள் உதவியோடு விருதிற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து பாராட்டுகின்றன. அதனால் அவ்வமைப்புகள் தம்முடைய நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றன.  அதனால் அவை அறிவிக்கும் விருதுகளுக்கு மதிப்பும் அதனைப் பெறுபவர்களுக்குப் பெருமிதமும் ஏற்படுகின்றன.   இத்தகு அமைப்புகளின் எண்ணிக்கை பெருகுவதும் அவற்றின் தரம் ஆண்டிற்கு ஆண்டு உயர்வதும் இலக்கிய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.  


விருது பெறுவதற்கான தகுதி தனக்கு இருந்தும், தகுதியுடைய அமைப்பு விருதுகொடுக்க முன்வந்தும் அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்த சான்றோர்கள் சிலரும் தமிழிலக்கிய உலகில் இருந்தனர்;  இருக்கின்றனர் என்பது பலருக்கு வியப்பாக இருத்தல் கூடும். மணிக்கொடி எழுத்தாளர் குழாத்தைச் சேர்ந்தவரும் எழுத்து இதழின் ஆசிரியருமான சி.சு.செல்லப்பா அத்தகவையர்களில் குறிப்பிடத்தக்கவர்.  தகுதியுடைய நிறுவனங்கள் மட்டுமே அவருக்கு விருதுகொடுக்க முன்வந்தன;  ஆனால் அவரோ அவ்விருதினை மறுத்தார். அம்மறுப்பின் வழியாக அவ்விருதிற்கும் அவ்வமைப்பிற்கும் பெருமை சேர்ந்தது.  அத்தகு சான்றோரும் தகமைசால் அமைப்பும் பெருக்கும் வரை “விருது வேண்டுமா விருது” என்னும் வணிக்குரல் இலக்கியத் தெருவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். அதனை, “எனக்கு ஒன்றும் அவருக்கு ஒன்றும் கொடு” எனக் கேட்டு வாங்குபவர்கள் வலம்வந்துகொண்டுதான் இருப்பார்கள். நாம்தான் அவர்களை இனங்கண்டு ஒதுக்கப் பழக வேண்டும்!


20140927

வளர்த்த யாகம்
வழங்கிய தானம்
செய்த பூசை
சேர்த்த செல்வம்
அனைத்தும் உதவா
ஆசையும்ஆணவமும்
அளவினை மீறும்காலை!

அறிவுரையின் நூற்றாண்டு



தில்லையாடியில் உள்ள வள்ளியம்மை நினைவு மண்டபம்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் சீர்காழியில் இருந்து நாகபட்டினத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தபொழுது, திருக்கடவூரைத் தாண்டியதும் சாலையின் வலதுபுறத்தில் இருந்த அந்தத் தோரணவாயில் கண்ணிற்பட்டது.  அதிலிருந்த தில்லையாடி என்னும் பெயர் பசுமை இலக்கியவாணர் பாமயனையும் என்னையும் ஈர்த்தது.  “தென்னப்பிரிக்க சத்தியாக்கிரகத்தில் இறந்த வள்ளியம்மையின் பெயருக்கு முன் இருக்கும் தில்லையாடி இதுதானா?” என வினவினார் பாமயன். இதுதான் என்றார் எங்களோடு வந்தவரும் அப்பகுதியில் 1969 ஆம் ஆண்டு முதல் நிலவுரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் கிருட்டிணம்மாள் – செகநாதன் இணையரின் பெயரனுமான காந்தி.  “ஊருக்குள் போய் பார்க்கலாமா?” என்றேன் நான். எங்களது மகிழுந்து தோரணவாயிலில் இருந்து தொடங்கும் கிளைச் சாலையில் திரும்பியது.  “இப்பா ஏதோ ஒரு சினிமா பாட்டுல தில்லையாடி வள்ளியம்மைன்னு பாடி பிரச்சனையா இருக்க அந்த தில்லையாடி வள்ளியம்மை ஊரா அண்ணே இது?” என காந்தியை வினவினார் மகிழுந்து ஓட்டுநர். “ஆமா அந்த ஊருதான்” என காந்தி கூற, நெடுஞ்சாலையில் இருந்து ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் மேற்கு நோக்கி வந்திருந்தோம்.   எதிரே தாமரைப்பூத் தூண் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதன் பின்னால் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம் என பெயர் எழுதப்பட்ட கட்டிடம் தெரிந்தது. மகிழுந்தைவிட்டுக் கீழே இறங்கினோம்.  காந்தி எங்களை மண்டபத்திற்குள் அழைத்துக்கொண்டு போனார். 

