களமாடிய கலைஞன்

1995ஆம் ஆண்டில் தொடக்கத்தில் இராமநாதபுரத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டு அணையத்தில் நான் கணக்காளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்பொழுது கிரை (CRY) நிறுவனம் நடத்திய குழந்தைகள் உரிமைகளுக்காக வழக்காடுதல் தொடர்பான திட்டமிடல் கூட்டத்திற்கு சென்னை சென்று திரும்பிய அந்நிறுவனத்தின் இயக்குநரும் என்னுடைய நலம் நாடிகளுள் ஒருவருமான திருமிகு இரா. செயக்குமாரர், கூட்டத்தில் தான் சந்தித்த நவீன நாடக்காரரும் குழந்தைகள் உரிமைச் செயல்பாட்டாளருமான திருமிகு சுரேசு தர்மாவைப் பற்றிக் கூறினார். அச்செயல்பாட்டாளர் கன்னியாகுமரியின் மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தைச் சார்ந்தவர் என்றும் அவருடைய தந்தை தன்னுடைய இளமைக் கால நண்பர் என்றும் அச்செயல்பாட்டாளர் கூரிய அறிவும் கொள்கைத் தெளிவும் நாடகத் திறனும் வாய்த்தவராக இருக்கிறார் என்றும் வாய்ப்புக்கிடைத்தால் நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருந்தார். இயல்பாகவே இயக்குநருக்கும் எனக்கும் நாடகத்தின்பால் இருந்த ஈர்ப்பால் பலவேளையில் பல்வேறு நாடக்காரர்களைப் பற்றியும் பல்வேறு நாடக உத்திகளைப் பற்றியும் பேசுவது வழக்கம். அவ்வுரையாடல்களின் ஒரு பகுதியாகத்தான் இவரைப் பற்றியும் கூறியிருக்கிறார் என எண்ணிக்கொண்டேன்.

1995ஆம் ஆண்டில் நடுவில் முன்பருவக் கல்வியையும் தமிழ்மொழி வழிக் கல்வியையும் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் நாடகங்களை ஆக்குவதற்கான பட்டறை ஒன்றை இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள தமிழ்நாடு விடுதியில் ஒருங்கிணைத்தோம். அப்பட்டறைக்கு சுரேசுதர்மாவை அழைக்க வேண்டும் என்று திருமிகு இரா. செயக்குமாரர் முன்மொழிய அவருக்கு அணையத்தின் செயலாளராகவும் அப்பட்டறையின் இயக்குநராகவும் இருந்த திருமிகு சூலியசு பால் கரிகாலன் கடிதம் எழுதினார். நாகபட்டினத்தில் நடைபெற உள்ள குழந்தைகள் நாடகப் பயிலரங்கத்திற்கு வருவதாக ஏற்கனவே ஒப்புக்கொண்டிருப்பதாகவும் எனவே தன்னால் அப்பட்டறையில் கலந்துகொள்ள இயலாது என்றும் ஒரு விடை முடங்கலைத் தன்னுடைய முத்து முத்தான ஒயிலான கையெழுத்தில் எழுதியிருந்தார் சுரேசுதர்மா.

இடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த நவசீவன் அறக்கட்டளையின் கலைக்குழுவினர் பரமக்குடிக்கு அருகிலுள்ள பாம்பூரில் ஒரு கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு அன்றிரவை எங்கள் அலுவலகத்தில் கழிக்க வந்தனர். அன்றைய மாலையில் பழனிவலசையில் தங்களது கலைநிகழ்ச்சியை நடத்திய அக்குழுவினர் தாங்கள் சுரேசுதர்மாவால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் எனப் பெருமிதத்தோடு கூறிக்கொண்டனர்.

அதன் பின்னர் மதுரை விடியல் பணியாளர்கள், சிறப்பாக திருமிகு ஆரோக்கியம், பலர் தாங்கள் பங்கேற்ற பல்வேறு குழந்தைகள் உரிமைகள் பயிலரங்குகளுக்கு சுரேசுதர்மா வருகைதந்து குழந்தைகள் உரிமைகள் கருத்தியலையும் நாடகத்தையும் கற்றுத் தந்ததாகவும் அவருடைய கருத்தியல் அணுகுமுறை என்னுடைய அணுகுமுறையைப் போலவே ஆய்வுக் கண்ணோட்டமும் தன்னாய்வுப் பாங்குடையதாகவும் இருப்பதாகத் தெரிவித்தனர். அதேபோல அவரிடமும் என்னைப் பற்றித் தெரிவித்திருப்பதாகவும் கூறினர். நான் கேட்டுக்கொண்டேன். அவரும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருந்திருப்பார்.

