பின்னாடிப் போகுதா உலகம்?



பின்னாடிப் போகுதா உலகம்? - சாதிப்
பேரால பண்ணுறானே கலகம்! – நமக்கு
முன்னாடிப் பலபேர்கள் உழைத்து - வெட்டிய
முள்ளுமரம் நிற்கலாமா தழைத்து?

“பிறப்பால எல்லோரும் ஒண்ணு! - வேலைப்
பிரிவுதான் வெவ்வேறு கண்ணு” - என
அறத்தாலே எழுந்து நின்னு – வள்ளுவர்
அறைந்ததிலே போடுறானே மண்ணு! (பின்னாடி)

சாதிமதக் கேடெல்லாம் களைந்து -அருட்
சோதியில எல்லோரும் கலந்து - நந்
நீதிவழி வாழவேணும் இணைந்து – என்னும்
நெறியையெலாம் கொல்லுறானே தொலைந்து!

“நால்வர்ணப் பிரிவினைகள் புரட்டு – அதை
ஞாயம்செயும் சாத்திரங்கள் திருட்டு” – என
நாள்தோறும் சொன்னாரே பெரியார் – அந்த
ஞாயத்தை மிதிக்கிறானே சிறியன் (பின்னாடி)

“உழைக்கின்ற எல்லோரும் ஒன்று – நம்முள்
உயர்வில்லை தாழ்வில்லை” என்று – ஒன்றாய்
இணைத்தனரே தோழர்கள் நன்று – அதனை
எரியூட்டப் பார்க்குறானே இன்று

“தீண்டாமை ஒழிப்பெங்கள் உரிமை – நமக்குள்
தேவையடா என்றென்றும் ஒருமை” – என்றாரே
நீண்டாய்ந்த பீமாராவ்! அருமை!! – அதை
நெருப்பிலட முனைகிறானே எருமை (பின்னாடி)

எல்லாரும் வாருங்கள் எழுந்து – ‘சாதி
எமக்கில்லை என்றுரைப்போம்’ இணைந்து – ஞாய
நல்லேரால் மனங்களைநாம் உழுது – அன்பு
நற்பயிரை வளர்த்திடுவோம் மலர்ந்து


காக்கைச் சிறகினிலே, செப்டம்பர் 2013 பக்.31

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...