வே. வேங்கடாசலபதி சிவகங்கையில் வாழும் சமூகச்செயற்பாட்டாளர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தலித்கள், குழந்தைகள், மீனவர்கள் உள்ளிட்ட விளிம்புநிலையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து வினையாற்றுபவர். அவை பற்றி கட்டுகரைகளும் பாடல்களும் இயற்றும் இவர், கவியோகி சுத்தானந்த பாரதியாருக்கு பெயரன் முறையினர். 2010 செப்டம்பர் 19 ஆம் நாள் நிலவுரிமை பற்றி எழுதிய கட்டுரை இங்கே பதியப்படுகிறது.
உயிரினங்களுக்கு இயற்கை அளித்துள்ள உன்னதமான பரிசுகளில் நிலம் ஒன்றாகும். உயிர் வாழ்க்கை இப்பூவுலகில் தொடருவதற்கு நிலமும் அடிப்படை ஆதாரமாக உள்ளது. விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இன்னும் கண்ணுக்குப் புலப்படதா எண்ணற்ற உயிரனங்கள் நிலமகளுக்கு உறுதுணையாக உள்ளன. இயற்கையை அண்டி வாழ்ந்தாலும் இவ்வுயிரினங்கள் இயற்கையின் எதிரிகளாக இருப்பதில்லை. மனித இனம் மட்டுமே இயற்கையை வரம்பற்று சுரண்டி வாழ்கின்றது. மனித இனம் இயற்கை வளங்கைள தன் சுயதேவைகளுக்கு மிதமிஞ்சிய போக்கில் சுரண்டி அழிக்கிறது. இயற்கையின் விதிமுறைகளையும், தன்மைகளையும் அறிந்து அதற்கு தக்கவாறு மனித இனம் இயற்கையை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறிந்தோ அறியாமலோ நடக்கும் இந்தச் சுரண்டல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டுதான் போகின்றது. இந்தச் சுரண்டலைத் தாங்காமல் இயற்கையும் தனது வலுவை அவ்வப்பொழுது காட்டத் தவறுவதில்லை. ஆனால், மனித இனம் இயற்கையின் அச்சுறுத்தலையெல்லாம் சிறிதும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
இவ்வாறாகிய தவறான இயல்பு வளர்ந்துருப்பெற்ற மனித இனம் தனக்குள்ளேயும் சுரண்டல் விளையாட்டுகளை ஆடுகின்றது. தன்னைவிடப் பன்மடங்கு வலுவாய்ந்த இயற்கையையே தனக்கு அடிமையாக்க எண்ணும் மனிதர்கள், தங்களுக்குள்ளேயும் அடிமைப்படுத்தி வைக்கவும், சுரண்டலுக்குள்ளாக்கவும் ஒரு தரப்பினரை உருவாக்கி வைத்துள்ளனர். வளங்களும் வாய்ப்புகளும் வளர்ச்சியும் சமமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பது நெறியாகும். இந்நெறிக்கு மாறாக சமூகத்தின் போக்கு இருக்குமேயாயின், அதைச் சீர்படுத்தி செம்மை செய்வது மனித நேயம், சமூக நீதி, சம மேம்பாடு, இயற்கைசார வாழ்வு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டோருக்கு முதல் பணியாகும். இயற்கைப் பொதுவளமான நிலம் சமனற்ற வகையில் உடைமையாக்கப்பெற்றும் எதிர்மறைப் பயன்பாட்டிற்கு மிகுதியாக உட்படுத்தப்பெற்றும் பல்வேறு வகையான சமூக-பொருளாதார ஏற்றதாழ்வுகள் உண்டாகி நிலைக்க அடிப்படையானதாகவும் மாற்றப்பெற்றுள்ளது.
