ஆம் ஆத்மி: யானையாய் மாறிய யானைப்பாகர்?

மேதா பட்கர் பல்வேறு சமுதாயச் செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து 2004 ஆம் ஆண்டில் மக்கள் அரசியல் முன்னணி (People's Political Front) என்னும் அரசியல் கட்சியை உருவாக்கினார். அக்கட்சி அவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சில இடங்களில் போட்டி இட்டது. அப்பொழுது, சமுதாயச் செயற்பாட்டு இயக்கங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது பற்றி காந்தியச் செயற்பாட்டாளரான பு. வீ. இராசகோபால் (P.V.Rajagopal), ஆட்சியாளர்களை வேலைவாங்க வேண்டிய சமுதாயச் செயற்பாட்டாளர்கள் ஆட்சியாளர்களாக இருப்பதைவிட ஆட்சியாளர்களை வேலைவாங்குபவர்களாக இருக்க வேண்டும் என்னும் பொருளில், “யானையாக இருப்பதைவிட யானைப்பாகனாக இருப்பதே சிறந்தது” என எங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் ஒன்றில் கூறினார். அவரின் கூற்றை இப்பொழுது ஆம் ஆத்மி கட்சியினர் உண்மை ஆக்கிக்கொண்டு இருக்கின்றனர்.

சிந்தாந்தமும் தொலைநோக்கும்:



இதற்கு முன்னர் அரசியல் கட்சியைத் தொடங்கிய சமுதாயச் செயற்பாட்டாளர்களான ஓய். டேவிட்டின் சமத்துவ சமுதாய இயக்கத்திற்கு வர்க்க வேறுபாடற்ற சோசலிச சமுதாயத்தையும் மேதாவின் மக்கள் அரசியல் முன்னணிக்கு காந்திய சோசலிச சமுதாயத்தையும் உருவாக்குவது என சிந்தாந்த அடிப்படையிலான தொலைநோக்கு இருந்தது. ஆம் ஆத்மிகளின் வழிகாட்டியான அண்ணா கசாரேவுக்கும் கிராம சுயராச்சியத்தை அமைக்க வேண்டும் என்னும் தொலைநோக்கு இருக்கிறது. ஆனால் தாங்கள் வலதும் அல்லர், இடதும் அல்லர் எனக் கூறிக்கொள்வதன் மூலமாக தமக்கு சிந்தாந்தமும் இல்லை; தொலைநோக்கும் இல்லை என்பதனை ஆம் ஆத்மிகள் தெளிவுபடுத்திவிட்டனர்.

ஊழல் எங்கெங்கும் புரையோடி இருக்கிறது எனபது உண்மைதான். அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் அதற்காக மக்கள் இயக்கங்கள் செயல்பட வேண்டும் என்பதும் சரியான பார்வைதான். இந்த ஒற்றைப் பார்வையை முன்வைத்துதான், ஊழல்வாணர்கள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை ஆம் ஆத்மிகள் வாக்குகளாக மாற்றினார்கள். யாருக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லாத சூழலில் காங்கிரசின் ஆதரவைப்பெற்று ஆட்சி அமைத்தார்கள். அதுவரை யானைப்பாகர்களாக இருந்தவர்கள் யானையாக மாறினார்கள்!

அதற்குப் பின்னர் அரவிந்த் கெசுரிவால் மேற்கொள்ளும் கவனஈர்ப்பு வெற்று நடவடிக்கைகளும் கட்சிக்குள் இருக்கும் பதவி வேட்டைக்காரர்களின் கலகங்களும் பிற்போக்குச் சிந்தனையாளர்களான தலைவர்கள் சிலரின் கருத்துரைகளும் ஓர் அரசியல் கட்சியை நடத்த ஊழல் ஒழிப்பு என்னும் ஒற்றைச் செயற்றிட்டம் மட்டும் போதாது; சிந்தாந்த அடிப்படையிலான தொலைநோக்கும் அதனை அடைவதற்கான நிறுவன அமைப்பும் தேவை என்பதனை எடுத்து உரைக்கின்றன. தம்மை ஊழலுக்கு எதிரானவர்களாகக் காட்டிக்கொள்ளும் ஆம் ஆத்மிகளின் அரசியல் சிந்தாந்தம் தெளிவற்றதாக இருக்கிறது. அவர்கள் “மகாத்துமா காந்திக்கு ஜே” என்னும் முழக்கமிட்டும் மராட்டிய குல்லாயை அணிந்தும் தங்களை காந்தியவாணர்கள் எனக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள். ஆனால் காந்தியத்தின் அடிப்படைக் கேட்பாடுகளான சிற்றூர் மைய தற்சார்புப் பொருளாதாரம், அதிகாரப் பரவல், கதர் – கிராம தொழில்நுட்ப மேம்பாடு, மதநல்லிணக்கம் ஆகியன போன்றவற்றில் அவர்களுடைய நிலைப்பாடு என்னவென்பது இதுவரை தெளிவாகவில்லை. காசுமீர் பிரச்சனைக்கான அணுகுமுறையில் அவர்களுக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லை என்பதனை பிரசாந்த் பூசன், அரவிந்த கெசுரிவால் இருவரின் கூற்றுகளுமே எடுத்துரைத்துவிட்டன. சாதியம், இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலம், பெண்ணுரிமை, குழந்தைகள் உரிமை, அணுக்கொள்கை, உலகமயமாக்கம் ஆகியவன் போன்றவற்றில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை அவர்கள் வெளியிடவில்லை. இவைகளைப் போன்ற கொள்கைசார் பிரச்சனைப் பற்றிப் பேசுவதே அரசியல் ஆகும். ஊழல் ஒழிப்பு ஒரு செயற்றிட்டமே; ஒரு செயற்றிட்டமே அரசியல் ஆகாது என்பதனை ஆம் ஆத்மிகள் உணர வேண்டும்.

