நந்தவனத்திலோர் ஆண்டி



நன்றி: ஓவியர் ஜீவா
“இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் . . .  அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது” என 1969ஆம் ஆண்டில் கா. ந. அண்ணாதுரை மறைந்த பொழுது அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கண்ணதாசன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற் பேசியவர் ஜெயகாந்தன்.  எனவே தனிமனிதராகிய அவரது மரணத்தின் பொருட்டு அவரைப் பற்றிய அவரது படைப்புகளையும் சிந்தனைகளையும் பற்றிய எதிர்நிலைக் கருத்துகளை, ‘நாகரிகம்’ கருதி நம் மனதிற்குள் புதைத்துக்கொண்டு, அவரது தோளில் புரளும் தலைமுடியையும் முறுக்கிவிடப்பட்ட மீசையையும் சட்டைபோடாமல் வெற்றுடம்புடன் தன்வீட்டு மொட்டைமாடியின் கீற்றுக் கொட்டகைக்குள் தான் கூட்டிய சபையின் நடுவில் அவர் அமர்ந்து ‘சிலுப்பி’யை ஒயிலாய்ப் பிடித்து கஞ்சாப்புகையை உள்ளிழுத்து மெல்ல மெல்ல விடுகின்ற அழகை(?)யும் விதந்தோதி ‘அக்காட்சியைக் கண்டதே தனது பிறப்பின் பேறு’ எனப் பிதற்றுவது ‘இலக்கியத் தரம்’ அற்ற ‘அநாகரிகம்’ என்பதனால் அவரது வாழ்க்கையையும் படைப்புகளையும் சிந்தனைகளையும் அவரது மரணத்தின் பொருட்டு ஒரு பறவைப் பார்வையேனும் பார்த்து, அவற்றிலிருந்து இந்தக் குமுகம் எதனையேனும் கற்றுக்கொண்டு தன்னை உன்னதப்படுத்திக் கொள்ள இயலுமா என ஆராய்வதே அவருக்குச் செலுத்தும் பொருத்தமான நினைவஞ்சலியாக இருக்கும் என நம்பியதன் விளைவே இக்கட்டுரை. 

60'களின் தொடக்கத்தில் ஜெயகாந்தன்
கெடில நதிக்கரையில் அமைந்துள்ள கடலூர் மஞ்சக்குப்பத்தில் 1934-ஏப்ரல் 24ஆம் நாள் த. முருகேசனாகப் பிறந்து, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்று, விழுப்புரத்தில் இருந்த பொதுவுடைமைக் குமியத்தில் (கம்யூன்) வாழ்ந்த தன் மாமாவின் அரவணைப்பில் சில காலம் இருந்து, 1946 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து இந்திய பொதுவுடைமைக் கட்சியின் அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த குமியத்தில் வளர்ந்த ஜெயகாந்தனின் முதற் சிறுகதை, கடலூர் காந்தன் என்னும் புனைப்பெயரில் 1950ஆம் ஆண்டில் செளபாக்கியம் இதழில் வெளிவந்தது. அவர் 1952ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து 1964ஆம் ஆண்டில் அவருடைய கருத்துகளையும் அவருடைய போக்குகளையும் அவருடைய சிந்தனைகளையும் பார்த்த அவர்தம் பொதுவுடைமை நண்பர்கள், அவர் வெளியே இருந்தால், நண்பராகவே இருந்து நல்லுதவி செய்ய முடியும் என்று அவருக்குச் சொன்ன ஆலோசனையின் பேரில் அவர் அந்தக் கட்சியைவிட்டு வெளியேறினார். அந்தப் பதினைந்து ஆண்டு காலத்தில் (1950-1964) எந்தவோர் இலக்கியத்தின், இலக்கியவாணரின் தாக்கமும் இல்லாமல் அப்பொழுது அன்றாடம் காச்சியாக வாழ்ந்த ஜெயகாந்தன் தன்னைச் சுற்றியும் தன்னோடும் வாழ்ந்த அன்றாடம் காச்சிகளின் வாழ்க்கையை, இருக்க கை அகல இடமும் உடுக்க கிழியாத உடையும் உண்ண போதிய உணவும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, அவற்றின் சிடுக்குகளை எந்த வண்ணப்பூச்சுமின்றி தனது படைப்புகளாக வார்த்தெடுத்தார்.

 
நன்றி: ஒளிப்படக்கலைஞர் கவாஸ்கர்
அரசகுலத்தவரும் நிலவுடைமையாளரும் மேட்டுக்குடியினரும் செல்வந்தர்களும் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தமிழிலக்கியப் படைப்புவெளிக்குள் புதுமைப்பித்தனின் எழுத்துகள் வழியாக உள்நுழைந்து, விந்தனின் எழுத்துகளில் வளர்ந்த விளிம்புநிலை மாந்தர்களான நடைபாதையில் வாழ்வோர், பாலியல் தொழிலாளிகள், இழுவண்டிக்காரர்கள், பிச்சைக்காரர்கள், உடலுழைப்புத் தொழிலாளிகள், உளநோயாளிகள், தொழுநோயாளிகள் ஜெயகாந்தனின் சிறுகதைகளிலும் குறும்புதினங்களிலும் புதினங்களிலும் குருதியும் சதையுமாக வாழ்ந்தார்கள்.  அவர்களது வாழ்க்கையின் இன்பமும் துன்பமும், நெகிழ்வும் நெருக்கடியும், உயர்வும் தாழ்வும், மேன்மையும் கீழ்மையும் அப்படைப்புகளின் பாடுபொருளாக அமைந்தன. அப்படைப்புகள் தம்மைப் படிப்பவர்களின் மனதைப் பிசைந்து, சிந்தையைப் பிறாண்டி, குற்றவுணர்வைத் தூண்டி, தூக்கத்தைக் கெடுத்தன; ‘நம்முடைய ஆசைகளையும் பேராசைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக  நாம் நாளும் சந்திக்கிற இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை நம்மை அறியாமலேயே நாம் சுரண்டுகிறமா?’ என அவர்களை அகத்தாய்வு செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தின.   