இன்றைய நிலையில் நிலவுடைமையானது சமூகப் பொருளாதார தரவரிசையைத் தீர்மானிப்பதாகவும், ஓட்டு அரசியலை நிர்ணயிக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்த நிலவுடைமை ஒரு சாராரிடம் மிகுதியாக இருக்கும் பொழுது நிலவுரிமை மறுக்கப்பெற்று வஞ்சிக்கப்பெற்ற வர்க்கம் ஒன்று உருவாகின்றது. தங்கள் உடலுழைப்பைத் தவிர பொருளீட்ட உதவும் பெரிய அளவிலான வேறெந்தப் பொருள் வளங்களோ, சொத்துகளோ இல்லாத உழைக்கும் ஏழை மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதே இவ்வர்க்கம். இவ்வாறாகிய ஏற்றதாழ்வு மிக்க சமூக-பொருளாதாரச் சூழலில் சமமான மேம்பாடு, நீடித்த மேம்மாடு என்பதெல்லாம் எவ்வாறு சாத்தியமாகும்? எனவே, நிலம், நிலவுடைமை தொடர்புடைய அநீதிகளையும், சர்ச்சைகளையும் உடனே முடிவுக்குக் கொண்டு வருவது குறித்துத் தீர ஆராய்ந்து திட்டம் வகுத்துச் செயலாற்ற வேண்டிய தருணம் இது. நிலமற்ற ஏழைகளை ஏறெடுத்துப் பார்க்காத இன்றைய சமூக அமைப்பு, பொருளாதாரத் திட்டங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியவைதானே! ஓட்டு அரசியலைத் தாண்டியதொரு சாமான்ய மக்களின் அரசியல் உள்ளது. அதை வலுப்படுத்தி நடைமுறையில் செயல்படச் செய்தல் நிகழ்காலத்தின் நிர்ப்பந்தம். எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளை எட்டிப்பிடிக்க உடனடியாக செயல்படுத்த வேண்டிய உத்தியாகும். இதை நோக்கி மக்களை ஈடுபடுத்தும் செயல்பாடுகளைத் தொடங்கும் தருணம் இது. வஞ்சிக்கப்பெற்ற நிலமற்ற ஏழை மக்களின் எழுச்சியும் கூட்டுச் செயல்பாடும் வன்முறையற்ற வழிகளில் ஒருமுகப்படுத்தப்பெற வேண்டும். எட்டுத் திக்கிலும் இதற்குத் தேவையான ஆதரவைத் திரட்ட வேண்டும். விடுதலைப் போராட்டம் காலம் தொடங்கி நமது நாட்டில் நடைபெற்ற எல்லா வகையான அறப்போராட்டங்களிலும் சாமான்ய மக்களின் பங்கேற்புதான் வெற்றி இலக்கை அடைய வித்தாக அமைந்தது. இந்த உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
வஞ்சிக்கப்பெற்ற ஏழைகளின் எழுச்சியில் புதிய வரலாற்றின் தொடக்கம் நிகழும். சமத்துவமும், மனித நேயமும் தழைக்க வகை செய்யும் முன்னேற்றமான சமூக மாற்றமே உன்னதமான இலட்சியம். இந்த இலட்சியத்தை நோக்கிய நமது பயணம் தடைகளும் சவால்களும் மிக்கதாக இருக்கும். எனினும் பயணத்தைத் தொடங்கியே தீருவோம். இந்த இலட்சியப் பயணத்தை ஓட்டு அரசியல் சாராத பொதுநல இயக்கங்கள், தன்னார்வ சமூக செயல்பாட்டு அமைப்புகள், குடிமைச் சமுதாய அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து வழிநடத்த வேண்டும். சமூக அக்கரையுள்ள நாட்டுப்பற்றாளர்கள் இந்தப் பயணத்தில் இணைக்கப்பட வேண்டும். சூழ்நிலைக்கேற்றவாறு போராட்ட உத்திகளை வடிவமைத்து உறுதி குறையாது போராட வேண்டும். மகாத்மா காந்தியடிகள், ஆச்சார்ய விநோபா பாவே, ஜயப்பிரகாஷ் நாராயண் போன்ற பெரியோர்கள் கையாண்ட வன்முறையற்ற போராட்ட உத்திகளை அங்கீகரித்து ஏற்று நமது இலக்கு நோக்கி முன்னேற வேண்டும்;. நிலமற்ற உழைக்கும் ஏழைமக்களின் பெருவாரியான ஆதரவும், எழுச்சியும் இந்த இலட்சியத்தை அடைய நமக்கு வலுவான ஆதாரமாக அமையும். நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக்கப்பட வேண்டும். உண்மை, ஒற்றுமை, விடாமுயற்சி, நம்பிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு அறவழியில் போராட களம் அமைக்கப்பட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
கலகத் தமிழிசைக் கலைஞர்
கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...
-
இன்றைக்கு சுஜாதாவிற்கு நினைவுநாளாம். யாரோ ஒரு நண்பர் என்னையும் சுஜாதாவின் புகழ்பாடும் “ எழுத்தாளர் சுஜாதாவின் விசிறிகள் குழு ” என்னும் முக...
-
சின்னையில் பிறந்து, வதிலையில் வளர்ந்து, மதுரையில் பயின்று, சென்னையில் சிறந்தவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா. இவர் மதுரை ...
-
தேனி வரசக்தி விநாயகர் கோவிலில் ஒவ்வோராண்டும் நவராத்திரி கலை இலக்கிய விழாவாகக் கொண்டாடப்படும். இவ்விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை வந்திர...
No comments:
Post a Comment