நாள்கள் உருண்டன. 1999ஆம் ஆண்டில் நான் மதுரையை அடுத்த கடவூரில் இருக்கும் செசி பயிற்சி மையத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியேற்றேன். பணியேற்ற அடுத்த திங்களே இந்திய துணைக்கண்ட அளவிலான நாடகவிழாவையும் பயிலரங்கையும் நடத்த வேண்டிய நிலையில் மதுரையில் இருந்து இயங்கும் அன்னரசு அமைப்புகளின் (NGO) கலைக்குழுகளை நாடகங்கள் நடத்த அழைத்தேன். அதில் பெரும்பான்மையான குழுவினரின் நாடக நிகழ்த்து முறை ஒன்றுபோலவே இருந்தது. பல்வேறு வண்ண நாடாகளை களத்தின் நடுவில் நிற்கும் ஒருவர் பிடித்துக்கொள்ள திசைக்கொருவராக அந்நாடாகளை இழுத்துப் பிடித்துக்கொண்டு நிற்பவர்கள் நாடகத்தை அறிமுகம் செய்தல், ஒருவர் அடிகுழாயாக நிற்க, அதன் அருகில் மற்றொருவர் நாயாக நின்றுகொண்டு குரைத்தல் எனக் காட்சிகளும் ஒன்றுபோலவே இருந்தன. எனக்குள், நாடகத்தைக் கற்றுக்கொடுத்தவரிடம் தவறா? அல்லது கற்றுக்கொண்டவர்களிடம் தவறா? என்ற வினா எழுந்தது.

இடையில் மதுரையை நடுவாகக்கொண்டு இயங்கிய பல்வேறு நாடக்காரர்களோடு, சிறப்பாக திருவாளர்கள் மதிகண்ணன், அய்யங்காளை, சத்தியமாணிக்கம் போன்றவர்களோடு தொடர்புகள் உருவாயின. அவர்களும் சுரேசைப் பற்றி அடிக்கடி பேசினர். ஆனாலும் பல்வேறு கலைக்குழுவினர் ஒரே மாதிரியாக நடிப்பதும் அவர்கள் தாங்கள் சுரேசு தர்மாவிடம் நாடகம் கற்றோம் என்பதும் "சுரேசு கற்றுச் சொல்லியாக இருப்பாரோ?" என்ற எண்ணத்தை என்னுள் தோற்றுவித்தது.

இந்நிலையில் 2000ஆம் ஆண்டில் மதுரையிலுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகத்தில் ஐக்கிய கிறித்துவ மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற தலித் கலைவிழாவிற்கு சென்றிருந்தபொழுது கரிய நிறமும் கனத்த உருவமும் அளவான உயரமும் நீண்ட தாடியும் கழுத்துவரை இழுத்துத் தொங்கவிடப்பட்ட தலைமுடியும் கொண்ட ஒருவர் இளம்பழுப்பு நிறக் குர்தாவை அணிந்து அவ்விளையாட்டுத்திடலின் ஊடாக இங்கும் அங்கும் நடந்து பலரையும் ஆரத்தழுவி உரையாடிக்கொண்டும் சிலரோடு வளாகத்திற்கு வெளியே சென்று புகைத்துக்கொண்டும் கனத்த குரலில் சிரித்து உரையாடிக்கொண்டும் பிறர் பேசுவதை கூர்ந்து கவனிக்கையில் தனது கருந்தாடியை வாஞ்சையோடு வருடிக்கொண்டும் இருந்தார். இவ்விழாவிற்கு வந்திருந்த பலரும் அவரிடம் சென்று பேசிக்கொண்டிருந்தனர். நான் தூரத்திலிருந்து அவரைக் கவனித்துக்கொண்டிருந்தேன். 'ஒருவேளை இவர்தான் சுரேசு தர்மாவோ?' என்ற வினா என்னுள் எழுந்தது. இருப்பினும் அவரோடு பேசவும் இல்லை, பிறரிடம் வினவவும் இல்லை.