சொல் ஒன்றும் செயல் ஒன்றும்


இன்றைய அரசியல்வாணர்களுக்கு சொல் ஒன்றாகவும் செயல் வேறொன்றாகவும் இருக்கிறது என்பதுதான் ஆம் ஆத்மிகளின் குற்றச்சாட்டு. அப்படியானால் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்கிறார்களா என்னும் கேள்வி எழுகிறது. அரசு ஊழியர்கள் தம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்னும் அவர்களது கூற்று வரவேற்கத்தக்கது. அதேவேளையில் ஆம் ஆத்மி தலைவர்கள் தம் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்களா? குறிப்பாக அரவிந்த் கெசுரிவால் அரசு அதிகாரியாக இருந்தபொழுது தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைத்தாரா? இப்பொழுதும் அவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்களா? என்னும் வினாகள் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு (ஆம் ஆத்மிகளுக்கு) எழுகின்றன. அதற்கு விடைகூற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

பதவி வேட்கையால் கலகம் செய்கிறார் எனக் குற்றம்சாட்டிற்கு உள்ளாகி இருப்பவர் வினோத் பின்னி. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்; ஆனால் இது கட்சியின் விதிகளுக்கு எதிரானது என ஆம் ஆத்மிகள் கூறுகிறார்கள். ஆனால் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அரவிந்த் கெசுரிவால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இடுவார் என அறிவிக்கிறார்கள். இவ்வாறு ஆளுக்கு ஏற்ப கட்சியின் விதிகளை மாற்றும் அல்லது வளைக்கும் முரண்பாடு ஆம் ஆத்மிகள் மாற்று அரசியல்வாணர்கள் அல்லர்; சொல் ஒன்றும் செயல் ஒன்றாகவும் வாழும் புதிய அரசியல்வாணர்களே என்பதனைத் தெளிவுபடுத்துகிறது.

வெற்று வேடங்கள்
வெற்று கவனஈர்ப்பு நடவடிக்கைகள் (Stunt) அரசியலரங்கில் விரைவில் பொருளற்றவைகளாக மாறிவிடுகின்றன. அத்தகு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கோமாளிகளாகத் தம்மைத்தாமே ஆக்கிக்கொள்கிறார்கள். அப்பொழுது அந்தப் பணியை ஆம் ஆத்மிகள் “மிகச் சிறப்பாக”ச் செய்துகொண்டு இருக்கிறார்கள். பதவியேற்பு நாளில் புதைதொடர்வண்டியில் (Metro Train) வந்தது; அரசு வீடு வேண்டா, அரசு வண்டிகள் வேண்டா என முதலில் கூறிவிட்டு பின்னர் அவற்றை வேண்டிப்பெற்றது என அவர்களது வெற்று வேடங்கள் வெளிப்படுகின்றன.

இலக்கற்ற ஏவுகணைகள்
அரசியல்வானில் சுடர்விட நினைப்பவர்களுக்கு தமது நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதனைச் செயற்படுத்துவதற்குப் பொருத்தமான உத்தியைத் தேர்ந்தெடுத்துச் செயற்படுத்த முடியும். இந்திய விடுதலைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற சோசலிசக் குடியரசுகளைக் கொண்ட ஒன்றியமாக விடுதலைபெற்ற இந்திய ஒன்றியம் அமையும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை அமல்படுத்தக் கோரித்தான் இந்தியா விடுதலைபெற்ற நாள் முதலே ம. பொ.சி. தன்னுடைய தமிழரசுக் கழகத்தின் வழியாகப் போராடினார். திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட தி.மு.க. மாநிலத் தன்னாட்சி என்னும் புதிய பெயரில் அக்கருத்தை சாரமற்ற வடிவில் தூக்கிப் பிடித்தது; இப்பொழுதும் தேவைப்படும்பொழுது பயன்படுத்திக் கொள்கிறது. மாநிலத் தன்னாட்சி என்னும் அக்கருத்தாக்கத்தின் அடிப்படை நோக்கம் ஒன்றிய அரசில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே ஆகும். அக்கருத்தாக்கத்தை பொது அரங்கில் விவாதப் பொருளாக மாற்றுவதற்கான அருமையான வாய்ப்பு, ‘தில்லி நகர காவல் துறை யாருடைய அதிகாரத்திற்கு உட்பட்டது?’ என்னும் சிக்கலில் உருவானது. அரவிந்த் கெசுரிவாலுக்கு மாநில தன்னாட்சி என்னும் அரசியற்கோட்பாட்டு நோக்கம் இல்லை; அதனால் தில்லி காவல்துறை தில்லி ஒன்றியப்பரவின் அரசுக்குக் கட்டுப்பட்டது என்னும் எதிர்நோக்கிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. எனவேதான் அவ்வாய்ப்பை போராட்டம் நடத்தி தன்னை விளம்பரம் செய்துகொள்ளல் அவர் பயன்படுத்தினார். அதன் விளைவு, அவரது அரசியல் அறிவின் அளவு அம்பலப்பட்டுவிட்டது. அவரது முயற்சிகள் இலக்கற்ற ஏவுகணைகளாக பாய்ந்து விழுந்தன.

ஐயத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்
ஊழலுக்கு எதிராகக் களமாடுபவர்கள், ‘சீசரின் மனைவி ஐயத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்’ என்பதைப் போல, தாம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதனை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தாமும் தாம் சார்ந்திருக்கும் நிறுவனங்களும் அமைப்புகளும் கையாளும் நிதியை பற்றிய தகவல்களை வெளிப்படைத்தன்மையைக் கொண்டவைகளாக ஆக்க வேண்டும். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்னால், அரவிந்த் கெசுரிவால் அரசின் செயற்பாட்டில், குறிப்பாக நிதிப் பயன்பாட்டில், வெளிப்படைத்தன்மையை கோரிப்பெறும் தகவல் உரிமைச் சட்டச் செயற்பாட்டாளராக விளங்கி விருது பெற்றவர். ஆனால் அவரது நிறுவனத்தின் நிதிக்கணக்குகளின் வெளிப்படைத்தன்மை பற்றி அண்ணா கசாரேயின் போராட்டத்திற்கு முன்னும் பின்னும் வினாகள் எழுந்தவண்ணம் இருந்தன. அந்த வினாகளுக்கு இன்றுவரை அவர் தெளிவான விடைகளை அளித்ததாகத் தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்காக தொடர்ந்து வெளிநாட்டில் நிதி திரட்டப்படுகிறது. யார் எவ்வளவு நிதியை அக்கட்சியை அளித்திருக்கிறார்கள் என்னும் தகவல் அக்கட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் இவ்வாறு பெருமளவு நிதியைத் திரட்டுவதற்கான நோக்கமும் அதனைச் செலவிடுவதற்கான செயற்றிட்டமும் அங்கு காணப்படவில்லை. அல்லரசு அமைப்புகள் (Non – Government Organizations) சில தாம் களத்தில் அதுவரை ஆற்றிய பணியை எடுத்துரைத்து நிதி திரட்டுவதைப்போல இச்செயல் இருக்கிறது. இவை ஆம் ஆத்மிகளின் நோக்கத்தையே ஐயத்திற்கு உரியதாக மாற்றுகின்றன.

எனவே, இந்திய முதலாளிகள் சுதந்திரா என்னும் கட்சியை வளர்த்தெடுத்ததைப் போல, இந்துமத வெறியர்கள் பாரதிய சனதா என்னும் கட்சியை முன் நிறுத்துவதைப்போல, அரசியல் தெளிவற்ற அல்லரசு அமைப்புகள் சில ஆம் ஆத்மியை வளர்த்தெடுக்கின்றனவோ என்னும் ஐயம் தோன்றுகிறது. இந்த ஐயத்தை நீக்கவும் தமக்கும் அரசியல் சித்தாந்தம் உண்டு என மெய்ப்பிக்கவும் தாம் சொல்வீரர்கள் அல்லர்; செயல்வீரர்கள் என வாழ்ந்துகாட்டவும் வேண்டிய கட்டாயம் ஆம் ஆத்மிகளுக்கு இருக்கு நேர்ந்திருக்கிறது. ஆம்! இந்த யானைப் பாகர்கள் தாம் வெற்றிகரமான யானைகளே என மெய்ப்பிக்க வேண்டிய நெருக்கடியில் நிற்கிறார்கள். மெய்ப்பித்தால் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது; தவறினால் கால ஏட்டில் எழுதப்பட்ட ஒற்றை வரியில் அவர்களது வரலாறு முடிந்துவிடும். ஒளிமயமான எதிர்காலமா? ஒற்றைவரி வரலாறா? என்னும் இரண்டு வாய்ப்புகளில் தமக்குத் தேவையான ஒன்றை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இப்புது அரசியல்வாணர்கள் மாற்று அரசியல்வாணர்களாக மாறினால் அவர்களை ஏற்கவும் மாறவில்லை என்றால் மறுதலிக்கவும் சாமானிய மக்களான நமக்கு உரிமை இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

பா. ச. க.வும் காங்கிரசும் பதறுவது ஏன்?

பெரியவர்கள் சிலர், தாங்கள் வலிமையானவர்கள் எனக் காட்டவதற்காகக் கட்டிய காகித மாளிகையை அவ்வழியாக ஓடிவந்த சிறுவர்கள் ஒரே தட்டில் தடதடவெனச் சரியச் செய்வதைப் போல பாரதிய சனதா கட்சியினர் கடந்த சில ஆண்டுகளாக ஊதிப் பெருக்கச் செய்துகொண்டிருந்த “மோடி அலை” என்னும் காகித மாளிகையை தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் தம்மை அறியாமலேயே தட்டிச் சரித்துவிட்டனர்.



2013 திசம்பரில் மத்தியபிரதேசம், சட்டீசுகர், இராசசுதான், மிசோசரம், தில்லி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இவற்றுள் பா.ச.க. தான் ஏற்கனவே ஆண்டுகொண்டிருந்த மத்தியபிரதேசம், சட்டீசுகர் ஆகிய மாநிலங்களைத் தக்க வைத்துக்கொண்டது. கடந்த சில தேர்தல்களில் பா.ச.க., காங்கிரசு என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி ஆட்சியை ஒப்படைத்த இராசசுதான் மக்கள் இம்முறை ஆட்சியை காங்கிரசிடமிருந்து பறித்து பா.ச.க.விடம் கொடுத்துவிட்டனர். மிசோரத்தில் பா.ச.க.விற்கு வேர்களே இல்லாததால் அம்மாநிலத்தை ஏற்கனவே ஆண்டுகொண்டு இருந்த காங்கிரசு தக்க வைத்துக்கொண்டது.



காங்கிரசும் பா.ச.க.வும் தமது வலிமையை நாட்டிற்குக் காட்டுவதற்கான களமாக தில்லி சட்டமன்றத் தேர்தலை நம்பின. அத்தேர்தலில் காங்கிரசு, பா.ச.கட்சி ஆகியவற்றோடு கடந்த 2012 அக்டோபர் 2ஆம் நாள் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டது. ஆம் ஆத்மி கட்சியால் பா.ச.க.வின் வாக்குகள் பிரிந்து தாம் வென்றுவிடலாம் என காங்கிரசும், காங்கிரசின் மீது படிந்திருக்கும் ஊழல் கறையால் அதன் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்து தாம் ஆட்சி அமைக்க வழிவகுக்கும் என பா.ச.க.வும் தேர்தலின் பொழுது நினைத்திருக்கக் கூடும். ஆனால் தேர்தல் முடிவோ வேறுவிதமாக அமைந்துவிட்டது. தில்லி சட்டமன்றத்திற்கு உரிய 70 தொகுதிகளில் பா.ச.க. 32 தொகுதிகளையும் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளையும் காங்கிரசு 8 தொகுதிகளையும் ஐக்கிய சனதாதளம் 1 தொகுதியையும் தனிவேட்பாளர் 1 தொகுதியையும் கைப்பற்றி உள்ளன. ஊதிப் பெரிதாக்கப்பட்ட மோடி அலை தில்லியில் பா.ச.க.வை கரை சேர்க்கவில்லை. பலரும் எதிர்பார்த்ததைப் போல காங்கிரசு ஆட்சியை இழந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடத்தைக் கைப்பற்றி எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது.



ஆட்சியமைக்க குறைந்தது 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில் அதிக தொகுதியை வென்ற பா.ச.க. விற்கு ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குதிரைபேரம் நடத்தி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பும் அக்கட்சிக்கு இல்லை. மாறாக ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவை வேண்டிப் பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பா.ச.க.விற்கு இருந்தது. ஆனால், “மக்கள் எங்களை எதிர்க்கட்சியாகத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம்; அது எங்களது நோக்கமன்று” என ஆம் ஆத்மி கட்சியினர் அப்பொழுது கூறிவந்தனர். எனவே, தாம் ஆட்சி அமைக்க மறுத்தால் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சி அமுலபடுத்தப்பட்டு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலோடு இச்சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். அதுவரை மோடி அலை என்னும் மாயவலையைத் தொடர்ந்து பின்னி, நாடாளுமன்றத்தையும் தில்லி சட்டமன்றத்தையும் ஒரே நேரத்தில் பிடித்துவிடலாம் என பா.ச.க. கருதியது. எனவே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்தும் ஆட்சி அமைக்க மறுத்தது. பா.ச.க. எதிர்பார்த்தபடியே தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை செயலாக்கம் செய்யும் நடைமுறைகள் தொடங்கின.



இதற்கிடையில் அரசியல் நோக்கர்கள், ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இதன் மூலம் மறுதேர்தல் என்னும் செலவைத் தவிர்க்கலாம் எனக் கருத்துக் கூறத் தொடங்கினர். வீசுவதாகக் கூறப்படும் மோடி அலையை துடைத்து எறிய விரும்பிய காங்கிரசு, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாகக் கூறியது. இச்சூழ்நிலை மாற்றம் ஆம் ஆத்மி கட்சியினர் மனதில் மாற்றத்தை மெல்ல மெல்ல உருவாக்கியது. தாம் ஆட்சி அமைக்க உதவும் கட்சி, தாம் விதிக்கும் 18 கட்டளைக்கு உட்பட வேண்டும் எனக் கூறி அவற்றை காங்கிரசு, பா.ச.க. ஆகியவற்றிற்கு அனுப்பி வைத்தது. பா.ச.க. அக்கட்டளைகளை ஏற்க மறுத்தது. காங்கிரசு அவற்றுள் 16 கட்டளைகள் நிர்வாகம் தொடர்பானவை; அவற்றை ஆட்சி அமைக்கும் கட்சி தானே நிறைவேற்றிக்கொள்ளலாம் எனவும் 2 கட்டளைகள் மட்டுமே சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியவை; அவற்றிற்கு தம் ஆதரவு உண்டு எனவும் தெரிவித்தது. ஆம் ஆத்மி கட்சியினர், ஆட்சிக்காக தம் எதிரியோடும் கைகோர்த்துக்கொண்டவர்கள் என்னும் முத்திரை தம் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக மக்களிடம் கருத்துக் கேட்டல் என்னும் முறையை அறிமுகம் செய்து தில்லி வாக்காளர்களிடம் கருத்துக் கேட்டனர். சில நாள்களுக்குப் பின்னர் காங்கிரசு கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைக்க தமக்கு மக்கள் ஆணையிட்டுவிட்டார்கள் எனக் கூறி அமைச்சர்களின் பட்டியலை அறிவித்து அரவிந்த் கெசுரிவால் தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.



பா.ச.க. தான் எதிர்பாராத இந்தத் திருப்பத்தைக் கண்டு திகைத்துப்போய் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி கவனமாகக் கட்டமைக்கப்பட்ட “மோடி அலை”, ஆம் ஆத்மியால் துடைத்து எறியப்பட்டதாலும் அந்நிலை அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளையும் பாதிக்குமோ என்னும் அச்சத்தாலும் பதறித் துடிக்கிறது. அண்ணா கசாரே உண்ணாவிரத்தை அடுத்து நடந்த நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஒன்றில் அரவிந்த் கேசிரிவாலின் தூண்டுதலில் அண்ணா கசாரே காங்கிரசை எதிர்த்து பரப்புரை ஆற்றியதை நட்போடு வரவேற்ற பா.ச.க. இப்பொழுது அதே அரவிந்த் கெசிரிவாலை நம்பிக்கைத் துரோகியாகப் பார்க்கிறது. ஆம் ஆத்மிக் கட்சியினர் தில்லி மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் எனப் பிதற்றத் தொடங்கி இருக்கிறது. அதன் பதற்றம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் எதிரொலிக்க இருக்கிறது.

அதேவேளையில் பூனை மடியில் கட்டிக்கொண்டு திருடப் போனதைப் போல, மோடி அலையை துடைக்க ஆம் ஆத்மிக் கட்சியினரை ஆதரிக்கிறமோ என்னும் அச்சம் காங்கிரசிற்கு இருக்கிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல்களைத் தோண்டி எடுப்போம்; உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஆம் ஆத்மி கட்சியினர் பேசத் தொடங்கி இருப்பது காங்கிரசு கட்சியினர் பலரின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கி இருக்கிறது. எனவேதான் காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சனார்த்தனன் திவேதி, ஆம் ஆத்மி கட்சியினர் பலி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என சில நாள்களுக்கு முன்னர் கூறி இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியினர் அவ்வாறு ஈடுபட்டால் சரண்சிங், சந்திரசேகர் போன்ற பெரும்புள்ளிகளையே, பஞ்ச தந்திரங்களில் ஒன்றான அடுத்துக்கெடுத்தலைப் பயன்படுத்திக், கவிழ்த்த தங்களால் அரசியல் அனுபவம் அற்ற அரவிந்த் கெசிரிவாலையும் கவிழ்த்துவிட முடியும் என காங்கிரசு நம்பிக்கொண்டு இருக்கிறது.

எனவே பா.ச.கட்சியை பதற வைத்திருக்கிற, காங்கிரசு கட்சிக்கு உதறலைக் கொடுத்திருக்கிற ஆம் ஆட்சியின் ஆட்சிக் காலம் ஒரே ஒரு நாளாகவும் இருக்கலாம் ஐந்தாண்டுகளாகவும் இருக்கலாம்; அது அவர்கள் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கையைப் பொறுத்து இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

நிலமற்ற ஏழைகளுக்கு நிலவுரிமை

வே. வேங்கடாசலபதி சிவகங்கையில் வாழும் சமூகச்செயற்பாட்டாளர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தலித்கள், குழந்தைகள், மீனவர்கள் உள்ளிட்ட விளிம்புநிலையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து வினையாற்றுபவர். அவை பற்றி கட்டுகரைகளும் பாடல்களும் இயற்றும் இவர், கவியோகி சுத்தானந்த பாரதியாருக்கு பெயரன் முறையினர். 2010 செப்டம்பர் 19 ஆம் நாள் நிலவுரிமை பற்றி எழுதிய கட்டுரை இங்கே பதியப்படுகிறது.


உயிரினங்களுக்கு இயற்கை அளித்துள்ள உன்னதமான பரிசுகளில் நிலம் ஒன்றாகும். உயிர் வாழ்க்கை இப்பூவுலகில் தொடருவதற்கு நிலமும் அடிப்படை ஆதாரமாக உள்ளது. விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இன்னும் கண்ணுக்குப் புலப்படதா எண்ணற்ற உயிரனங்கள் நிலமகளுக்கு உறுதுணையாக உள்ளன. இயற்கையை அண்டி வாழ்ந்தாலும் இவ்வுயிரினங்கள் இயற்கையின் எதிரிகளாக இருப்பதில்லை. மனித இனம் மட்டுமே இயற்கையை வரம்பற்று சுரண்டி வாழ்கின்றது. மனித இனம் இயற்கை வளங்கைள தன் சுயதேவைகளுக்கு மிதமிஞ்சிய போக்கில் சுரண்டி அழிக்கிறது. இயற்கையின் விதிமுறைகளையும், தன்மைகளையும் அறிந்து அதற்கு தக்கவாறு மனித இனம் இயற்கையை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையை அறிந்தோ அறியாமலோ நடக்கும் இந்தச் சுரண்டல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டுதான் போகின்றது. இந்தச் சுரண்டலைத் தாங்காமல் இயற்கையும் தனது வலுவை அவ்வப்பொழுது காட்டத் தவறுவதில்லை. ஆனால், மனித இனம் இயற்கையின் அச்சுறுத்தலையெல்லாம் சிறிதும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

இவ்வாறாகிய தவறான இயல்பு வளர்ந்துருப்பெற்ற மனித இனம் தனக்குள்ளேயும் சுரண்டல் விளையாட்டுகளை ஆடுகின்றது. தன்னைவிடப் பன்மடங்கு வலுவாய்ந்த இயற்கையையே தனக்கு அடிமையாக்க எண்ணும் மனிதர்கள், தங்களுக்குள்ளேயும் அடிமைப்படுத்தி வைக்கவும், சுரண்டலுக்குள்ளாக்கவும் ஒரு தரப்பினரை உருவாக்கி வைத்துள்ளனர். வளங்களும் வாய்ப்புகளும் வளர்ச்சியும் சமமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பது நெறியாகும். இந்நெறிக்கு மாறாக சமூகத்தின் போக்கு இருக்குமேயாயின், அதைச் சீர்படுத்தி செம்மை செய்வது மனித நேயம், சமூக நீதி, சம மேம்பாடு, இயற்கைசார வாழ்வு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டோருக்கு முதல் பணியாகும். இயற்கைப் பொதுவளமான நிலம் சமனற்ற வகையில் உடைமையாக்கப்பெற்றும் எதிர்மறைப் பயன்பாட்டிற்கு மிகுதியாக உட்படுத்தப்பெற்றும் பல்வேறு வகையான சமூக-பொருளாதார ஏற்றதாழ்வுகள் உண்டாகி நிலைக்க அடிப்படையானதாகவும் மாற்றப்பெற்றுள்ளது.

இன்றைய நிலையில் நிலவுடைமையானது சமூகப் பொருளாதார தரவரிசையைத் தீர்மானிப்பதாகவும், ஓட்டு அரசியலை நிர்ணயிக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்த நிலவுடைமை ஒரு சாராரிடம் மிகுதியாக இருக்கும் பொழுது நிலவுரிமை மறுக்கப்பெற்று வஞ்சிக்கப்பெற்ற வர்க்கம் ஒன்று உருவாகின்றது. தங்கள் உடலுழைப்பைத் தவிர பொருளீட்ட உதவும் பெரிய அளவிலான வேறெந்தப் பொருள் வளங்களோ, சொத்துகளோ இல்லாத உழைக்கும் ஏழை மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதே இவ்வர்க்கம். இவ்வாறாகிய ஏற்றதாழ்வு மிக்க சமூக-பொருளாதாரச் சூழலில் சமமான மேம்பாடு, நீடித்த மேம்மாடு என்பதெல்லாம் எவ்வாறு சாத்தியமாகும்? எனவே, நிலம், நிலவுடைமை தொடர்புடைய அநீதிகளையும், சர்ச்சைகளையும் உடனே முடிவுக்குக் கொண்டு வருவது குறித்துத் தீர ஆராய்ந்து திட்டம் வகுத்துச் செயலாற்ற வேண்டிய தருணம் இது. நிலமற்ற ஏழைகளை ஏறெடுத்துப் பார்க்காத இன்றைய சமூக அமைப்பு, பொருளாதாரத் திட்டங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியவைதானே! ஓட்டு அரசியலைத் தாண்டியதொரு சாமான்ய மக்களின் அரசியல் உள்ளது. அதை வலுப்படுத்தி நடைமுறையில் செயல்படச் செய்தல் நிகழ்காலத்தின் நிர்ப்பந்தம். எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளை எட்டிப்பிடிக்க உடனடியாக செயல்படுத்த வேண்டிய உத்தியாகும். இதை நோக்கி மக்களை ஈடுபடுத்தும் செயல்பாடுகளைத் தொடங்கும் தருணம் இது. வஞ்சிக்கப்பெற்ற நிலமற்ற ஏழை மக்களின் எழுச்சியும் கூட்டுச் செயல்பாடும் வன்முறையற்ற வழிகளில் ஒருமுகப்படுத்தப்பெற வேண்டும். எட்டுத் திக்கிலும் இதற்குத் தேவையான ஆதரவைத் திரட்ட வேண்டும். விடுதலைப் போராட்டம் காலம் தொடங்கி நமது நாட்டில் நடைபெற்ற எல்லா வகையான அறப்போராட்டங்களிலும் சாமான்ய மக்களின் பங்கேற்புதான் வெற்றி இலக்கை அடைய வித்தாக அமைந்தது. இந்த உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

வஞ்சிக்கப்பெற்ற ஏழைகளின் எழுச்சியில் புதிய வரலாற்றின் தொடக்கம் நிகழும். சமத்துவமும், மனித நேயமும் தழைக்க வகை செய்யும் முன்னேற்றமான சமூக மாற்றமே உன்னதமான இலட்சியம். இந்த இலட்சியத்தை நோக்கிய நமது பயணம் தடைகளும் சவால்களும் மிக்கதாக இருக்கும். எனினும் பயணத்தைத் தொடங்கியே தீருவோம். இந்த இலட்சியப் பயணத்தை ஓட்டு அரசியல் சாராத பொதுநல இயக்கங்கள், தன்னார்வ சமூக செயல்பாட்டு அமைப்புகள், குடிமைச் சமுதாய அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து வழிநடத்த வேண்டும். சமூக அக்கரையுள்ள நாட்டுப்பற்றாளர்கள் இந்தப் பயணத்தில் இணைக்கப்பட வேண்டும். சூழ்நிலைக்கேற்றவாறு போராட்ட உத்திகளை வடிவமைத்து உறுதி குறையாது போராட வேண்டும். மகாத்மா காந்தியடிகள், ஆச்சார்ய விநோபா பாவே, ஜயப்பிரகாஷ் நாராயண் போன்ற பெரியோர்கள் கையாண்ட வன்முறையற்ற போராட்ட உத்திகளை அங்கீகரித்து ஏற்று நமது இலக்கு நோக்கி முன்னேற வேண்டும்;. நிலமற்ற உழைக்கும் ஏழைமக்களின் பெருவாரியான ஆதரவும், எழுச்சியும் இந்த இலட்சியத்தை அடைய நமக்கு வலுவான ஆதாரமாக அமையும். நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக்கப்பட வேண்டும். உண்மை, ஒற்றுமை, விடாமுயற்சி, நம்பிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு அறவழியில் போராட களம் அமைக்கப்பட வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த அழைப்பு



நேற்று காலை 8.30 மணிக்கு அலுவலகத்திற்கு பேருந்திற்குள் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது கைபேசி "பீப்" என ஒலித்தது. வலது கையிலிருந்த பையை இடதுகைக்கு மாற்றிக்கொண்டு, சட்டைப்பையில் இருந்து கைபேசியை எடுத்துப்பார்த்தேன். +61 எனத் தொடங்கும் எண் திரையில் மின்னியது. வெளிநாட்டு அழைப்பு எனத் தெரிந்தது. பேருந்தின் குலுக்கலில் யார்மீதும் மோதிவிடவோ, விழுந்துவிடவோ வகையில் நின்றுகொண்டு அழைப்பை ஏற்று கைபேசியைக் காதிற்குக் கொண்டுபோனேன்.

"வணக்கம்! அரி" “வணக்கம்! நீங்கள் அரிஅரிவேலன் தானே?” “ஆமாம்” “சில நிமிடங்கள் பேசலாமா?” “ம்ம்ம்…” அப்பொழுது பேருந்திற்குள் அலறிக்கொண்டிருந்த குத்துப்பாட்டின் ஒலியையும் மீறி ஓட்டுநர் ஒலிப்பானை அழுத்த, எதிர்முனையில் இருப்பவர் என்ன சொன்னார் என்பதே காதில் விழவில்லை. "பேருந்தில் இருக்கிறேன். பத்து நிமிடம் கழித்து கூப்பிடுகிறீர்களா?" என்றேன். "சரி ஐயா, அழைக்கிறேன்" என்றார் எதிர்முனையில் இருந்தவர்.

பத்து நிமிடம் கழித்து கைபேசி அழைத்தது. நான் அலுவலகத்தின் வாசலில் இருந்தேன். எடுத்து பார்த்தால் அதே எண்.

“வணக்கம். அரி பேசுகிறேன்.” “வணக்கம். நான் செல்வராஜ். ஆஸ்திரேலியா வானொலியில் இருந்து பேசுகிறேன். இது இந்திய நாட்டில் அகில இந்திய வானொலியைப் போல ஆஸ்திரேலிய வானொலி. இதன் தமிழ்ப் பிரிவில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் நான். இந்த வானொலியில் தமிழகத்தின் அரசியல் நிலையைப் பற்றிய கருத்தை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்களிடம் பேட்டிகண்டு ஒலிபரப்புவோம். ஞாநி, சிகாமணி போன்றவர்கள் அவ்வாறு கருத்துக் கூறியிருக்கிறார்கள். இம்முறை நீங்கள் கருத்துக் கூற முடியுமா?”

'பார்ரா, உன்னோட புகழ் ஆஸ்திரேலியா வரைக்கும் பரவி இருக்கிறது' என்று கிண்டல் செய்தது மனம் ஒரு பக்கம். மறுபக்கம் 'வேறு யாரே என நினைத்துக்கொண்டு நம்மிடம் பேசுகிறார்' என எண்ணியவாறே, “என்னைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? எனது எண் எப்படி உங்களுக்குக் கிடைத்தது?” என வினவினேன்.

