அவர்களில் பெரும்பாலான விளிம்புநிலை மக்கள் தாம் பிறந்து வளர்ந்த இடத்திலேயே கிடைக்கும் தொழிலைச் செய்து, அங்கேயே வாழ்ந்து மடியவே விரும்பினர். கீழ்நடுத்தட்டு மக்களில் பெரும்பான்மையோர் தாம் செய்துவரும் வேளாண்மையிலிருந்து நழுவிச் சென்று உள்ளூரிலேயே சிறுவணிகத்தில் ஈடுபட்டுப் பிழைக்க விழைந்தனர். பசுமைப் புரட்சி என்னும் பேராசை முயற்சியின் காரணமாக வளமற்றுப் போன நிலவளமும் நாளும் உயர்ந்துகொண்டிருக்கும் வேளாண் இடுபொருள்களின் விலையும் அந்த குறு, சிறு வேளாண்மையர்களை நிலங்களில் இருந்து நெட்டித் தள்ளிக் கொண்டிருப்பதே அவர்களின் தொழில்மாற்றச் சிந்தனைக்குக் காரணமாக இருந்தது. சிறுதொழில் புரியும் கைவினைஞர்களுக்கோ தம்முடைய ஆக்கங்களைத் தாமே சந்தைப்படுத்த இயலாது, சென்னை செளகார்பேட்டை வணிகர்களின் கருணையால் பிழைக்கிற நிலையில் இருப்பினும், தம்முடைய பிறந்த ஊரைவிட்டு நகரங்களுக்கு இடம்பெயரும் ஆசை இல்லை. ஆனால் அவர்களின் விருப்பம், விழைவு, ஆசை அனைத்தும் இந்திய, தமிழக அரசுகள் பின்பற்றுகிற, ஆனால் இம்மண்ணிற்குப் பொருத்தமற்ற, மேலைநாட்டுச் சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட உலகமய, தாரளாமய, தனியார்மயப் பொருளாதார நெருக்கடியால் நொறுங்கிக்கொண்டு இருக்கின்றன.
தாம் பெற்றிருக்கும் கல்வியை முதலாகக் கொண்டு மிகக்குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டேனும் வெயிலில் வாடத்தேவையற்ற வெள்ளுடை வேலையை இலக்காகக்கொண்டு பெருநகருக்கு இடம்பெயரும் வேட்கையை உடைய இடைநடுத்தட்டு மக்களோடு இணைந்து, விளிம்புநிலை மக்களும் கீழ்நடுத்தட்டு மக்களும் ஊரகக் கைவினைஞர்களும் தம் நிலத்தை, மரபார்ந்த தொழில்களைக் கைவிட்டு உதிரிவேலைகளைச் செய்து பிழைப்பதற்காக நகரங்களை நோக்கி நகரத்தொடங்கி இருக்கிறார்கள். இதனால் ஊரகச் சிற்றூர்கள் தமது மனிதவளத்தை இழந்துகொண்டு இருக்கின்றன; நகரங்கள் இடநெருக்கடியால் ஊதிப்பெருத்து தனது காலடியில் இருக்கும் சிற்றூர்களின் வளங்களை மிதித்து நசுக்கி அழித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த உண்மையை, 2011ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்ட மக்கட்டொகைக் கணிப்பின் அறிக்கையின் சுருக்கம் பூடகமாக எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டில் 73.3% ஆக இருந்த ஊரக மக்கள் தொகை 1991ஆம் ஆண்டில் 65.8% ஆகத் தேய்ந்து 2011ஆம் ஆண்டில் 51.6% ஆக நலிந்திருக்கிறது. அதாவது 1971ஆம் ஆண்டிற்கும் 1991ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட இருபதாண்டுகளில் 7.5% இருந்த ஊரகத்தில் இருந்து நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு, 1991ஆம் ஆண்டிற்கும் 2011ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட இருபதாண்டுகளில் ஏறத்தாழ இருமடங்காக அதிகரித்து 14.2% என்னும் அளவைத் தொட்டு இருக்கிறது. இந்த