2000ஆம் ஆண்டில் சுப்பு என நண்பர்களால் அழைக்கப்படும் திருமிகு சுப்பிரமணியனின் தொடர்பு ஏற்பட்டது. ஒரு பயிலரங்கின் இடைவெளியில் பேசிக்கொண்டிருந்தபொழுது அவர் தன்னுடைய இளமைக்கால நாடக அனுபவங்களைப் பகிந்துகொண்டார். அப்பொழுது சுரேசு தர்மாவைப் பற்றிக் குறிப்பிட்டார். அவரிடம் சுரேசு பற்றி என்னுள் ஏற்பட்டிருக்கும் படிமத்தைப் பகிர்ந்துகொண்டேன். அதனை ஏற்றுக்கொண்ட அவர், "அளப்பரிய படைப்பாற்றல் கொண்டவர் சுரேசு. கலைவடிவத்தை சமூக மாற்றத்தின் கருவியாகக் கொண்டு எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் மார்க்சிய லெனிய இயக்கங்களோடு இணைந்து இயங்கியவர். அவ்வியக்கங்கள் தங்களது வலிமையை இழந்தபொழுது அன்னரசு அமைப்புகளைப் பயன்படுத்தி நாடகத்தின் வழி சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். அதற்கு குடும்ப வாழ்வு தடையாக இருக்கும் என்பதனால் திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்று சுரேசும் நானும் உள்ளிட்ட ஐந்து நண்பர்கள் முடிவெடுத்து களப்பணியில் புகுந்தோம். சுரேசு தவிர மீதமிருந்த நால்வரும் காதல்வயப்பட்டு திருமணம் புரிந்து நிறுவனங்களைத் தொடங்கி அல்லது நிறுவனங்களில் பணியேற்று முடங்கிவிட்டோம். ஆனால், சுரேசு மட்டும் திருமணம் செய்துகொள்ளாமல் தான் எடுத்த முடிவை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று தவித்துக்கொண்டிருக்கிறார். அன்னரசு அமைப்புகளோ அவரிடம் ஒரு முறை பயிற்சி எடுத்துவிட்டு அதன் பின்னர் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த கட்டத்திற்கு அவர்கள் நகர்வதில்லை." என்று குறைபட்டுக்கொண்டார்.

2001ஆம் ஆண்டில் இந்தியத் துணைக் கண்ட அளவில் குழந்தைகள் நாடக விழாவையும் பயிலரங்கையும் நடத்தினேன். அதற்காக நெல்லை நவசீவன் நிறுவனத்தில் சுரேசின் முகவரியைப் பெற்றுக்கொண்டு சென்னை சென்று அவரது அலுவலகத்தை அடைந்தேன். அவர் அங்கில்லை. நாகபட்டினத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். அவ்விழாவிற்கு அழைப்பதற்காக நண்பர் மதிகண்ணனைத் தேடிய பொழுது அவர் நாகபட்டினத்தில் இருப்பதாகத் தெரிவித்து ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்கள். அதில் தொடர்பு கொண்டபொழுது நண்பர் மதிகண்ணன் வேறொரு பயிலரங்கில் இருப்பதால் தன்னால் என்னுடைய அழைப்பை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்தார். "சுரேசு அங்கேதான் இருக்கிறரா?" என நான் வினவ மதி சுரேசின் கையில் தொலைபேசியைத் திணித்துவிட்டுப் போய்விட்டார். தொலைபேசியை வாங்கிய சுரேசு, "சுரேசு பேசுகிறேன்" என்றார். நான், "அரி பேசுகிறேன்" என்றேன். "உங்களைப் பற்றி நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். இதுவரை நாம் சந்தித்ததில்லை. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் அரி" என்றார் சுரேசு. நான் நாள்களைக் குறிப்பிட்டு இந்நாள்களில் நீங்கள் குழந்தைகள் விழாவிற்கு வரவேண்டும் என்றேன். "மன்னிக்க வேண்டும். அதே நாளில் நான் வேறு ஒரு பயிலரங்கில் இருக்கிறேன். மற்றொரு முறை பார்க்கலாம். ஆனால் நான் மதுரை வருகிறபொழுது நாம் அவசியம் சந்திக்க வேண்டும்." எனக் கூறித் தொலைபேசியைத் துண்டித்தார்.

பின்னர் தொடர்பே இல்லை. அவ்வப்பொழுது அவரது ஒயிலாக முத்துமுத்தான கையெழுத்தில் வடிவமைக்கப்பட்ட அட்டையோடு குழந்தை உரிமைகள் பற்றிய செய்திமடல் மட்டும் வரும்.