 
நன்றி: ஓவியர் ஜமால்
1965ஆம் ஆண்டிற்கு சற்று முன்னோ பின்னோ, ‘பிடிசோறு’ என்னும் ஜெயகாந்தனின் மூன்றாவது சிறுகதைத் தொகுதியில் உள்ள சிறுகதைப் படித்த அந்நாளைய ஆனந்த விகடனின் துணையாசிரியரான இதயம் பேசுகிறது மணியன் ஆனந்த விகடனில் தொடர்ந்து சிறுகதைகள் எழுத ஜெயகாந்தனை அழைத்தார்.    அவ்வழைப்பைத் தொடர்ந்து அவர் எழுதிய பல சிறுகதைகள் அவ்விதழில் முத்திரைக் கதைகளாக வெளிவந்தன.  மெல்ல மெல்ல, கொள்கை சார்ந்த சிற்றிதழ்களில் இருந்து வணிகம் சார்ந்த இதழ்களை நோக்கி அவரது படைப்புகள் நகர்ந்தன. அப்படைப்புகளில் விளிம்புநிலை மாந்தர்களுக்கு இடம் கிடைக்கவில்லை; அல்லது மிகக் குறைவாகவே இடம் கிடைத்தன. மாறாக, அந்த இதழ்களின் வாடிக்கையாளர்களாக இருந்த நடுத்தட்டு மக்கள், ஜெயகாந்தனது படைப்புலக மாந்தர்களாக மாறினர். அன்றாடம் காய்ச்சியாக இருந்து அன்றாடம் காய்ச்சிகளைப் பற்றி எழுதிய ஜெயகாந்தன், நடுத்தட்டு மாந்தராக மாறி நடுத்தட்டு மாந்தர்களைப் பற்றி எழுதத் தொடங்கினார்.  குமுகாயப் பொறுப்புடைய ஓர் எழுத்தாளர் தான் வாழும் குமுகாயத்தின் ஒரு கூறான நடுத்தட்டு மாந்தர்களின் வாழ்க்கையை, அவர்களின் அன்றாட வாழ்வுச் சிக்கல்களையும் அதன் காரணிகளையும் அச்சிக்கல்களை அவிழ்ப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து தானறிந்த முடிவுகளை தனது படைப்புகளின் வழியாக வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால், ஜெயகாந்தன் இக்காலகட்டப் படைப்புகளில் அந்தப் பணியை ஆற்றவில்லை; மாறாக நடுத்தட்டு மக்களின் தனிமனித வாழ்க்கைநெறிப் பிறழ்வுகளை, உள்ளப் பிறழ்வுகளை, பாலுறவுச் சிக்கல்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். இவற்றைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தபொழுது, “எனக்குத் தெரிந்த வாழ்க்கைகளை வைத்து மட்டுமே நான் எழுத முடியும். அந்த வாழ்க்கையின் மீது எனக்கிருக்கும் பிடிப்பு – பரிவின் காரணமாகவே நான் எழுதுகிறேன்’ என 1966ஆம் ஆண்டில் சுயதரிசனம் நூலின் முன்னுரையில் வாதிட்டார்.  ஆக 1965ஆம் ஆண்டிற்கு முன்னர் அவர் அறிந்திருந்த, பிடிப்பும் பரிவும் கொண்டிருந்த வாழ்க்கைகள் அதற்குப் பின்னர் அவர் அறியாத பிடிப்பும் பரிவும் கொள்ளாத, கொள்ள முடியாத வாழ்க்கைகளாக மாறிவிட்டன.

 
நன்றி: டெகல்கா இணைய இதழ்
அவரது இந்த நிலைமாற்றத்தால் அவருக்குள் ஏற்பட்ட குணமாற்றம் அவரது படைப்புகளின் வழியாக பொங்கித் வழியத் தொடங்கின. முன்னர் தான் நாளும் சந்தித்த மாந்தர்களை தனது படைப்புகளில் உலவவிட்ட ஜெயகாந்தன், இக்கால கட்டத்திலோ, தால்த்தாய் எழுதிய அன்னகரீனாவின் தாக்கத்தில் ‘பாரிஸூக்கு போ’ புதினத்தின் மாந்தர்களான சாரங்கன் – லலிதா – மகாலிங்கம் ஆகியோருக்கு இடையிலான உறவையும் இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசனின் கருத்துகளைகொண்டு சாரங்கன் என்னும் கதைமந்தனையும் துர்கனேவ் எழுதிய புதினம் ஒன்றின் கதைத்தலைவி எழுதும் கடிதத்தின் தாக்கத்தில் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ கதைத்தலைவி எழுதும் கடிதத்தையும் டென்னஸி வில்லியம்ஸின் தாக்கத்தில் ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’ என்னும் குறும்புதினத்தின் கட்டமைப்பையும் படைப்பவராக மாறிப்போனார்.  ஆனால், ‘அவற்றின் தாக்கத்தால்தான் இவற்றைப் படைத்தேன்’ என அவரே நேர்மையாக எடுத்துரைத்தார்; வேறு பல எழுத்தாளர்களைப் போல அவற்றை மறைக்கவோ, மறுக்கவோ இல்லை.  

 
இவ்வாறு, 1960ஆம் ஆண்டுகளிலிருந்து மெல்ல மெல்ல அவரது குரல் மாறத் தொடங்கியது. பதின்மூன்று வயதிலேயே பொதுவுடைமை குமுமியத்தில் தன் மாமாவோடு சேர்ந்து வாழக் கிடைத்த வாய்ப்பால் பொதுவுடைமையாளர்கள் பலரோடு பழகும் வாய்ப்பையும் அவர்கள் தமக்குள் நடத்திய அறிவாடல்களையும் கேட்கும் வாய்ப்பை ஜெயகாந்தன் பெற்றார்.  இந்திய விடுதலைவுணர்வு பெருநெருப்பாய் எங்கெங்கும் பரவியிருந்த வேளையில், ‘இந்திய தேசத்திலிருந்து தென்னிந்தியாவைப் பிரித்து, பிரிட்டிசாரின் நேரடிப் பார்வையில் திராவிட நாடாக அது இயங்க வேண்டும்; இல்லையென்றால் பார்ப்பனியம் ஆட்சியே ஏற்படும்’ என ஈ.வெ.இராமசாமி பெரியார் பேசிக்கொண்டு இருந்தார். மேலும், ‘இந்திய இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரமும் சைவத் தமிழ்க் காப்பியமான பெரியபுராணமும் மூடநம்பிகையை வளர்க்கவும் பாதுகாக்கவும் செய்கின்றன. எனவே அவற்றை எரிக்க வேண்டும்’ எனக் கூறி இயக்கம் நடத்திக்கொண்டு இருந்தார்.  அக்கருத்துகளை பரப்புரை செய்யும் படைப்புகள் பலவற்றை சுயமரியாதை இயக்க, திராவிடர் கழக எழுத்தாளர்களும் புலவர்களும் உருவாக்கினர்.  அப்படைப்புகளை தி. க. சிவசங்கரன் போன்ற பொதுவுடைமை இயக்கத் திறனாய்வாளர்கள் நச்சிலக்கியம் எனக்கூறி விமர்சித்தனர்.  ப. ஜீவானந்தம் போன்றவர்கள் கம்பராமயாணத்தில் பொதுவுடைமைக் கூறுகளைத் தேடியெடுத்து மேடைகளில் முழங்கத் தொடங்கினர். எஸ். இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கம்பனை மில்டனோடு ஒப்பிட்டு எழுதினர். ப. ஜீவானந்தம், தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் சுப்பிரமணிய பாரதியாரை உலக கவி எனவும் அவர் குறிப்பிடும் ஆரிய நாடே தாம் காண விரும்பும் பொதுவுடைமை உலகம் எனவும் பேசியும் எழுதியும் வந்தார்கள். தனது இளமைக் காலத்தில் இக்கருத்துச் சூழலில் வளர்ந்த, சிந்திக்கப் பழகிய ஜெயகாந்தனின் ஆழ்மனதில் திராவிட இயக்கம் ஒரு நச்சியக்கம் எனவும் திராவிட இயக்கப் படைப்புகள் நச்சுப்படைப்புகள் எனவும் திராவிட இயக்கக் கொள்கைகள் நச்சுக்கொள்கைகள் எனவும் பதிந்துவிட்டன.  எனவே,  அக்கால கட்டத்தில் வீறோடு இருந்த திராவிடக் கழகத்தின் கடவுள் மறுப்புக் கொள்கை அவருக்கு வறட்டு கொள்கையாகவும் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கை அவருக்கு இனவெறுப்புக் கொள்கையாகவும் விரைந்து வளர்ந்த அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழடையாள மீட்டுருவாக்கம் அவருக்கு பழமை போற்றலாகவும் தென்பட்டன.  அடுக்குத் தொடர்களாலான ஒப்பனை மிகுந்த அவர்களது மேடைப் பேச்சுகள் அவருக்கு எரிச்சல் மூட்டின. எனவே, அந்த இயக்கங்களின் எதிர்ப்பாளராக தன்னை அறிவித்துக் கொண்ட ஜெயகாந்தன், அவற்றின் கொள்கைகளை திறனாய்ந்து தனது மாற்றுக் கருத்துகளை எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்த(?) முயலவில்லை.  மாறாக,  அவர்களது விமர்சனத்திற்கு உள்ளான பார்ப்பனியத்தின் ஊதுகுழலாக மாறிப்போனார்.  வேதாந்த பார்ப்பனியத்தின் புதிய தூதராக தன்னைத் தானே நியமித்துக்கொண்டார்; வறட்டு வேதாந்தத்தை தனது படைப்புகளில் பரப்புரை செய்யத் தொடங்கினார்.   

இதன் விளைவாக, பொருளாதார (வர்க்க) வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் பொதுவுடைமை பேராளிகளின் காலடியில் வளர்ந்த ஜெயகாந்தன்  சாதிய (வர்ண) வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் திராவிட இயக்கப் போராளிகளை நச்சுகள் எனத் திட்டி, அவர்களது சிந்தனையை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு, ‘வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’  என மனம்பேதலித்தவரைப் போல பேசுகிற நிலைக்கு ஆளானார்.  

நன்றி அம்ருதா
திராவிட இயக்கத்தின் களப்பணிகளை அறிந்து, அவற்றின் விளைவுகளை ஆய்ந்து விமர்சனம் செய்வதற்கு மாறாக, திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளை ‘படித்த மேல்வர்க்கத்து முதலியார்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் நடந்த  சண்டை’ எனப் புறந் தள்ளினார்.  தனக்கென ஒரு சிறப்புப் பட்டம் சூட்டிக் கொள்வதற்கு தான் விரும்பினால் ‘ஜெயகாந்தன் பிள்ளை’ என வைத்துக்கொள்வேன் எனக் கூறினார்.  கல்பனா இதழுக்காக மு. கருணாநிதியைப் பேட்டி எடுத்தபொழுது, கருணாநிதி தம் தந்தை பெயரை முத்துவேலர் என சாதிய அடையாளமற்றுக் கூறியபொழுது, இடைமறித்து, ‘முத்துவேல் பிள்ளை’ எனக் கூறுங்கள் என்றார். பரந்துபட்ட உலகத்தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடிகொண்டிருக்கிறது என்பதனை எடுத்துரைக்கும் நோக்கத்தோடு தன்னால் படைக்கப்பட்டவன்தான் ‘ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன்’ புதினத்தின் கதைத்தலைவனான ஹென்றி எனவும்  போரில் வீடிழிந்து பிழைப்பிழந்து பர்மாவிலிருந்து ஓடி வந்த சபாபதி பிள்ளையாலும் அவர்தம் நண்பருக்கு மனைவியாலும் வழியில் கண்டெடுக்கப்பட்ட அக்குழந்தைக்கு, அவனால் தன் தகப்பன் என நினைக்கப்பட்ட சபாபதிப் பிள்ளை அவன் தகப்பன் இல்லை; தாய் என நினைக்கப்பட்டவள் அவன் தாய் அல்லள்; அவர்கள் இருவரும் கணவன், மனைவியும் அல்லர்; அவன் பெற்றோர் எந்த நாட்டவர் எந்த இனத்தவர் என்பது யாருக்கும் தெரியாது; அன்பும் அபிமானமும் ஒன்றுபட்ட சூழ்நிலையில் வாழ்ந்த, அந்நியத்தன்மை அற்ற ஞாலமாந்தன் (யுனிவர்சல் மேன்) எனவும் கூறிவிட்டு, அவனை ‘ஹென்றி பிள்ளை’  என மாற்றினார்.  ஆக ஜெயகாந்தன் விரும்பிய உலகத்தில் வாழும் வாய்ப்புபெறும் எவரும், அவர் ஞாலமாந்தரே ஆனாலும், சாதியற்று இருக்க முடியாது என்றார். அவ்வாறு அவர் கூறியதற்கு, அவரிடமிருந்த திராவிட இயக்க ஒவ்வாமையைத் தாண்டி, மாந்தர்களை நான்கு வர்ணங்களாகப் பிரிக்கிற, வர்ணங்களுக்கு அப்பால் வாழ்பவர்களை மாந்தர்களாகக் கூடக் கருதாத ‘இந்து இசம்’ அவரது பார்வையில் “ஒரு மதமன்று; ஒரு பண்பாடு; ஒரு வாழ்க்கை முறை” என இருந்ததும் காரணமாக இருக்கலாம்.  எனவேதான், அரசியல் செல்வாக்கோடு இருந்த இந்து மடத் தலைவர் ஒருவரை, ஒரு கொலை வழக்கில் உசாவலுக்காக காவல் துறையினர் கைது செய்தபொழுது வெகுநாளாக திறக்காதிருந்த தனது பேனாவைத் திறந்து குறும்புதினம் (?) ஒன்றை எழுதி, ‘ஒரு நம்பிக்கை – ஒரு ஆழமான நம்பிக்கை – வீழ்த்தப்படும்போது தன்னால் சந்தோஷப்பட முடியாது’ என்றார்.  இங்ஙனம் சாதி, மத வளையத்திற்குள் ஜெயகாந்தன் மீண்டும் மீண்டும் சென்று நின்றதற்கு அவருடைய திராவிட இயக்க ஒவ்வாமை நோய் மட்டும்தான் காரணமா அல்லது அவரின் ஆழ்மனத்திற்குள் கெல்லியெடுக்கப்படாமல் புதைந்துகிடந்த இடைநிலைச் சாதியச் சிந்தனையின் எச்சமும் காரணமா என்பதை உளப்பகுப்பாய்வு செய்து அறிய வேண்டும்.  ஒருவேளை அவ்வாய்வின் முடிவு, இன்றைய நிலையில் மேலெழுந்து வருகிற சாதி சார்ந்த கூக்குரல்களில் இன்றைய எழுத்தாளர்களின், சிந்தனையாளர்களின் வகிபாகத்தை அளவிட்டு அறிய உதவக்கூடும்.

நிறைவாக, ஜெயகாந்தனின் மறைவையொட்டி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் பொருட்டு, அவரது படைப்புகளின் வழியே அவரது சிந்தனைப்போக்கை நோக்குகையில்,  இந்திய விடுதலைக்கும் பொருளாதாரச் சமத்துவதற்கும் சலியாது போரிட்ட அந்நாளைய பொதுவுடைமைப் போராளிகளின் கண்பார்வையில் வளர்ந்து தான் பெற்ற ஞானத்தோண்டியை, திராவிட இயக்க ஒவ்வாமை நோய்க்கு ஆட்பட்டு தன் வாழ்நாள் முழுக்க கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்த நந்தவனத்து ஆண்டியாகவே அவர் தோற்றம் தருகிறார்.

 (அம்ருதா இதழில் - மே 2015 - வெளிவந்த கட்டுரை)

கொண்டாடிக் கொல்லாதீர்!