இடப்பெயர்வின் வளர்ச்சிவிகிதமானது, உலகமயமாக்கத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு செயற்படத் தொடங்கிய பின்னர், உழைக்கும் மக்கள் தமது பிழைப்புப்பாட்டிற்கான வாய்ப்ப்பினை இழந்து தம்முடைய நிலத்திலிருந்தும் தொழிலிலிருந்தும் விரைந்து வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதனை தெளிவுபடுத்துகிறது. இதன் வேகம் எதிர்வரும் ஆண்டுகளில் பன்மடங்காகப் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு இடம்பெயர்ந்து நகரங்களுக்கு வரும் மக்கள் அங்கிருக்கும் புறம்போக்கு நிலங்களிலும் நீர்நிலைகளின் கரைகளிலும் தமது வாழ்விடங்களை அமைத்து வாழத் தொடங்குகிறார்கள். அவர்கள் மெல்ல மெல்ல நகரக் காற்றிற்குப் பழகி சற்று சீராக மூச்சுவிடத் தொடங்கும் பொழுது நகரை அழகுபடுத்தல் என்னும் பெயராலும் சீரமைத்தல் என்னும் பெயராலும் ஆட்சிக்கட்டில் அவர்களை மீண்டும் நகரத்திற்கு வெளியே, அதன் துர்நாற்றம் குறையாத, சிற்றூர் ஒன்றில் குடியமர்த்துகிறது. இதனால் அவர்கள் மீண்டும் தமது பிழைப்புப்பாட்டிற்கான வாய்ப்பினை இழந்து தவிக்கிறார்கள். இவ்வாறு எவ்விடத்திலும் அவர்களை வேர்கொள்ளவிடாது வெட்டியெறிவதன் வழியாக அவர்களை என்றென்றும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக மாறவிடாமல் அதிகார நடுவங்கள் பார்த்துக்கொள்கின்றன. இதனைக் கூர்ந்து கவனித்து குரல்கொடுக்கும் சற்று படித்த நடுத்தட்டு மக்களுக்கு “வல்லரசுக் கனவு” மயக்க மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. இந்தியத் துணைக்கண்ட மக்களின் பண்பாட்டுக் கூறாகவும் பிழைப்புப்பாட்டின் ஊற்றாகவும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் இருக்கின்றன. அதனால் பெருமளவு மக்கள் அதில் ஈடுபட்டுப் பிழைத்து வருகின்றனர். இந்திய அரசோ வேளாண்மையை வணிகமாக மாற்ற முனைகிறது. அவ்வணிகத்தில் 8% மக்கள் ஈடுபட்டாலே இந்திய மக்கள் தொகைக்குத் தேவையான உணவு உற்பத்தி இலக்கை எட்டிவிட முடியும் என்கிறார் இந்திய ஒன்றியத்தின் நிதி அமைச்சர். அதாவது பெரும்பான்மையான இந்திய மக்கள் அதை நம்பிப் பிழைக்கக் கூடாது; அது பெருவணிகர்களின் வணிகமாக மாறிவிட வேண்டும் என்பது அவரது வேணவா. அந்த வேணவாவை நனவாக்கும் போக்கில்தான் இந்நாட்டின் பொருளாதாரம் கட்டமைக்கப்படுகிறது. இதனால் விளிம்புநிலை மக்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மக்களின் இடப்பெயர்வுதான் இப்பூமண்டலத்தின் பல்வேறு சிக்கல்களுக்கும் கரணியமாக இருக்கிறது என்பது கடந்த நூற்றாண்டிலேயே அறிவு உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எனவேதான் தெருவெங்கும் பாலாறும் தேனாறும் ஓடுவதாக புனைந்துரைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இடம்பெயர்வுக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால் இந்தியாவில் இடப்பெயர்வை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையே ஊக்குவிக்கிறது.