2002ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நண்பர் சுப்பு தனது நிறுவன கலைக்குழுவினருக்கான பயிலரங்கம் ஒன்றினை நான் பணியாற்றிய செசி நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அதனை தொடக்கி வைக்கும் சிறப்பு அழைப்பாளராக நான் சென்றிருந்தேன். அங்கே தலித் கலை விழாவில் நான் பார்த்த ஆளின் சாயலிலேயே ஆனால் அவரை விட ஒல்லியாக, டி சர்ட் அணிந்து ஒருவர் பணியாளர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் பயிலரங்கத்தைத் தொடங்க கூடத்திற்குள் குழுமினோம். சுப்பு தன்னுடைய வரவேற்புரையில் எனது பெயரைக் கூறவும் அருகிலிருந்த அந்தத் தாடிக்காரர் என் கரங்களைப் பற்றி "நான்தான் சுரேசு" என்றார். "உங்களைத்தான் வெகுநாளாய்த் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்றேன் நான். "அதனை நான் அறிவேன்" என்றார் அவர். உணவு இடைவேளையில் மீண்டும் சந்தித்தோம். நாடகப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டோம். மாலையானது. பயிலரங்கம் முடிந்தது. சுரேசு வந்தார். "பாசிப் பயிற்றை முளைகட்டி எனக்கு காலை உணவாகத் தரமுடியுமா?" என வினவினார். செசியின் பணியாளர் பொன்னுகாளையை அழைத்து ஆவனவற்றைச் செய்யப் பணித்தேன். பின்னர் பேசத் தொடங்கினோம். தலித் கலை விழாவில் நான் கண்டவரைப் பற்றிக் கூறினேன். அந்த ஆள் நான்தான். இடையில் உடல்நலம் குன்றிவிட்டது. முதுகெலும்பை பாதித்துவிட்டது. எனவேதான் உணவில் சற்று கட்டுப்பாடாக இருக்கிறேன். காலையில் முளைகட்டிய பாசிப்பயறு மட்டும்தான் உணவு என்றார்.

பின்னர், அவர் பள்ளியில் பயின்றது, தொலைபேசித் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றியது, நெருக்கடி நிலையை எதிர்த்து நடத்த இளைஞர் இயக்கத்தில் பங்கேற்றது, அதன் வழியாக மார்க்சிய லெனினிய குழுகளோடு தொடர்பு ஏற்பட்டு அரசு வேலையைத் துறந்து களப்பணியில் ஈடுபட்டது, மதுரையை நடுவாகக்கொண்டு மாணவர்களைத் திரட்டியது, திருமணம் செய்துகொள்ளக் கூடாது என முடிவெடுத்தது, தலைமறைவு வாழ்வை மேற்கொண்டது, அன்னரசு அமைப்புகளோடு இணைந்து செயல்படத் தொடங்கியது, அவர்கள் நாடகத்தை ஒரு செயல்பாடாக மட்டுமே பார்த்து அதன் வீரியத்தை இழக்கச் செய்துகொண்டிருப்பது எனப் பல்வேறு செய்திகளைப் பேசிக்கொண்டிருந்தோம். விவேகானந்தா கேந்திராவின் வழியே வெளிவந்த தன்னுடைய "ஓசை" என்னும் நாடகத் தொகுப்பை அன்பளிப்பாகக் கொடுத்தார். "எளிய்ய நாடகம்" என்று அதில் எழுதியிருந்ததைச் சுட்டி இது இலக்கணப் பிழையென்றேன். "தமிழில் ஒரு சொல்லுக்கு அழுத்தம் தர வகையில்லை, எனவே இப்படி எழுதுகிறேன். இலக்கணப் பிழை என்றால், இதனை வழுவமைதியாகக் கொள்ளுங்கள்" என விடையிறுத்தார்.

அதன் பின்னர் பல்வேறு வேளைகளில் பல்வேறு இடங்களில் சந்திக்கும்பொழுதெல்லாம் உரையாடல்கள் தொடர்ந்தன. காந்தியத்தின் மீது அவருக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அதே வேளையில் குமரப்பாவின் பொருளாதாரக் கருத்துகளை ஏற்றுக்கொண்டிருந்தார். அதனைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தது.

2004ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முப்பையில் நடைபெற்ற உலக சமூக மாமன்றத்திற்குச் சென்ற பொழுது அவரும் வந்திருந்தார். குழந்தைகள் உரிமைக்காகப் பணியாற்றும் பல்வேறு அன்னரசு அமைப்புகளை ஒருங்கிணைத்து குழந்தைகள் உரிமை நாடகங்களை ஆங்காங்கே நிகழ்த்திக் கொண்டிருந்தார். அம்மாமன்றத்திற்கு எதிராக நடந்த மும்பை எதிர்ப்பு என்னும் மன்றத்திற்குச் சென்றுவிட்டு வந்து உலக சமூக மாமன்றத்தை கடுமையாகச் சாடிக்கொண்டிருந்தார். சுப்பு போன்ற அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவர் இரண்டு அரங்குகளிலும் ஒரே நேரத்தில் செயல்படுவதை விமர்சித்தார்கள். "அருந்ததிராய் இரண்டு அரங்குகளிலும் பேசுகிறார். அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் இந்த அப்பாவி இரண்டு அரங்குகளுக்கும் போவதை ஏன் விமர்சிக்கிறீர்கள்?" என எதிர்வினாவை புன்னகையோடு வைத்துக்கொண்டிருந்தார்.

திருப்பி வருகையில், 'பெரியார் தலித்துகளின் விரோதி' என்றும் 'அவரை தலித்துகளைக் காப்பவராகக் காட்ட ராசதுரையும் கீதாவும் முயல்வது தவறு' என்றும் அவர் கூற, பெரியார் தலித்துகளுக்கு முதன்மை கொடுத்து போராடவில்லை, ஆனால் அவர் தலித்துகளுக்கு எதிராக எப்பொழும் இருந்ததில்லை என்று நான் கூற வழி முழுக்க சூடான கலந்துரையாடல்கள்.

அவ்வாண்டின் இறுதியில் ஆழிப்பேரலை தாக்க, கடலோர குழந்தைகளிடையே இயற்கையரண்களைப் பற்றிய விழிப்புணர்வையும் குழந்தைகள் உரிமையைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் பணிகளில் சுரேசு தீவிரமாக ஈடுபட்டார். நான் சிறு - குறு உழவர்கள், நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களோடு பணியாற்றத் தொடங்கினேன். இருவரும் மீண்டும் அடிக்கடி சந்தித்தோம். பாதிக்கப்பட்டோருக்கு அன்னரசு அமைப்புகள் கட்டும் வீடுகளின் தரத்தை மக்களைக்கொண்டே கண்காணிக்கச் செய்யும் பணியில் நான் சார்ந்திருந்த ஏக்தா பரிசத்தின் வழியாக முயன்றோம். அப்பணியின் ஒரு பகுதியாக, நாடகத்தின் வழி விழிப்புணர்வை ஊட்டுவது என்று முடிவெடுத்தோம். அதற்கான பயிற்சியை வழங்க சுரேசை அழைத்தேன். "ஏற்கனவே ஒரு பயிற்சிக்கு ஒப்புக்கொண்டுள்ளேன்..." என்று இழுத்தார். "என்ன செய்வீர்களோ தெரியாது. நீங்கள்தான் பயிற்சிதர வேண்டும். கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக நான் அழைக்கும்பொழுதெல்லாம் நழுவிக் கொண்டிருக்கிறீர்கள்" என்று உரிமையோடு கேட்டுக்கொண்டேன். மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஐந்து நாள்கள் பயிற்சி அளித்தார். நாடகத்தில் மிளிர வேண்டும் என்ற துடிப்போடு இருந்த புலியூர் பிரபு போன்ற இளங்கலைஞர்கள் அப்பயிற்சியில் புடம் போடப்பட்டார்கள். "அன்னரசு அமைப்பினரும் பிறரும் வழங்கும் உதவிகள் இலவசம் அல்ல. உலகில் எதுவும் இலவசம் இல்லை" என எடுத்துக்கூறி நாடக நுட்பத்தைக் கற்றுத்தரும் முன்னர் சமூகக் கருத்தியலை எடுத்துரைத்தார். தான் தருவது அடிப்படைப் பயிற்சிதான் என்றும் கலைஞர்கள் தாங்களே புதியனவற்றை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றும் தூண்டினார். களத்தில் பிரபு, முருகராசு, ஸ்டாலின், சந்திரபிரகாசு போன்ற உண்மையான கலைஞர்கள் தங்களது திறமைகளைக் காட்டினார்கள். அப்பொழுதுதான் சுரேசின் பயிற்றுவிக்கும் திறனை உணர்ந்தேன்.