பன்னாட்டு மகளிர் நாள் சமையல் போட்டி அறிவிப்பு :-(
பன்னாட்டு நிறுமமாக மாறத் துடிக்கும் உள்நாட்டு நிறுமம் ஒன்றின் வரவேற்பு அரங்கு.  வெவ்வேறு நோக்கத்திற்காக அந்நிறுமத்திற்கு வந்திருந்த பலர் அவ்வரங்கில் காத்திருந்தார்கள். காத்திருத்தலின் சலிப்பை மழுங்கச் செய்யும் நோக்கில் அரங்கச் சுவரில் பொருத்தப்பட்டு இருந்த தொலைக்காட்சியில், திரைப்படப் பாடற் காட்சியொன்று ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. காத்திருந்தோரில் பலர் அக்காட்சியில் மூழ்கிப்போய் இருந்தார்கள். அதிக நேரம் மூழ்கிக் கிடந்த சிலர், திடீரென மயக்கம் தெளிந்து தம் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து, ‘உச்’சுக் கொட்டிவிட்டு மீண்டும் பாடற்காட்சியில் மூழ்கிப் போனார்கள்.  அந்நிறுமத்தில் பணியாற்றும் நண்பரைச் சந்திக்கச் சென்ற நான் அவர்களில் ஒருவனாக அங்கு  அமர்ந்தேன். சிறிது நேரத்தில், அந்நிறும விளிம்புநிலைப் பணியாளர் ஒருவர் சாக்லெட்டு கட்டிகள் நிறைந்த பெரிய தட்டொன்றை எடுத்துக்கொண்டு அந்த அரங்கிற்குள் நுழைந்தார். அங்கிருந்த அனைவருக்கும் ஆளுக்கொரு சாக்லெட்டு கட்டியை வழங்கத் தொடங்கினார். பல முறை அந்நிறுமனத்திற்குச் சென்றிருக்கும் எனக்கு அச்செயல் புதியதாக இருந்தது.  எனவே என்னிடம் அவர் தட்டை நீட்டியதும், ‘என்ன செய்தி சாக்லெட்டு கொடுக்கிறீர்கள்?’ என வினவினேன். “தெரியவில்லை. எல்லாருக்கும் கொடுக்குமாறு அலுவலகத்தில் சொன்னார்கள்” என்றார் அவர். இதனைக் கவனித்த வரவேற்புப் பணியாளர், “இன்றைக்கு மார்ச் 8. மகளிர் நாள். அதனைக் கொண்டாடத்தான் சாக்லெட்டு” என்றார் புன்னகையோடு.  அப்பொழுது என் நண்பர் அங்கு வந்துவிட இருவரும் அருகில் இருந்த கலந்துரையாடல் அறைக்குள் நுழைந்தோம். அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்பொழுதும் அந்நிறுமத்தின் மகளிர் நாள் கொண்டாட்டும் நினைவில் ஊடாடிக்கொண்டே இருந்தது. பேச வேண்டியவைகளைப் பேசி முடித்த பின்னர் எங்களது உரையாடல் மகளிர் நாள் கொண்டாட்டத்தை நோக்கித் திரும்பியது.

“ஒவ்வோராண்டும் இங்கே மகளிர் நாள் கொண்டாடுவார்களா?”

“இல்லை. மனித வளத் துறைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் புதிதாக ஒருவர் தலைமைப் பொறுப்பு ஏற்றார். அவர் வேலை இது!”

“பெண்ணுரிமையில் அக்கறை உள்ளவரோ?”
“அப்படியெல்லாம் இல்லை. தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள இப்படி ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டு இருப்பார். ‘நமது நிறுவனத்தில் பெண்கள்’ என்னும் தலைப்பில் கவிதைப் போட்டியையும் கட்டுரைப் போட்டியையும் இன்றைக்கு அறிவித்திருக்கிறார். அப்போட்டிக்கான முதற்கட்டளையே இங்குள்ள பெண்பணியாளருக்கு சிக்கல் ஏதேனும் இருந்தால் அதனைப் பற்றி எழுதக் கூடாது என்பதுதான். அவர் வந்த பின்னர், நிரந்தரப் பணியில் பெண்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை. மாறாக நிரந்தரப் பணியாளர்கள் சிலர் விலக்கிச் சென்ற இடங்களுக்கு குறைந்த ஊதியத்தில் பெண்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்கிறார்கள். பலர் நிறுமப் பொது விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் வந்து வேலை செய்கிறார்கள். அந்த வேலைக்கு அதிக நேர வேலை ஊதியம் எதுவும் கிடையாது. ஆனால் இனிப்புக் கொடுத்து மகளிர் நாள் மட்டும் கொண்டாடுகிறார்.”

நண்பரின் கூற்றில் வெளிப்பட்ட கசப்பும் உண்மையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில்  ஏக்தா என்னும் மகளிர் வள நடுவம் ஏற்பாடு செய்திருந்த மகளிர் நாள் கருத்தரங்கில், ‘நாம் மகளிர் நாளைக் கொண்டாட வேண்டுமா? கடைப்பிடிக்க வேண்டுமா?” எனக் குமுகாயச் செயற்பாட்டாளர் லூசி சேவியர் எழுப்பிய வினாவையும் அதனையொட்டி நிகழ்ந்த கலந்துரையாடலையும் எனது நினைவிற்குக் கொண்டு வந்தன.


உழைக்கும் பெண்களின் உரிமைப் போர்
தொழிலகத்தில் தங்களது வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும், போதிய ஊதியம் வழங்க வேண்டும்; தமக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும் என்னும் முப்பெரும் கோரிக்கையோடு 15000 ஆயத்த ஆடை உருவாக்கத் தொழிலாளர்களான பெண்கள் 1908 ஆம் ஆண்டு மார்ச்சு 8ஆம் நாள் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத் தெருக்களில் வீரநடை இட்டதை நினைவுகூரும் வகையில் 1909 ஆம் ஆண்டின் பிப்ரவரித் திங்கள் இறுதி ஞாயிற்றுக் கிழமையான  28ஆம் நாள் தேசிய மகளிர் நாளாக அமெரிக்க சோசலிச கட்சியினர் கடைபிடித்ததில் தொடங்கிய மகளிர் நாளானது, ‘குறைந்த ஊதியத்தில் நிறைய உழைக்கும் அதிகப் பெண்களைப் பணியில் அமர்த்திச் சுரண்டுவோம்’ என்னும் அறிவிக்கப்படாத முழக்கத்தோடு இயங்கும் நிறுவனங்களின் கொண்டாட்ட நாள்களில் ஒன்றாக மாறிப்போனது ஏன்?  தேசிய நாள்களுக்கும் மதப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்து விழாக் கொண்டாடும் இந்நிறுவனங்கள் தொழிலாளர் நாளான மே முதல் நாளில் தொழிலாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதோ, அந்நாளில் விழாக் கொண்டாடுவதோ இல்லை; மாறாக தொழிலாளர் நாளிற்குரிய அதே வேரில் முளைத்த மகளிர் நாளை தமது கொண்டாட்ட நாளாக மாற்றிக் கொண்டது எவ்வாறு?


1995ஆம் ஆண்டில் பீசிங்கு நகரில் நடைபெற்ற
உலகப் பெண்கள் மாநாடு - 4
1995ஆம் ஆண்டு சீனா நாட்டின் தலைநகரான பீசிங்கு நகரில் நான்காவது உலகப் பெண்கள் மாநாடு நடைபெற்றது.  1980ஆம் ஆண்டிற்கு பிந்திய ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பெருமளவில் உருவான அல்லரசு அமைப்புகளைச் (Non-Government Organizations) சார்ந்த குமுகாயச் செயற்பாட்டாளர்களும் குமுகாயப் பணியாளர்களும் பெருமளவில் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். அவர்கள் அங்கு ‘உலகளாவிச் சிந்தித்து’ (Think Globally) தாம் கண்டு, கேட்டு அறிந்தவைகளை ‘உள்ளூர் அளவில் செயற்படுத்தும்’ (Act Locally) நோக்கில் 1996ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் பெருமளவில், மகளிர் நாளைக் கடைபிடிக்கத் தொடங்கினர்.  பெண்விடுதலையில் உண்மையான நம்பிக்கையும் அக்கறையும் உடைய அல்லரசு அமைப்புகள் சில குமுகாயத்தின் பல்வேறு வாழ்க்கைச் சூழலில் உள்ளவர்களை அழைத்து மகளிர் நாளில் பெண்விடுதலைக் கருத்தரங்குகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்தினர். அவை, கடந்த காலத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களையும் அவற்றின் விளைவுகளையும் நினைவுகூர்ந்து, பெண்களின் கண்டறியப்படாத ஆற்றல்களைக் கண்டறியும் முயற்சியை தற்காலத்தில் மேற்கொள்ளத் தேவையான திட்டங்களை வகுத்து, எதிர்காலத்தில் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய வாய்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய வெல்விளிகளையும் அடையாளம் காணும் முயற்சிகளாக இருந்தன.
கவனிப்போம் - கற்போம் - முன்னெடுப்போம்
இதே காலகட்டத்தில் உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம் என்னும் பொருளாதாரச் சீர்குலைவு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளத் தொடங்கியது.   ஊரகம் மெலிந்து நகரம் வீங்கத் தொடங்கியது. இவற்றின் விளைவாக மேற்கத்திய, அமெரிக்க நாடுகளிற் பின்பற்றப்படும் அன்னையர் நாள், தந்தையர் நாள், நண்பர்கள் நாள் போன்ற உள்ளீடற்ற கொண்டாட்ட நாள்கள் புதிதாக நகரத்தில் குடியேறிய ஊரக இளைஞர்களுக்கு அறிமுகம் ஆகின. அவர்கள் தம் உண்மை முகமான ஊரக முகத்தை மறைத்து, நகர் முகத்தை அணிந்துகொள்ள இந்த  உள்ளீடற்ற நாள்களைக் கொண்டாடத் தொடங்கினார்கள். ஐந்தாண்டுகளுக்கும் உட்பட்ட காலத்திற்குள் இக்கொண்டாட்ட அலை இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களை வந்தடைந்தது.  அந்த அலையின் சூழலுக்குள் மகளிர் நாள் மாட்டிக் கொண்டது. 
 