இடப்பெயர்வால் அல்லலுக்கு உள்ளாகும் மக்களின் பிழைப்புப்பாட்டைப் பாதுகாக்க நிலச்சீர்திருத்தமும் நிலப்பகிர்வுமே சிறந்த வழியென சமூகச் செயல்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். உழவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிலமற்ற ஏழை உழவர் ஒருவருக்கு உரிமையாக்கப்படும் ஒரு குறுக்கம் அளவுள்ள நிலம் ஒரு தலைமுறைக் காலத்திற்குள் அவரது குடும்பத்தின் வாழ்வைத்தரத்தை பன்மடங்கு உயர்த்தும் என்பதனை நிலவுரிமைப் போராளியான தாமரைத்திரு கிருட்டிணம்மாள் செகநாதன் கீழவெண்மணிப் பகுதியில் 1969ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து மெய்பித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் மாநிலங்களின் பழங்குடியினருக்கு நிலங்களைப் பெற்றுத் தந்து ஏக்தா பரிசத்தின் தேசியத் தலைவரான புத்தன்வீடு இராசகோபால் மெய்பித்துக் கொண்டிருக்கிறார். இந்தச் சோதனை முயற்சிகளின் வழியாக கற்ற பாடங்களை அடிப்படையாகக்கொண்டு இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் ஒரே நேரத்தில் நிலச்சீர்திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் எனக் கோரி தொடர்போராட்டங்கள் நடைபெறுகின்றன. அவற்றின் விளைவாக 2007ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் இந்திய ஒன்றியத்தின் பிரதமரைத் தலைவராகக் கொண்டு தேசிய நிலச்சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த ஆணையம் கூடவே இல்லை. அண்ணா கசாரே தில்லியில் போராட்டம் நடத்திய பொழுது அவருடன் இருந்த மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த ஆணையம் சிலநாள்களில் கூடும் அறிவிக்கப்பட்டது; ஆனால் இன்றுவரை கூடவே இல்லை.
இந்நிலையில் வேளாண்மையைப் பிழைப்புப்பாடாகக் கொண்டுள்ள விளிம்புநிலை மக்களின் இடப்பெயர்வைத் தடுத்து, அவர்களது வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தளவு வருவாயையேனும் உறுதிசெய்யும் வகையில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் முதற்கட்டமாக வேளாண் நிலங்களை கட்டிட மனைகள் உள்ளிட்ட பிற பயன்பாட்டு நிலங்களாக மாற்றுவதை குற்றவியல் நடவடிக்கையென அறிவித்துச் சட்டம் இயற்றி வேளாண் தொழிலைக் காக்க வேண்டும். இரண்டாவதாக கோயில் போன்ற பொதுநிலங்கள் வெகுசிலரிடமே குத்தகைக்கு விடப்பட்டிருப்பதை நீக்கும்வகையில் குத்தகை உச்சவரம்புச் சட்டத்தை இயற்றி, கையப்படுத்தப்படும் மிகைநிலங்களை விவசாயத் தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு விடவேண்டும். மூன்றாவதாக நன்செய் நிலவரம்பின் அளவை ஐந்து குறுக்கம் எனக் குறைத்து மீதமுள்ள நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். புன்செய் நிலங்களுக்கும் அறக்கட்டளை நிலங்களுக்கும் உச்சவரம்பு விதித்துச் சட்டம் இயற்றி நிலங்களை மீட்டு நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். நான்காவதாக பஞ்சமி நிலங்களையும் பூதான நிலங்களையும் மீட்டு பொருத்தமான நிலமற்ற ஏழை உழவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். இச்சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இணையாக இந்நிலங்களில் அம்மக்கள் வேளாண்மை செய்வதற்குத் தேவையான பொருளாதார, தொழில்நுட்ப உதவிகளையும் அரசு செய்தல் வேண்டும்.
இவற்றை அரசு பொறுப்பேற்றுச் செய்வதற்குத் தேவையான அழுத்தங்களை விளிம்புநிலை மக்களும் அவர்களுக்குத் துணையாக அவர்களது மேம்பாட்டிற்காக உழைக்கும் அல்லரசு அமைப்புகளும் இயக்கங்களும் ஒருங்கிணைந்து கூட்டொருமையோடு பணியாற்ற வேண்டும். பணியாற்றினால் சில நம்பிக்கைக் கீற்றுகள் தென்படக்கூடும்.
திருப்புமுனை இதழ் - ஆகத்து 2013
மூன்றாம் உலக நாடுகளின் நிலம் பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாறிவரும் இந்த நாளில் நீங்கள் கூறும் நிலச்சீர்திருத்தம் எல்லாம் நடக்கக்கூடிய காரியமா தோழர்!
ReplyDeleteநடக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் தோழர்! அதற்காகத்தான் இந்தியாவின் பல்வேறு சிற்றூர்களில் பலரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் வாருங்கள்..
Deleteஅருமையான இடுகை . செதுக்கிய சொற்கள் . குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மிகச் சரி.
ReplyDeleteஅன்புடன்
பாரதிதாசன்
நன்றி பாரதிதாசன்
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete