காணமற்போகும் பொதுநிலங்கள்

பகுதி 1: பூனைக்கு மணிகட்டித்தானே ஆக வேண்டும்?

வெளியூரில் வேலை பார்க்கும் ஒருவர் ஓராண்டு கழித்து தனது ஊருக்குத் திரும்பினால் அங்குள்ள பொதுநிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருப்பதைக் காண்பார். அனைவருக்கும் பொதுவான அந்நிலங்கள் முழுமையகவோ, பகுதியாகவோ பணம், அரசியல், ஆள் ஆகிய பலங்களை உடையவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும். களம், மேய்ச்சல் நிலம், காடு எனத் தொடங்கி ஓடை, குளம், மந்தை வரை பல்வேறு வடிவங்களில் இருக்கும் அப்பொதுநிலங்கள் அவ்வூரின் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கை வகிக்கக் கூடியவை. அவற்றை மீட்பதற்காக அவர் முயன்றால் கிராமசபையோ, வருவாய்த்துறையோ அந்த ஆக்கிரமிப்பை சட்டப்படி அங்கீகரித்துவிட்டதாகக் கூறி சில ஆவணங்கள் காட்டப்படும். இத்தகு ஆக்கிரமிப்புகளையும் அதற்காக வழங்கப்பட்ட ஆவணங்களையும் சட்டத்திற்குப் புறம்பானவை, செல்லாதவை என்கிறது 2011 சனவரி 28 ஆம் நாள் செயபால் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு வழக்கில் இந்திய ஒன்றியத்தின் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் மார்க்கண்டேய கட்சூவும் கியான் சுதா மிசுராவும் வழங்கிய தீர்ப்பு.