மகளிர் நாள் சமையல் - கோலம் - மருதாணி இடும் போட்டிகள்
இதன் விளைவாக போதிய ஓய்வு, நிகர் ஊதியம், வாக்குரிமை, கல்வி, வேலைவாய்ப்புரிமை, சொத்துரிமை, முடிவெடுக்கும் அதிகாரம் என முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த மகளிர் நாள் நிகழ்வுகள் வணிக நிறுவங்கள் நடத்தும் கோலப் போட்டி, அழகுப் போட்டி, சமையல் போட்டி என சுருங்கத் தொடங்கின. குமூக -பண்பாட்டு – அரசியல் சிந்தனையற்றுப் பிறந்த அல்லரசு அமைப்புகள் பல தம் பணிக்களத்தில் உள்ள பெண்களைத் திரட்டி சீருடை அணியச் செய்து ஊர்வலம் நடத்தி தம் வலிமையைக் காட்டி தம்மை விளம்பரப்படுத்திக்கொள்ளும் நிகழ்வாக மகளிர் நாளை மாற்றிவிட்டன. இந்நாளின் வரலாறும் இதனைக் கைபிடிக்க வேண்டிய இன்றைய தேவையைப் பற்றிய புரிதலும் பெரும்பாலானோரின் நினைவில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன.

வீரியம்மிக்க ஏதேனும் ஒன்றை நீர்த்துப் போகச் செய்வதற்குரிய எளிய வழி அதனைக் கொண்டாட்டமாக மாற்றுவது ஆகும். கூட்டமாகச் சேர்ந்து ஒன்றைக் கொண்டாடும்பொழுது ஏற்படும் கிளர்ச்சியிலும் மயக்கத்திலும் அக்கொண்டாட்டத்தின் காரணி யாருடைய கவனத்தையும் அவ்வளவு எளிதாக ஈர்ப்பதில்லை. இவ்வகையில்தான் மகளிர் நாள் கொண்டாட்டமாக மாற்றப்பட்டு ஆண்டுக்கொரு முறை நிகழ்த்தப்படும் சடங்காக சுருங்கி நீர்க்கத் தொடங்கி இருக்கிறது. 



அதனால் மார்ச்சு 7ஆம் முதலே கைபேசிகளில் குறுஞ்செய்திகளாகவும் குமூக வலையங்களில் (Social Networks) நிலைத்தகவல்களாகவும் மகளிர் நாள் வாழ்த்துகள் குவிகின்றன. பணியிடத்தில் போலிப் புன்னகையோடு இனிப்புகளைப் பரிமாறிக்கொள்ளும் சடங்குகள் நிகழ்கின்றன.  ‘ஆண்களுக்கு இப்படியொரு நாள் இல்லையா?’ என்னும் புலம்பல்கள் ஆண் பணியாளர்களிடம் எழுகின்றன.  காட்சி ஊடகங்கள் தம் பெண்பார்வையாளர்களை ஏதேனும் ஒரு நகரத்தின் திருமண மண்டபத்தில் திரளச் செய்து வெற்று ஆரவாரங்களில் அவர்களை ஈடுபடுத்தி ஒளிபரப்புகின்றன. சிற்றூர்கள் சிலவற்றில் மாலை நேரத்தில் உள்ளூர் பேச்சுவணிகர்களைக் கொண்டு, ‘குடும்பப் பாரத்தைப் பெரிதும் சுமப்பது தாயா? தாரமா?’ என பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. இப்படி எங்கெங்கும் மகளிர் நாள் கொண்டாடிக் கொண்டாடிக் கொல்லப்படுகிறது.


எனவே, குமூகப் பாதுகாப்பு எதுவுமற்று உடலில் உயிர் ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை உழைத்துக் கொண்டிருக்கும் ஒருங்கிணைப்படாத பெண் தொழிலாளர்களின் துயரப் பெருமூச்சும் பயின்று பல்கலைக் கழகப் பட்டம் பெற்று தேவைக்கு அதிகமாகப் பொருளீட்டிய போதிலும் முடிவெடுக்கும் அதிகாரமும் தம் சொத்தின் மீது ஆளுகை செலுத்த அனுமதிக்கப்படாத கற்ற பெண்களின் மனக்கண்ணீரும் கட்டாயக் காதலுக்கு இணங்க மறுத்ததால் அமிலம் ஊற்றிச் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலும் வீட்டிலும் வெளியிலும் பணியிடத்திலும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களின் மனக்குமுறலும் சாதியை மீறியோ மறுத்தோ மணந்ததால் காதலனைச் சாகக்கொடுத்த இளம்பெண்களின் மரண ஓலமும் இக்கொண்டாட்டங்களின் இரைச்சலில் யாருடைய காதிலும் விழாமல் கரைந்து போகின்றன.


எனினும் கற்குன்றின் புடவிற்குள் கசிந்துகொண்டிருக்கும் சுனையைப் போல பெண்விடுதலையில் உண்மையான அக்கறையுடைய சில அமைப்புகள் தற்பொழுதும் மகளிர் நாளை பொருள் பொதிந்த நாளாக கைபிடிக்கின்றன. அவை அந்நாளில் பெண்ணுரிமைப் போராட்டத்தின் கடந்த காலத்தை ஆராய்ந்து, நிகழ் காலத்தை மதிப்பிட்டு, எதிர் காலத்தின் திசைவழியை உருவாக்க முயல்கின்றன; உழைக்கும் பெண்களை ஒருங்கிணைத்து அரசியற் கல்வி வழங்குகின்றன; பெண்ணடிமைத்தனத்தால் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அல்லற்பட வேண்டியிருக்கிறது என்பதனை ஆண்களுக்கு எடுத்துரைக்கின்றன.  ஆணும் பெண்ணும் அனைத்து அடிமைத்தளைகளில் இருந்தும் விடுதலைபெற்ற மாந்தர்களாக வாழத்தக்க உலகத்தை இருபாலினரும் இணைந்து உருவாக்க வேண்டும் என விழைகின்றன. இத்தகு அமைப்புகளும் முயற்சிகளும் பெருக வேண்டும்; களியாட்ட நாளாக சிதைய இருந்த ‘காதலர் நாளை’ சில அமைப்புகள் ‘சாதியொழிப்பு நாளாக’ மீட்டெடுக்க முனைவதைப் போல, ‘கொண்டாடிக் கொல்லப்படும்’ மகளிர் நாளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒத்த சிந்தனையும் உண்மையான அக்கறையும் உடையோர் இணைய வேண்டும். அந்த இணைப்பின் தொடக்கப் புள்ளியாக இந்த மகளிர் நாள் அமைய வேண்டும் என்பதே எம் அவா!