 
வள்ளியம்மாள் சிலை
             உள்ளே நுழைந்தால் வாயிலுக்கு அருகில் வள்ளியம்மாளின் மார்பு அளவுச் சிற்பம் ஒரு  மேடையின் மீது இருத்தப்பட்டு இருக்கிறது.  அதற்குப் பின்னே பெரிய அரங்கம்.  அதன் மேற்குச் சுவரில் காந்தியின் உருவம் பெரிய அளவில் வரையப்பட்டு இருக்கிறது.  சிலைக்கு அருகில் நின்று அந்தப் படத்தைப் பார்த்தபொழுது, காந்தி மண்டபம் ஒன்றை வள்ளியம்மாளின் சிலைக்கு அருகில் நின்று பார்க்கும் உணர்வே எனக்கு ஏற்பட்டது. மண்டபத்தின் வடக்குச் சுவரின் ஒரு பகுதியில் வள்ளியம்மாளின் வரலாறு கல்வெட்டாகப் பதிக்கப்பட்டு இருக்கிறது.  காந்தியின் படம், கல்வெட்டு ஆகியவை நீங்கலாக, நான்கு சுவர்களின் பிற இடங்களை அப்பகுதியில் இருந்து தென்னப்பிரிக்காவிற்குச் சென்ற மக்கள் பலரின் பழுப்பேறிய தனிப்படங்களும் குழுப்படங்களும் நிறைந்திருக்கின்றன. அவற்றை பெரும் அக்கறையோடு தேடிக் கண்டெடுத்து அங்கு காட்சிக்கு வைத்த பெயர் தெரியாத அந்த அரசு அலுவலரைப் பாராட்டிக்கொண்டே, அப்படங்கள் ஒவ்வொன்றையும் நாங்கள் நால்வரும் பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்பொழுது, “தில்லையாடி வள்ளியம்மைன்னு பள்ளிக்கூட பாடப்புத்தகத்துல ஒருவரியில வந்துட்டுப்போன பெயருக்கு பின்னால ஒரு பெரிய வரலாறு இருக்கும் இதுவரைக்கும் தெரியாதே” என்றார் ஓட்டுநர்.  “தாத்தாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லிக் கேட்டு இருக்கேன். காந்தியோட 24 வயதுல இருந்து 45 வயதுக்குள்ள நடந்த தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்தான் அவர மகாத்துமாவா மாத்துச்சாம்” என்றார் காந்தி. “உண்மதான். காந்திக்கு மகாத்துமான்னு தாகூர் பட்டம் கொடுக்கிறதுக்கு முன்னாடியே அவரு தென்னாப்பிரிக்காவில நடத்துன போராட்டத்தக் கேள்விப்பட்ட ஜி.சுப்பிரமணியன் 1912இல சுதேசமித்திரன் தலையங்கத்துல காந்திய ‘ஒரு மகாத்துமாவோ’ன்னு பாராட்டி இருக்காரு. 1918இல சென்னைல இருந்த கணேஷ் அன் கோ’ங்கிற பதிப்பகம் “தற்காலத்தின் கதாநாயகர்கள்” (Heros of the hour) என்கிற புத்தகத்தில ‘மகாத்துமா காந்தி’ன்னு ஒரு கட்டுரைய வெளியிட்டிருக்கு.” எனக்கூறிய பாமயன், “தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகத்தோட தொடக்கமே பாலசுந்தரங்கிற தமிழ் ஒப்பந்தத் தொழிலாளியோட உரிமைக்கான வழக்கிலிருந்துதான் தொடங்குது. நாகப்பன், நாராயணசாமி, வள்ளியம்மை இந்த மூணு பெயரும் அந்தப் போராட்டத்தில இறந்த தமிழர்கள்.” என்றும் கூறினார். அந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டே படங்களை பார்த்துக்கொண்டு இருந்த எனது மனதிற்குள் காந்தி எழுதிய “தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்” நூலில் உள்ள காட்சிகள், எதிரே இருந்த படங்களின் செல்வாக்காமல் பழுப்பு நிறத்தில் ஓடத் தொடங்கியன.  