“நண்பர் கொடுத்தார். அவர் உங்களுடைய எழுத்துகளைப் படித்திருக்கிறார். அதனால்தான் அழைத்தேன்” “அப்படியா?” “ஆமாம். முகநூலில் படித்திருப்பார்போல” “சரி. இப்பொழுது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ “இன்றைய தமிழக அரசியல் சூழலைப் பற்றி இரண்டு அல்லது மூன்று கேள்விகளை நான் கேட்கிறேன். நீங்கள் அதற்கு பதில் சொல்லுங்கள். அதிலிருந்து சில துணைக்கேள்விகளைக் கேட்கிறேன். அதற்கும் பதில் சொல்லுங்கள். அவற்றை நான் பதிவுசெய்துகொள்கிறேன்.” “நான் இப்பொழுது அலுவலகத்தில் இருக்கிறேன். அதனால் உடனடியாகப் பதிவு செய்ய இயலாதே!” “இப்பொழுது கேள்விகளை முடிவுசெய்துகொள்வோம். உங்களது அலுவலக நேரம் முடிந்ததும் பதிவுசெய்துகொள்வோம்” “சரி. உங்களின் வினாகளைக் கூறுங்கள்”

அவர் மூன்று வினாகளைக் கூறினார். மூன்று மணிநேரம் கழித்து அழைத்து எனது துலங்கள்களை பதிவு செய்துகொள்வதாகக் கூறினார். இணைப்பைத் துண்டித்துவிட்டு அலுவலக வேலையில் மூழ்கிவிட்டேன்.

சரியாக பிற்பகல் ஒரு மணி. கைபேசி தும்மியது. “நண்பரே! பதிவுசெய்துகொள்ளலாமா?” “பதிவு செய்துகொள்ளலாம்”

அவர் வினாகளையும் துணை வினாகளையும் வினவினார். நான் எனது கருத்துகளைக் கூறினேன். ஏழு மணிகளுக்குள் அச்செவ்வி முடிந்தது. அது ஒலிபரப்பானதும் அதன் இணைய உரலியை அனுப்பவாதக் கூறினார். கூறியதைப் போலவே அனுப்பி வைத்திருக்கிறார். அதனைத்தான் இங்கே பகிர்ந்திருக்கிறேன்; கேட்டு உங்களின் கருத்துகளைக் கூறுங்கள்.

அந்த நண்பர் ஆஸ்திரேலியாவில் இருந்து பேசியதும் மொழிக்கலப்பின்றி தமிழைப் பேசியதும் “ழ”கரத்தை பிழையின்றி ஒலித்ததும் அவர் ஈழத்தமிழராக இருப்பாரே என எண்ண வைத்தது. வினவினேன். “இல்லை. ஈழத்திற்கு அருகில் இருக்கிற இந்திய நாட்டின் கன்னியாகுமரிப் பகுதியில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்தவன்’ என்றார். கடல்கடந்து சென்று அயலகத்தில் தமிழ்ப் பணியாற்றுகிற, தாயகத் தமிழகத்தின் அரசியலை நன்கு அறிந்து வைத்திருக்கிற அந்நண்பர் திருமிகு செல்வராஜ் வாழ்க!

அவரிடம், என்னை யாரென்றே தெரியாமல் அரசியல் கருத்துக்குரைக்கும் இதழாளர் என அறிமுகம் செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அவருக்கு “நன்றி” கூற வேண்டும் 

http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/307650/t/Would-Jeyalalitha-be-next-PM-of-India/in/language

குன்றும் நீர்வளமும் பெருகும் நீர்த்தேவையும்

ஆழ்குழாய்க் கிணற்றுக் குழிக்குள் தவறிவிழுந்து மாண்டுபோகும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அண்மைக்காலத்தில் அதிகரித்து இருக்கிறது. இச்சமூகம் குழந்தைகளின் பாதுகாப்பு உரிமையை மதிக்கவில்லை; அந்நிலத்தின் உரிமையாளருக்கும் ஆழ்குழாயைத் தோண்டும் ஒப்பந்ததாரருக்கும் பொறுப்பில்லை; குழிக்குள் விழுந்துவிட்ட குழந்தையை உடனடியாக மீட்கத் தேவையான கருவிகள் தீயணைப்புத் துறையினரிடம் இல்லை ஆகியன போன்றவை இந்நிகழ்விற்கான காரணிகள் என்னும் பட்டியலில் ஓரளவு உண்மை இருக்கிறது; ஆனால் இப்பட்டியலே முழு உண்மை அன்று. அந்த நிலத்தின் உரிமையாளர் ஆழ்குழாய் கிணற்றை அமைக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்னும் வினாவிற்குள்தான் இந்நிகழ்வின் முழுக்காரணமும் மறைந்து இருக்கிறது.



ஒரு தலைமுறைக் காலத்திற்கு முன்னர் பருவ மழை பொய்க்கிற பொழுதில் மட்டுமே தமிழகம் வறட்சியால் வாடியிருக்கிறது; ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் நீர்ப்பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு கூடிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் மழைப்பொழிவு குறைந்துகொண்டே வருகிறது. இதன் விளைவாக நிலத்தடி நீரின் அளவு குறைந்துகொண்டே போகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் 40 அடி ஆழம் உள்ள கிணற்றிலிருந்து கமலையைக்கொண்டு நீரை இறைந்த உழவர், இன்று 300 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய்க் கிணறைத் தோண்டி மின்னேக்கியைப் (Electric pump) பயன்படுத்தி நீரை இறைக்கிறார். எனினும் அவரால் வேளாண்மைக்குத் தேவையான அளவிற்கு நீரைப் பெற முடியவில்லை. எனவே, வேறோர் இடத்தில் ஆழ்க்குழாயைத் தோண்டுகிறார்; அங்கும் போதுமான நிலத்தடி நீர் கிடைப்பதில்லை. அவர் அந்த ஆழ்குழாயை அப்படியே கைவிட்டுவிடுகிறார். அவ்வாறு கைவிடப்பட்ட குழிக்கு அருகில், தன் மூதாதைகள் ஓடி விளையாடிய ஊர்ப்பொது இடங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டதால் தனக்கான விளையாட்டிடத்தை இழந்த, குழந்தை விளையாட வந்து தவறி அக்குழாய்க்குள் விழுந்துவிடுகிறது. அதாவது கடந்த 40ஆண்டுகளில் படிப்படியாக குன்றிவரும் நீர்வளமும் பெருகிவரும் நீர்த்தேவையும் உழவரின் பிழைப்புப்பாட்டிற்கான வளத்தைப்பெறும் உரிமையையும் (Right to access livelihood resources) தட்டிப்பறிக்கப்பட்டதன் விளைவாக அவர்தம் குழந்தைகளின் பாதுகாக்கப்படும் உரிமையையும் (Right to Protection) காவுவாங்குகின்றன.