அம்ருதா - மார்ச்சு 2015 இதழில் வெளிவந்த கட்டுரை



மெய்மையும் கருத்தும்


“மெய்மை” (Fact) “கருத்து” (Opinion) என்னும் இரு சொல்களுக்கு இடையில் நுட்பமான, தெளிவான வேறுபாடு இருக்கிறது. மெய்மை என்பது ஒன்றின் இருப்பை / மாறாத உண்மையைச் சுட்டுகிறது. கருத்து ஒன்றைப் பற்றி ஒருவர் தனது பட்டறிவு, பகுத்தறிவு, கற்ற அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அவரது மனதில் உருவான அல்லது அவர் தன் மனதில் உருவாக்கிக்கொண்ட சிந்தனையைச் சுட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ‘ஞாயிறு ஒரு நெருப்புக்கோளம்’ என்பது மெய்மை; இது காலம், இடம், ஆள் ஆகியவற்றிற்கு ஏற்ப மாறுவதில்லை. ‘நேற்றைவிட இன்றைக்கு வெயில் அதிகமாக இருக்கிறது’ என்பது கருத்து; இது காலம், இடம், ஆள் ஆகியவற்றிற்கு ஏற்ப மாறக் கூடியது.  எனவே இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் தானறிந்த மெய்மையையும் தனது கருத்தையும் எடுத்துரைக்கின்றனர். அவற்றை அவ்வாறு எடுத்துரைக்கும் உரிமையையே கருத்துரிமை என்கிறோம்.  ஒருவர் தன்னுடைய நோக்கில் கூறும் கருத்தை, மற்றொருவர் வேறொரு நோக்கில் காணும்பொழுது அக்கருத்துகளுக்கு இடையே முரண்பாடுகள் எழுகின்றன. இதனையே கருத்து வேறுபாடு என்கிறோம்.  இவ்வாறு கருத்து வேறுபாட்டினை உடைய இருவரும் மெய்மையை அறியும் நோக்கத்தோடு தத்தம் கருத்துகளை விரித்துரைக்கும் பொழுது அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது. அதனால் மாந்தரினம் பெரும்பயனை அடைகிறது.

அதனால்தான், “எனது கருத்தை எடுத்துரைக்க எனக்கு உரிமை இருக்கிறது; அதேவேளையில் அக்கருத்தை மறுத்துரைக்க உனக்கு உரிமை இருக்கிறது. எனவே எனது கருத்தை எடுத்துரைக்கும் எனது உரிமைக்கும் அக்கருத்தை மறுத்துரைக்கும் உனது உரிமைக்கும் ஊறு எழுகிறபொழுது நம் இருவரின் கருத்துரிமைக்காவும் நாம் போராட வேண்டியது நம்மிருவரின் கடமையாகும்” என கருத்துரிமையில் நம்பிக்கை உடையவர்கள் கருதுகிறார்கள். மாற்றுக் கருத்தை, மறுப்புரைகளை எடுத்துரைக்க அவர்களை அனுமதித்து அதன் பின்னர் தன்னுடைய கருத்தை அவர்களுக்குப் புரியுமாறு விளக்கி உரைக்கவோ, தன்னுடைய கருத்து தவறெனத் தெரிந்தால் அதனை மாற்றிக்கொள்ளவோ உடன்படுகிறவரே நாகரிகமானவர் என நம்புப்படுகிறார்.  இதற்கு எடுத்துக்காட்டாக ஈ.வெ.இராமசாமி பெரியார் பேசிய கூட்டமொன்றில், அவரின் கருத்துகளை மறுத்து வினாவெழுப்பியவரது எழுதுகோலின் முனை முறிந்தபொழுது ஈ.வெ.இரா. தனது பேனாவை அவரிடம் கொடுத்து மறுப்புக் கருத்துகளை எழுதும்படி கூறிய நிகழ்வு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.

ஆனால் நடைமுறையில், பலரும் மெய்மையையும் கருத்தையும் பிரித்துப் பார்ப்பதில்லை.  இரண்டும் ஒன்றென மயங்கி, ஒருவர் கூறுகிற காலத்தால் மாறுபடக் கூடிய கருத்தை என்றென்றும் மாறாத மெய்மையென நம்புகின்றனர். அப்பொழுது அவர்கள், ஒருவர் கூறிய கருத்தை விட்டுவிட்டு அக்கருத்தைக் கூறியவரை தாக்கத் தொடங்குகின்றனர். அதிலும் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் அல்லது நிலைநிறுத்தப்பட விழையும் ஆதிக்கத்திற்கு எதிரானதாக எடுத்துரைக்கப்படும் மெய்மையும் கருத்தும் இருக்கும்பொழுது அதனை எடுத்துரைப்பவர் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகின்றார்.

கலீலியோ கலிலி

இந்நிலை நெடுங்காலமாகவே உலகெங்கும் நிலவி வருகிறது. வேதியம் கோலோச்சிய நாளில் அதன் கருத்துகளை மறுத்துரைத்து அவற்றிற்கு மாறான புதிய கருத்துகளை எடுத்துரைத்தற்காக புத்தர் இன்னலுக்கு உள்ளனார்.  சாக்ரடீசு நஞ்சருந்திச் சாகுமாறு பணிக்கப்பட்டார்.  அண்டத்தின் நடுவில் அசையாது நிற்கும் புவியை ஞாயிறும் பிற கோள்களும் சுற்றிவருகின்றன என்னும் கருத்து நிலவிய காலத்தில் கலீலியோ கலிலி அதனை ஆராய்ந்து, தான் பெற்ற அறிவின் துணையோடு மறுத்தார். அண்டத்தின் நடுவில் இருக்கும் ஞாயிறை புவியும் பிற கோள்களும் சுற்றிவருகின்றன என்னும் மெய்மையை எடுத்துரைத்தார். அந்த மெய்மை அன்றைய கிறித்துவ மத ஆதிக்கத்திற்கு எதிராக இருந்ததனால் இடையறாத இன்னலுக்கு ஆளானார். சைவ மதக் கருத்துகளை மறுத்துரைத்ததனால் அனல்வாதம், புனல்வாதம் எனப்பெயரிட்டு சமண  இலக்கியங்கள் பல அழிக்கப்பட்டன. எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப்பட்டார்கள். இருப்பினும் காலந்தோறும் புதிய கருத்துகள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. அதனை எடுத்துரைப்போர் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளாகிக்கொண்டே இருக்கிறார்கள்.  பலவேளைகளில் இந்த தூற்றுதல் அச்சுறுத்தலாகவும் அழித்தொழிப்பு ஆணைகளாகவும் மாறிவிடுகின்றன. இவ்வரிசையில்தான் அண்மையில் ஃபிரான்சு நாட்டின் சார்லியும் தமிழ்நாட்டின் பெருமாள் முருகனும் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

முற்றாதிக்கம் நிலவும் நாடுகளில் மட்டுமே கருத்துரிமை நெரிக்கப்படுகிறது; மாறாக, மக்கள்நாயகம் நிலவும் நாடுகளில் கருத்துரிமை காக்கப்படுகிறது என்னும் படிமம் பொதுவாக உலகெங்கும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் எல்லா நாடுகளிலும் அந்தந்த நாட்டின் ஆதிக்கத்திற்கு எதிராகக் கருத்துரைப்போரின் குரல்வளைகள் நெரிப்பட்டன; நெரிக்கப்படுகின்றன; நெரிக்கப்பட உள்ளன.  அவ்வகையில்தான் மக்கள்நாயகம் நிலவும் மதச்சார்பற்ற இந்தியக் குடியரசில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் குரல்வளை நெரிக்கப்பட்டு இருக்கிறது.