அதன் பின்னர் நண்பர் சுப்பு, பாமயன், சுரேசு ஆகியோர் இன்னும் சிலரோடு இணைந்து இயற்கை வேளாண்மையில் ஈடுபடப் போவதாகக் கூறி தே. கல்லுப்பட்டிக்கு அருகில் நிலம் வாங்கினார்கள். சென்னையில் காலுன்றி தமிழகம் எங்கும் சிறகு விரித்த அவரால் அதில் முழுமையாக ஈடுபடி முடியவில்லை. ஆனால் ஆர்வம் இறுதி வரை இருந்தது.

மூன்று திங்களுக்கு முன்னர், குழந்தை உரிமைகள் கூட்டமைப்புக் கூட்டம் ஒன்றிற்கு பெங்களூர் சென்று திரும்பிய நண்பர் சிம் சேசுதாசு அக்கூட்டத்தில் தான் சுரேசை சந்தித்ததாகவும் முதன்முறையாக அவருடம் ஐந்து நாள்களை தொடர்ந்து செலவிட்டதாகவும் களப்பணியில் சுரேசிற்கு இருக்கும் பட்டறிவும் கருத்தியல் தெளிவும் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் வகுப்பதில் உள்ள நுட்பமும் வியக்க வைக்கிறது என்றும் எல்லோரோடும் வெகு இயல்பாக பழகும்தன்மை போற்றுதலுக்குரிய என்றும் ஆனால் தன்னுடைய உடல்நலத்தில் அவர் அக்கறையற்று இருக்கிறார் என்றும் கூறினார். அவரை சக்தி விடியலின் ஆண்டுவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கடைசியாக மதுரை சோக்கா அறக்கட்டளைக்குச் சொந்தமான கிருட்டிணய்யர் மண்டபத்தில் சக்தி விடியலின் ஆண்டுவிழாவில் சுரேசைக் கண்டேன். நீதியரசர் பகவதியின் சிலை அருகில் கட்டித் தழுவிக்கொண்டோம். வாழ்க்கைக்கல்வி பற்றி காரசாரமாக விவாதித்தோம். தானும் நண்பர்கள் சிலரும் பழங்குடியினச் சிறுவர்களோடு இணைந்து வாழ்க்கைத்திறன் கல்வித் திட்டம் வகுத்துக்கொண்டிருப்பதாகவும் முடிந்ததும் ஒருநாள் நாம் விவாதத்தைத் தொடரலாம் என்றும் கூறினார். அதுதான் அவரை நான் கடைசியாகச் சந்தித்தது.

2009ஆம் ஆண்டு சனவரி 4ஆம் நாள் காலை 9 மணிக்கு சத்திய மாணிக்கம் தொலைபேசினார். "செய்தி தெரியுமா?" என்றார். "எந்தச் செய்தி?" என்றேன். "நண்பர் சுரேசு நெல்லையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு மறைந்துவிட்டார். சுப்பு நேற்றிரவே நெல்லை போய்விட்டார். எனக்கு இப்பொழுதுதான் தகவல் கிடைத்தது. இன்றைக்கு மார்த்தாண்டத்தில் இறுதி நிகழ்வுகள்." என்றார். என்ன செய்வது என்றே தெரியவில்லை. மனம் அவருடன் நடந்த உரையாடல்கள் பலவற்றையும் அசை போட்டது. சுரேசு இன்றைய இளைஞர்களுக்கு கொள்கைப் பிடிப்பில் பின்பற்றத்தக்க ஒரு முன்னோடியாகவும் தன்னுடைய உடல்நலம் பற்றிய அக்கறையின்மையில் பின்பற்றப்படக்கூடாத ஒரு முன்னோடியாகவும் திகழ்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. வேறு என்ன சொல்ல.....?

தமிழகம் முழுவதும் விரவிக் கிடக்கும் அவரது நாடகங்கள் அனைத்தும் திரட்டப் பட்டு அச்சேற்றப்பட வேண்டியவை. செய்வோமா?

1 comment:

  1. நன்றி
    மதிகண்ணன்
    maveepaka@gmail.com

    ReplyDelete

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...