நீர்வளம் குன்றியது ஏன்?

சோவியத்து நாடு உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் மேம்பாட்டு வாய்பாட்டை பிசிறுதட்டாமல் விடுதலை பெற்ற இந்தியா 1990 ஆம் ஆண்டு வரை பின்பற்றியது. அவ்வகையில் ஏறத்தாழ இந்திய நதிகளின் அனைத்தின் குறுக்கே பேரணைகள் கட்டப்பட்டன. அணைக்கு மேலே மலையின் உச்சியில் இருக்கும் புல்வெளிகள் குளம்பி, தேயிலை ஆகியன போன்ற பணப்பயிர்களுக்காக அழிக்கப்பட்டன. கானகங்கள் மரங்களுக்காக அழிக்கப்பட்டன. அதன் விளைவாக மலையில் இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதியின் அளவு குறைந்தது. இதனால் மழைப்பொழிவின் அளவு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. குறைந்தளவாக வழிந்தோடும் நீரும் பேரணையில் தேங்கி நின்றுவிட்டது. ஆறுகளில் நீரோட்டம் குன்றியது; அணையில் இருந்து தொடங்கி நதியானது கடலுக்குற் சென்று முடிவடையும் இடம் வரை உள்ள பகுதியின் சூழலமைவு சிதைந்தது. ஆற்றில் வழிந்தோடும் நீரைச் சேமித்து வைப்பதற்காக வெட்டப்பட்ட குளம், குட்டை, ஊருணி, கண்மாய், ஏரி ஆகியன போன்ற நீர்நிலைகள் வறண்டன. பின்னாளில் அந்நீர்நிலைகள் மூடப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதன் விளைவாக நிலத்தடி நீரின் அளவு படிப்படியாகக் குன்றத் தொடங்கியது. எனவே வேளாண்மையைச் சார்ந்திருந்த மக்கள் வாழ்க்கைப்பாட்டை இழந்து ஊரகப் பகுதியில் இருந்து நகரத்தை நோக்கி நகர்ந்தனர். மறுபுறம் மேம்பாடு என்ற பெயரால் நகரங்கள் வீங்கத் தொடங்கின. அந்நகரங்களுக்குத் தேவையான நீர், கிராமத்து நீர்நிலைகளில் இருந்து சுரண்டப்படுகின்றது. இதனால் எங்கெங்கும் நீர் வளம் குன்றியது.



நீர்த்தேவை பெருகியது ஏன்?

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொய்த்துப்போன “பசுமைப்புரட்சி” 1960 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வேதி உப்புகளும் பூச்சிக்கொல்லிகளும் வயல்வெளிகளில் கொட்டப்பட்டன. இதனால் இயற்கை உரங்களும் உயிரிகளும் மறைந்தன. நிலத்தின் ஈரத்தன்மை உலர்ந்து வறண்டது. வேளாண்மைக்குப் பெருமளவு நீர்த் தேவைப்பட்டது. ஆனால் மறுபக்கம் நீர்நிலைகள் கட்டிடங்களால் நிரப்பப்பட்டன. நீர்த் தேவையும் பற்றாக்குறையும் பேருருக்கொண்டு எழுந்துநின்கின்றன. இந்நிலையில் 1990 ஆம் ஆண்டுகளில் தொடங்கி வைக்கப்பட்ட உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றில் நீர் வணிகப் பொருளாக மாறிவிட்டது. இதன்விளைவாக பன்னாட்டுக் கும்பணிகள் நிலத்தடி நீரை பெருமளவில் உறிஞ்சுகின்றன. இதனால் சிறு நிலவுடைமையாளர்கள், பொதுமக்கள் தம்முடைய குறைந்தளவு நீர்த்தேவைக்காக நவீனத் தொழில்நுட்பம் என்னும் பெயரால் அறிமுகம் செய்யப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகளை கணக்கு வழக்கு இன்றி அமைத்து பல நூறு அடிகள் வரை போட்டிபோட்டுக்கொண்டு நிலத்தைத் துளைக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் நாள்தோறும் கீழ்நோக்கி இறங்கிக்கொண்டே இருக்கிறது. நீரற்ற ஆழ்குழாய்க் கிணறுகள் தமது வாயைத் திறந்து குழந்தைகளைக் காவுவாங்கக் காத்துக்கொண்டு இருக்கின்றன.

என்னதான் தீர்வு?

எனவே, அழிந்துகொண்டிருக்கும் நீர்நிலைகளை மறுசீரமைப்பதும் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் பொதுநிலங்களை மீட்டெடுப்பதும் இந்த அவலநிலையை மாற்றுவதற்கான முதல் தேவையாக இருக்கின்றன. அழிக்கப்பட்ட கானகங்களை மீண்டும் உருவாக்குவதும் பணப்பயிர் தோட்டங்களின் அளவு விரிவாக்காது இருப்பதும் மலைகள் மீது நிகழும் குடியேற்றங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதும் இரண்டாவது தேவையாக இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் முறையாகச் செயற்படுத்த மக்களின் பிழைப்புப்பாட்டு வளங்களான நீர், நிலம், காடு, காற்று ஆகியவற்றின் மீது மக்களின் கட்டுப்பாட்டு உரிமையை உறுதிசெய்வதும் உடனடித் தேவையாக இருக்கிறது. இவற்றை அரசு செய்யும் எனக் காத்திராமல், மக்களே தம்முடையை கூட்டியக்கத்தின் வழியாக அறவழியில் முன்னெடுக்க வேண்டிய நெருக்கடி நேர்ந்திருக்கிறது. அந்நெருக்கடியை எதிர்கொள்வோமா?

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...