தொ.மு.சி.ரகுநாதன்


இவருக்கு முன்னால், மோ.க.காந்தியின் இல்லற பிரமச்சரியம் என்னும் கருத்தை “முதலிரவு” என்னும் தன்னுடைய புதினத்தின் வழியாக மறுத்த தொ.மு.சி.ரகுநாதனின் குரல்வளை அந்நூலிற்கு தடைவிதித்ததின் வழியாக நெரிக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப் பின்னர் அவருடைய படைப்புகளை நாட்டுடைமை ஆக்கிய தமிழ்நாட்டரசு அந்நூலிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதா எனத் தெரியவில்லை.  பெரியார் ஈ.வெ.இராமசாமியின் சிந்தனைகள் சிலவற்றின் தொகுப்பான ‘பொன்மொழிகள்’, கா.ந.அண்ணாதுரையின் ‘ஆரியமாயை’, புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்’ ஆகிய நூல்களை தடைசெய்ததன் வாயிலாக அந்நூலாசிரியர்களின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. 

பாரதிதாசனின் ‘தமிழியக்கம்’ என்னும் நூலில் உள்ள சில வரிகள் சிலருக்கு உவப்பாக இல்லை என்பதால் 1984ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து அந்நூல் நீக்கப்பட்டும் (இதற்குப் பெயர்தான் நகைமுரணோ!), இன்குலாப்பின் கவிதையொன்று இராசராசன் பற்றிய பெருங்கதைகளைச் சுட்டது எனபதற்காகவும் புதுமைப்பித்தனின் இரண்டு கதைகளின் வரிகள் சிலவற்றைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு சிலர் குரல்கொடுத்தார்கள் என்பதற்காகவும் அவை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு அவர்தம் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. நாட்டார் வழக்காற்றில் உள்ள பாலுணர்வுக் கதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘வயதுவந்தோர்க்கு மட்டும்’ என்னும் பெயரில் நூலாக வெளியிட்டதற்காக இராசநாராயணனின் குரல்வளை நெரிபட இருந்தது. நகைச்சுவை துணுக்கு ஒன்றை வெளியிட்டதற்காக ஆனந்த விகடன் இதழின் அப்பொழுதைய ஆசிரியர் சீ. பாலசுப்பிரமணியன் சட்டப்பேரவைத் தலைவரின் ‘வானளாவிய’ அதிகாரத்தால் சிறை வைக்கப்பட்டார். செல்வம், சுனில் என்னும் இரு இதழாளர்களை சட்டப்பேரவைக் கூண்டிலெற்றிக் கண்டிக்க ஆணையிடப்பட்டது.  இவையெல்லாம் வெளிப்படையாக, பலரும் அறிய நிகழ்ந்தவை.  இவற்றைவிட பன்மடங்கு அளவில் வெளியே தெரியாமல் மாற்றுக் கருத்தைக் கூறியதற்காக எழுத்தாளர்களும் இதழாளர்களும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்; ஆளாகிக்கொண்டு இருக்கிறார்கள்.


மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளரின் அலுவலகத்தில் இருந்து "அமைதிப் பேச்சுவார்த்தைக்கு" பின்னர் வெளியே வரும்
பெருமாள் முருகன் 
இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளரின் அலுவலகத்திற்குச் சென்று ‘அமைதி’ கூட்டத்தில் உருவாக்கப்பட்ட அறிக்கையில் கையொப்பம் இட்டுவிட்டுத் திரும்பிய பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளன் தன்னுடைய மரணத்தை பெ.முருகன் என்னும் தன்னுடைய இயற்பெயரால் தானே அறிவிக்கும் அவலம் நிகழ்ந்திருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சட்டக்கூறு19 (1) (அ)  இந்தியர்  ஒவ்வொருவருக்கும் தம் கருத்தை எடுத்துரைக்க உரிமை அளித்திருக்கிறது.  இதில் உள்ள ‘கருத்து’ என்னும் சொல் தன்னுடைய கருத்தை எடுத்துரைப்பதற்கு மட்டுமன்று, மற்றவரின் கருத்தை மறுத்துரைப்பதற்கும் உரிமை அளிக்கிறது. மாறாக ஒருவர் மற்றொருவரை கருத்துரைக்கக் கூடாது என தடைசெய்யவோ, கருத்துரைப்பவரின் உள்ளத்திற்கும் உடலுக்கும் உரிமைக்கும் உயிருக்கும் உறவிற்கும் ஊறுவிளைவிக்க உரிமை வழங்கவில்லை.   ஆனால் ‘இந்துத்துவத்’தை இந்நாட்டில் நிலைநிறுத்தத் துடிக்கும் ‘தேசியத் தன்னார்வலர்கள்’ (இராசுடிரிய சுயம்சேவக்குகள்) என்னும் மத அமைப்பினரும் திருச்செங்கோட்டுப்பகுதியில் உள்ள 44 சாதிய அமைப்புகளும் இணைந்து  பெருமாள் முருகன் படைத்த மாதொருபாகன் புதினத்தை எரிக்கிறார்கள்; அவரது படத்தை செருப்பால் அடிக்கிறார்கள்; மாதொருபாகன், ஆளண்டாபச்சி,அர்த்தநாரி, ஆலவாயன் ஆகிய புதினங்களைத் தடை செய்யவும் அவரை, இந்திய குற்றவியல் சட்டத்தின் சட்டக்கூறு 509கீழ் கைது செய்யவும் வேண்டும் என்கிறார்கள்; சிலராவது உணர்ச்சிவசப்படத்தான் செய்வார்கள்; ஏன் அவர்கள் வன்முறையை கையில் எடுத்தாலும் எடுக்கலாம் எனக்கூறிவிட்டு அதே பதிவின் இறுதியில் அவரது ஒளிப்படத்தை, கைபேசி எண்ணை, வீட்டு முகவரியை, அவர்தம் மனைவி, குழந்தைகள் பெயரை வெளியிட்டு மிரட்டி இருக்கிறார்கள்.  இவை யாவும் பெருமாள் முருகன் தனது படைப்பில் கூறப்பட்டுள்ள செய்திக்கு நாட்டுப்புறவியல், பண்பாட்டு மானிடவியல் சான்றுகள் உள்ளன; அவற்றை ஆ.சிவசுப்பிரமணியன், தியடோர் பாசுகரன், அ.கா.பெருமாள் ஆகிய ஆய்வறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனச் சுட்டிக்காட்டி, மாற்றுக் கருத்துரையவர்கள் தகவுடைய அறிஞர்களோடு வந்தால் அவர்களோடு கலந்துரையாடவும் தான் அணியமாக இருப்பதாகத் தெரிவித்து, திருச்செங்கோட்டு மக்களின் மனதை நோகடிக்கும் பகுதிகளை அடுத்த பதிப்பில் மாற்றிவிடுகிறேன் என அறிவித்த பின்னரும் நிகழ்ந்திருக்கின்றன. காவல் துறையினர் பெருமாள் முருகனுக்கு பாதுகாப்புக் கொடுக்க முடியாது என கைவிரித்திருக்கின்றனர். அதனால் அவர் அவ்வூரைவிட்டே வெளியேறி இருக்கிறார். மீண்டும் அமைதிக் கூட்டம் என மாவட்ட நிருவாகத்தால் அழைக்கப்பட்ட அவர் தன்னுடைய கருத்தைக் கூறக்கூட அனுமதிக்கப்படாமல் தனியறையில் அமர வைக்கப்பட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்.   இது முறையன்று எனக் கூறிய அவர்தம் வழக்கறிஞரிடம், “நீங்கள் கூறிவிட்டு போய்விடுவீர்கள்; இவர் இந்த ஊரில் வாழ வேண்டும் அல்லவா?” என அமைதிக் கூட்டத்திற்கு பொறுப்பாளராக இருந்த அலுவலர் கூறியிருக்கிறார். அக்கூற்றின் பொருளை ஏதாவது ஓர் அறிஞர் உரை எழுதிய பின்னர்தான் இத்தமிழ் குமுகாயம் புரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