தம் பொருள்களுக்கு சந்தையைத் தேடிக்கிளம்பிய ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிக்காவின் நேட்டால் (NATAL) பகுதியில் கரும்பு பயிடலாம் என அறிந்தார்.  உள்ளூர் மக்களான சூலூகள் தமது ஆறு மாதம் உழைப்பில் ஈட்டும் வருவாயில் ஓராண்டு முழுவதும் வாழும்நிலையில் இருந்தார்கள். ஆகவே அவர்கள் ஆங்கிலேயருக்கு பணிசெய்ய விரும்பவில்லை. எனவே, இந்தியர்களை வேளாண்மையில் ஈடுபடுத்த முடிவு செய்தனர். இந்தியாவிலிருந்து ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் நேட்டால் வந்து பணியாற்றுவோர் அதன்பின்னர் குடியேறவும் நிலமும் வைத்துக்கொள்ளலாம் என இந்திய வைசுராக்குத் தெரிவித்தனர்.  அதன் விளைவாக தமிழகம், உத்திரப்பிரதேச மாநிலங்களில் இருந்து சென்ற இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் முதலணியினர் 1860 நவம்பர் 16ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் நேட்டால் மாகாண துறைமுகமான டர்பனைச் சென்றடைந்தனர். அவர்களைத் தொடர்ந்து பல இந்தியக் குடும்பங்கள் அங்கே சென்றனர். ஒப்பந்தக் காலம் முழுவதும் அடிமைகளைப் போல வாழ்ந்தனர். கரும்பு வயல்களிலும் சர்க்கரை ஆலைகளிலும் கடுமையாக உழைத்தனர். இந்தியாவிலிருந்து தம்மோடு கொண்டுவந்த விதைகளை கறிகாய்களையும் உள்ளூர் கறிகாய்களை குறைந்த செலவிலும் பயிரிட்டனர். ஒப்பந்தக் காலம் முடிந்ததும் அவர்கள் ‘விடுவிக்கப்பட்ட இந்தியர்’களாக மாறி வணிகத்தில் ஈடுபட்டனர். நிலமும் வீடும் வாங்கினர்.  அம்மக்களைப் போலவே புதுச்சேரி முனுசாமி முதலியாரும் அவர் மனைவி தில்லையாடி சானகியம்மாளும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக  தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று உழைத்து விடுவிக்கப்பட்ட இந்தியர்களாக காய்கனிக் கடை நடத்தினர். அவர்களுக்கு வள்ளியம்மை 1898 ஆம் ஆண்டில் பிறந்தார்.   உரிய வயதில் அங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்தார்.

விடுவிக்கப்பட்ட இந்தியர்களின் முன்னேற்றத்தைக் கண்ட இந்திய வணிகர்கள் பலரும் அங்கே வணிகம் செய்யச் சென்றனர். அப்படிச் சென்ற வணிகர் ஒருவரது நிறுவனத்தின் வழக்குரைஞராகத்தான் 1893 ஏப்ரலில் காந்தி தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். 

2008ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறை வள்ளியம்மாள் நினைவாக வெளியிட்ட அஞ்சல்தலை

இப்படி நிறைய இந்தியர்கள் வந்து தமது வணிகத்திற்குப்  போட்டியாக மாறுவதைத் தவிர்க்க விரும்பிய ஆங்கிலேயர்கள் ஒப்பந்தக் காலம் முடிந்ததும் இந்தியர்கள் தம் தாயகம் திரும்பிவிட வேண்டும். திரும்ப விரும்பாதவர்கள் ஒவ்வோராண்டும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். திரும்பிச் செல்லவோ, ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவோ விரும்பாத 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் 13 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் 25 பவுண்டு வரி செலுத்த வேண்டும் என 1893 ஆம் ஆண்டில் இந்திய வைசுராய் எலிசின்னுக்குத் தெரிவித்தனர்.  அவரோ அதனை மூன்று பவுண்டாகக் குறைக்கலாம் என்றார்.  அத்தொகை ஒப்பந்தத் தொழிலாளர் ஒருவரின் ஆறு மாதஊதியம் ஆகும்.  இதனை எதிர்த்து அம்மக்கள் போராட்டத் தொடங்கினர். அதனை அடுத்து 1894 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வாக்குரிமைத் திருத்த பிரேரணை, இந்திய வணிகர்களின் வாக்குரிமையைப் பறிப்பதாக இருந்தது. அதனை எதிர்க்க 1984 ஆகத்து 22ஆம் நாள் நேட்டால் காங்கிரசு என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் நேட்டால் மாகாண வாழ் இந்தியர்கள் டிரான்சுவால் மாகாணத்திற்குள் நுழைவதற்கு புதிதாக உருவாக்கப்பட்ட ஆசிய விவகாரத் துறையிடம் அனுமதிபெற வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இதனால் தென்னாப்பிக்கா இந்தியர்கள் இடம்பெயர்வதே சிக்கலாக மாறியது.   1906 ஆகத்து 22ஆம் நாள் வெளியிடப்பட்ட அவசரச் சட்டம் இந்தியர்கள்  ஒவ்வொருவரும் ஆசிய விவகாரத் துறையிடம் தமது பெயரையும் கைரேகையையும் பதிவுசெய்து அனுமதி அட்டையைப் பெற வேண்டும் எனக் கூறியது. அதனை இந்தியர்கள் கறுப்புச்சட்டம் என அழைத்தனர். அதனை எதிர்த்து அறப்போர் நடத்துவது என 1906 செப்டம்பர் 11ஆம் நாள் முடிவெடுக்கப்பட்டது.  இந்தியர்கள் டிரான்சுவல் மாகாணத்திற்குள் நுழைவதைத் தடுக்க 1907ஆம் ஆண்டில் டிரான்சுவல் குடியேற்றநுழைவுத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து டிரான்சுவல் மாகாணத்திற்குள் நுழையும் போராட்டம் நடத்தப்பட்டது.  இப்போராட்டத்தில் நாகப்பன், நாராயணசாமி என்னும் இரு தமிழர்கள் மாண்டனர்.   இச்சட்டங்களுக்கு எல்லாம் உச்சமாக 1913 மார்ச் 14ஆம் நாள் கேப்டவுன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி செரேல் என்பவர் வழக்கொன்றிற்கு வழங்கிய தீர்ப்பில் திருமணப் பதிவாளரின் பதியப்பட்ட கிறித்துவத் திருமணங்கள் தவிர பிற திருமணங்கள் தென்னாப்பிரிகாவில் சட்டப்படியான தி
ருமணங்களாகக் கருதப்பட மாட்டா எனத் தீர்ப்பளித்தார். இதனால் இந்து, இசுலாமிய, பார்சிய முறைப்படி நடந்த திருமணங்கள் அனைத்தும் செல்லாதவை ஆகிவிட்டன. திருமணமான இந்தியப் பெண்கள் மனைவி என்னும் தகுதியை இழந்து காமக்கிழத்தியர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.   எனவே அதுவரை அறப்போரில் ஈடுபடுத்தப்படாமல் இருந்த பெண்களை அறப்போரில் ஈடுபடுத்துவது என முடிவு செய்யப்பட்டது. 


சோகன்சுபெர்க் நகரில் இருந்த டால்சுடாய் பண்ணையில் வாழ்ந்த 11 பெண்கள் வீரம்மாள் என்பவர் தலைமையில் அனுமதிபெறாமல் டிரான்சுவால் பகுதியில் இருந்து நேட்டால் பகுதியில் உள்ள நியூகேசில் நிலக்கரிச் சுரங்கத்திற்குச் சென்று அங்குள்ள தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. சட்டத்தைமீறி டிரான்சுவால் எல்லையைக் கடந்த பெண்களை அரசு கைது செய்யவில்லை. எனவே நேட்டால் பகுதியின் பீனிக்சு பண்ணையில் வாழ்ந்த 16 பெண்கள் டிரான்சுவால் எல்லைக்குள் நுழையக் கிளம்பினர். அவர்கள் 1913 செப்டம்பர் 23ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து சோகன்சுபெர்க் நகரில் இருந்து அடுத்த பெண்கள்அணி நியூகேசிலை நோக்கிக் கிளம்பியது. இந்த அணியில்தான் வள்ளியம்மையும் அவர்தாய் ஜானகியம்மாளும் கிளம்பினர்.  அவர்கள் அனைவரும் 1913 அக்டோபர் 23ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு மாரிட்சுபெர்க் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். வள்ளியம்மை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.  எனவே அவரைத் தண்டனை முடிவதற்கு முன்னரே விடுதலை செய்தனர். வள்ளியம்மையை ஒரு போர்வையில் கிடத்தி, தொட்டிலில் தூக்கி சிறைக்கு வெளியே கொண்டுவந்தனர்.  அவரை சந்தித்த காந்தி, “நெட்டையான உருவமுடைய அப்பெண் உடலி மெலிந்து படுக்கையில் கிடந்தாள்” என்கிறார். அந்நிலையிலும் வள்ளியம்மை மீண்டும் சிறைக்குச் செல்லும் மனவுறுதியோடு இருந்தார். வெளியே வந்த சிலநாள்கள் கழிந்து 1914 பிப்ரவரி 22ஆம் நாள் மரணமடைந்தார்.  அவரது உடலை சோகன்சுபர்க் நகர பிராம்பவுன்டின் இடுகாட்டில் புதைத்து கல்லறை எழுப்பினர். அதன்மீது “சாத்துவீக எதிர்ப்பாளராக மாரிட்ஸ்பர்க் சிறைக்குச் சென்று அங்கு நோயுற்று 1914ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் நாள் காலமான எங்களது சகோதரியின் அன்பான நினைவுக்கு” எழுதி வைத்தனர்.

காந்தி 1915ஆம் ஆண்டில் தில்லையாடிக்கு வந்ததன் நினைவுவாக எழுப்பப்பட்டுள்ள தூணின் முன்னர் பாமயனும் காந்தியும்

நாங்கள் அங்கிருந்த படங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தபொழுது, உள்ளூர் இளைஞர் ஒருவர் கையில் புத்தகம் ஒன்றோடு அங்கு வந்தார். அவரிடம் வாசலில் இருக்கும் நினைவுத்தூண் எதற்காக நிறுவப்பட்டது என வினவினேன்.  “காந்தி 1915 மே 1ஆம் நாள் தில்லையாடிக்கு வந்தார். தென்னாப்பிரிக்கா அறப்போரில் கலந்திக்கிட்டவங்க சிலரு இங்க இருந்தாங்க. அவர்கள இந்த இடத்திலதான் சந்திச்சாரு. அதுனால அவர் நினைவாக இத்தூண ஊன்றியிருக்காங்க” என்றார். “வள்ளியம்மை உறவினர்கள் யாரும் இங்கே இருக்காங்களா?” என வினவினேன். “வள்ளியம்ம வாரிசுகளுக்கு அரசு உதவித்தொகை கொடுக்கப் போகுன்னு கொஞ்ச நாளுக்கு முன்னாடி யாரோ வந்ததியக் கிளப்பிவிட்டாங்க. உடனே இரண்டு சாதிக்காரங்க, அவரு எங்க சாதி, உங்க சாதி இல்லன்னு சண்டபோட ஆரம்பிச்சிட்டாங்க” என்றார். இதைக் கேட்டதும் 1914 சூலை 15ஆம் நாள் சோகன்சுபர்க் நகரில் உள்ள பிராம்பவுன்டின் கல்லறையில் நாகப்பனுக்கும் வள்ளியம்மைக்கும் நடுகல் ஊன்றும் நிகழ்வில் பங்கேற்ற காந்தி, “தமிழர்கள் பொறாமை உணர்ச்சியையும் சாதி வேற்றுமை பாராட்டுவதையும் கைவிட வேண்டும்.” என தமிழர்களுக்கு அறிவுரை கூறியது மின்னலாய் நினைவில் தோன்றி மறைந்தது. அவர் கூறிய அறிவுரையின் நூற்றாண்டு இது. ஆனால் அந்த அறிவுரைக்கு இன்னும் தேவை இருப்பதுதான் தமிழ்ச் சமூகத்தின் கொடுமை.  


அம்ருதா இதழின் 2014 செப்டம்பர் மடலில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது.

ஆகஸ்ட் 6

கிரோசிமா நகரைச் சூழ்ந்த அணுமேகம்

சமூக முகத்தின் பருக்களான
‘நான்’களின் சேர்க்கையால்
பிண்ட மனிதர்களையே பெற்றுப்போடும்
கிரோசிமாவில்
வெடித்த குண்டில் பிறந்த நான் –
இறுமாப்பில்லை
எதிர்வரும் அழிவின் எச்சரிக்கை
இயற்கைக் காம்பஸ் கிழித்த
எட்டாவது வட்டத்தின் வழியே
சூரியப்புள்ளியைச் சுற்றிவருகிற
நெப்டியூன்  கிரகத்தை நிரடிப் பார்க்கும்
அறிவியற் கையின் அழுகிய விரல்
செத்துப் பிறந்த
சோக நினைவின் சின்னம்
பூமியின் சுழற்சியில் பிறந்து மறையும்
நாற்றூசியில்லை
சுவஸ்திக் கொடியால்
கழுகும் கரடியும் சிங்கமும்
நரிகளாய் மாறிய நாளின்
நினைவுச் சின்னம்.
நான்
மஞ்சள் சப்பானியர்களின்
மரணத்தை மட்டுமே குறிக்கும் குறியீடில்லை
கல்பாக்கத்தில் காலூன்றி
கூடங்குளத்தில் குதித்திருக்கும்
கொலைக்களங்களின் முகவரி

(1989 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உரைவீச்சு)

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...