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டம் சாகீர் ரோகர் என்னும் சிற்றூரில் உள்ள பொதுநிலமான குளத்தை மூடி 6. 8 கெக்டேர் பரப்பளவில் செயபால் சிங் என்பவர் 2003ஆம் ஆண்டில் வீடொன்றைக் கட்டி இருக்கிறார். அந்த குளமானது கால்நடைகள் குடிப்பதற்காக மழைநீரைச் சேமிப்பதற்காகப் பயன்பட்டு வந்திருக்கிறது. செயபால் சிங், அந்நிலத்தை தன் முன்னோர்களும் அனுபவித்து வந்ததால் அந்நிலம் தனக்கே உரியது என உரிமைகொண்டாடி இருக்கிறார். அவரது ஆள் பலத்திற்கும் பணபலத்திற்கும் பணிந்த கிராமசபை அந்த அத்துமீறலைக் கண்டுகொள்ளவில்லை. சட்டத்திற்குப் புறம்பான அந்த அத்துமீறலை மறைத்து அந்நிலம் செயபாலுக்கே உரியது என உறுதிப்படுத்தும் ஆவணங்களை அரசுத் துறையில் உள்ள கீழ்மட்ட அலுவலர்கள் வழங்கி இருக்கிறார்கள். செயபால் சிங்கிற்கு எதிரியான தேவ் சிங் என்பவர் இந்த மோசடியைப் பற்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொணர்ந்தார். மாவட்ட ஆட்சியர் அந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு மாறாக, அப்பொதுநிலத்திற்கு உரிய நிலமதிப்பை அரசுக்குச் செலுத்திவிட்டு செயபால் சிங்கே நிலத்தை வைத்துக்கொள்ளலாம் என ஆணை இட்டார். 2007ஆம் ஆண்டில் தேவ் சிங் ஆணையருக்கு மேல்முறையீடு செய்தார். ஆணையர் பொதுநில ஆக்கிரமிப்பை உறுதிசெய்து மாவட்ட ஆட்சியரின் ஆணையை நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து, செயபால் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2010 ஆம் ஆண்டில் அந்நீதிமன்றம் அம்மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. பின்னர் செயபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அம்மேல்முறையீட்டை உசாவிய உச்சமன்ற நீதியரசர்கள் வழங்கிய தமது தீர்ப்பில், அரசு அலுவலர்களும் கிராமசபையும் செயபால் சிங்கோடு சேர்ந்து சதிசெய்து ஊர்ப் பொது நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் எனக் குற்றம்சாட்டினர். மேலும் அந்நிலத்தின் மீது கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்துத் தள்ளும்படி முந்தைய இரண்டு தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி ஆணையிட்டனர். நிலமற்ற தொழிலாளர்களுக்கோ அல்லது பட்டியலிடப்பட்டச் சாதியினருக்கோ பழங்குடியினருக்கோ குத்தகைக்கு விடப்பட்ட பொதுநிலத்தில் அல்லது சிற்றூரினருக்காக பள்ளி அல்லது மருத்துவமனை என்பன போன்றவை உள்ள பொதுநிலத்தில் மட்டுமே சுற்றுச்சுவர் கட்ட அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்தனர். அதேபோல தனியாருக்கும் வணிக நிறுவனங்களுக்கும் கிராமசபைகள் தமது நிலத்தை விற்க மாநில அரசால் வழங்கப்பட்ட அரசு ஆணைகள் அனைத்தும் செல்லாதவை என அத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த சில பத்தாண்டுகளாக, நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான குளங்கள் பேராசைக்காரகளால் மண்ணால் மூடப்பட்டு உள்ளன; அவற்றின் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. சிற்றூர் குளங்களில் மீன்பிடிக்கும் உரிமையும் சில வணிகர்களுக்கு கிராம சபையாலோ அரசு அலுவலர்களாலோ மிக்குறைந்த விலைக்கு ஏலம்விடப்பட்டு வருகின்றன என்றெல்லாம் நீதியரசர்கள் அத்தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மைச் செயலாளர்களும் தம் மாநிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுநிலங்களைப் பற்றிய அறிக்கையை அவ்வாண்டின் மே திங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டனர். தலைமைச் செயலாளர்கள் திரட்டப்பட்ட தகவல்களை வழக்கம்போல குறிப்பிட்ட நாளில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பர். ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுநிலங்கள் அனைத்தும் இத்தீர்ப்பின் அடிப்படையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மீட்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, மேலும் மேலும் பொதுநிலங்கள் களவு போய்க்கொண்டே இருக்கின்றன. தேசிய மாதிரி அளவெடுப்பு அமைப்பின் (National Sample Survey Organisation) கணக்கின்படி இந்தியா நாட்டின் மொத்தப் பரப்பளவில் 15 விழுக்காடாக உள்ள பொதுநிலம் ஒவ்வொரு ஐந்தாண்டிலும் 1.9 விழுக்காடு என்னும் விகிதத்தில் குறைந்துகொண்டே வருகிறது. இந்தியா விடுதலை பெற்ற நாளில் இருந்து 2010 ஆம் ஆண்டுவரை 834,000 கெக்டேர் பரப்பளவு பொதுநிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன எனத் தெரிவிக்கிறது.

இந்நிலங்களில் மிகக்குறைந்த அளவு இடங்களையே இடம்பெயர்ந்து வாழும் ஏழைகள், வீடற்றோர் உள்ளிட்ட விளிம்புநிலையினர் தமது இருத்தலுக்காக ஆக்கிரமித்து உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்ற ஆணை இடும்பொழுதும் பொதுநிலங்களை அரசு முறையாகக் காக்கிறது என்னும் தோற்றத்தை உருவாக்க அரசு விழையும்பொழுதும் இந்த விளிம்புநிலையினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களே அரசு இயந்திரத்தால் கைப்பற்றப்படுகின்றன. மற்ற ஆக்கிரமிப்பாளர்களின் கையில் இருக்கும் பொதுநிலங்களுக்கு மீட்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுவது இல்லை. இந்நிலையில் அந்தந்த ஊரின் பொறுப்புடைய மக்கள்தான் அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகு முயற்சியில் ஈடுபடும்பொழுது ஆள்பலம், அரசியல்பலம், பணபலம் ஆகியவற்றின துணையை உடைய ஆக்கிரமிப்பாளர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்தான். ஆனால், யாரேனும் பூனைக்கு மணிகட்டித்தானே ஆக வேண்டும்?

திருப்புமுனை. செப்டம்பர் 2013

1 comment:

  1. நல்ல முயற்சி.. தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...