திராவிட வேரும் இடதுசாரி மனச்சாய்யும் உடைய, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துகளை தன்னுடைய படைப்புகளில் ஊடும் பாவுமாக வெளிப்படுத்துகிற, சாதி மறுப்பை தன் சொந்த வாழ்வில் நிகழ்த்திக் காட்டிய, சாதியக் கட்டுமானத்தை மீறியதால் சாவிற்கு உள்ளான ஒருவருக்கு தன்னுடைய நூலொன்றை படையலாக வைத்த, விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்க விழையும் நேர்மையான அரசு அலுவலர் ஒருவரைப் பற்றி நூலெழுதிய பெருமாள் முருகன் என்னும் எழுத்தாளனை மிரட்டி, இன்னலுக்கு உள்ளாக்கி முடக்குவதன் வழியாக சாதி மறுப்பில் ஆர்வம் செலுத்துகிற இளைய தலைமுறையினருக்கு ‘நாங்கள் கிழிக்கும் கோட்டைத் தாண்டினால் உங்களுக்கும் இதே கதிதான்” என மறைமுகமாக அச்சுறுத்தி சாதியக் கட்டுமானத்தை காக்க முனைவதே மாதொருபாகனை எதிர்க்கும் சாதிய அமைப்பினரின் நோக்கமாக இருக்க வேண்டும். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள பாரதிய சனதா கட்சி, தமிழகத்தில் ஆங்காங்கு இந்து மத உணர்வை, வெறியைத் தூண்டி, தன்னை இந்துமதத்தின் காவலனாகக் கட்டமைத்து 15 திங்களுக்குப் பின்னர் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடத்தைப் பெற்று ஆட்சி அமைக்க விழைகிறது.  அதன் தொடக்கப் புள்ளியாக இந்த நிகழ்வை தனது தாய் அமைப்பின் வழியாக நடத்துகிறது.

எனவேதான் பெருமாள் முருகனுக்கு எதிராக திரண்டு நிற்கும் அமைப்புகள், அவர் தனது புனைவின் வழியாகக் கூறும் ‘கருத்தை’, திருச்செங்கோட்டைப் பற்றி அவர் கூறும் ‘மெய்மை’யாகக் கட்டமைத்து அவரை இன்னலுக்கு உள்ளாக்குகின்றன. அதன் வழியாக மதவெறியை, சாதியத்தை, ஆணாதிக்கத்தை நிலைநிறுத்த முனைகின்றன. அவற்றை மறுத்து மக்கள் நாயகத்தை, மானுட நேயத்தை வளர்த்தெடுக்க விழைவோரை முடக்க முயலுகின்றன.  ஆனால், கனன்றுகொண்டிருக்கும் எரிமலையை கமண்டலத்து நீரால் அணைத்துவிட முடியாது என அவர்கள் அறியவில்லை.   

அம்ருதா 2015 பிப்ரவரி இதழில் வெளவந்த கட்டுரை

பெரும் மதிப்பிற்குரியோர் உணர்வார்களாக!







மலைத் தொடரின் அடியில் நடுக்காட்டில் இருக்கிறது இன்று வரை சுற்றுலா இடமாக அறிவிக்கப்படாத அந்த அருவி. நெடுஞ்சாலையில் இருந்து கரடுமுரடான வண்டிப்பாதையில் நான்கு கிலோ மீட்டர்கள் சென்றால் கோடையிலும் அங்கு நீர் கொட்டிக்கொண்டு இருக்கும். சில திங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவர்கள் சிலர் அந்த அருவில் மிகுந்த உற்சாகத்தோடு குளித்துக்கொண்டு இருந்தார்கள். உற்சாகம் அவர்கள் வெளிப்படுத்திய உச்ச அளவிலான ஓலத்தில் வெளிப்பட்டது. அப்பொழுது அங்கு வந்த மாவட்ட கானக அலுவலரும் அவர் படையினரும் அந்த மாணவர்களை, அனுமதியின்றி காட்டிற்குள் நுழைந்ததற்காகவும் அங்கு மதுவை அருந்தியதற்காகவும், கைது செய்வதாகக் கூறினர்.  அந்த மாணவர்களோ, தாம் மது அருந்தவில்லை என்றும் ஐயம் இருந்தால் அலுவலர் முகத்திற்கு அருகில் தம்மை ஊத அனுமதித்து சோதித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். அலுவலரோ, கானகக் காவலரின் முகத்தில் ஊதிக் காட்டுமாறு அந்த மாணவர்களைப் பணித்தார். சோதனையின் முடிவில் அவர்களில் யாரும் மது அருந்தி இருக்கவில்லை எனத் தெரியவந்தது. சுற்றுலா இடமாக அறிவிக்கப்படாத அக்காட்டிற்குள் உரிய அனுமதியின்றி அவர்கள் நுழைந்தது குற்றம் எனத் தெரிவித்த அந்த கானக அலுவலர், அதற்குத் தண்டனையாக அம்மாணவர்கள் அங்கு உடைந்து சிதறிக் கிடக்கும் மதுப் புட்டிகளையும் மதுக் கிண்ணங்களையும் பிற நெகிழிப் பொருள்களையும் பொறுக்கி ஓரிடத்தில் குவிக்க வேண்டும் எனப் பணித்தார். மது அருந்தும் பழக்கம் இல்லாத தங்களால் மதுப் புட்டிகளையும் கிண்ணங்களையும் அள்ள முடியாது என்றும் அனுமதியின்றி காட்டிற்குள் நுழைந்ததற்கான தண்டத்தொகை எவ்வளவோ அதனைக் கட்டுவதற்கு தாம் ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். அலுவலரோ, சமூகத் தொண்டாக நினைத்து இக்குப்பைகளை அள்ளுங்கள் எனக் கட்டாயப்படுத்தினார். வேறு வழியின்றி அம்மாணவர்கள் அவரது ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு அக்குப்பைகளை அள்ளிக் குவித்தனர்.   

இந்நிகழ்வைப் பற்றிய செய்தி சில திங்களுக்கு முன்னர் நாளிதழ்களில் புகைப்படத்தோடு வெளிவந்ததும் அந்த அலுவலர் மேற்கொண்ட நடவடிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் பல கருத்துகள் வெளியிடப்பட்டன.  அவற்றுள் பெரும்பாலான பின்னூட்டங்கள், “தவறு செய்யாத மாணவர்களை குப்பைகளை அள்ள அந்த அலுவலர் பணித்தது தவறு; ஆனால் அருவி, கானகம் ஆகியவற்றின் தூய்மையைக் காப்பதில் அவருக்கு உள்ள ஆர்வம் பாராட்டிற்கு உரியதுஎன்னும் தொனியில் எழுதப்பட்டு இருந்தன.

இச்செய்தி வெளிவந்த சில திங்களுக்குப் பின்னர் என் நண்பர்கள் சிலர், கானகத்துறையிடம் அனுமதி பெறாமல் அந்த அருவிக்கு இன்பவுலா சென்று திரும்பினர்.  அவர்களிடம் வினவியபொழுது, அந்த நடவடிக்கைக்குப் பின்னர் சில நாள்கள் இன்பலாவினர் யாரும் அங்கு வரவில்லை என்றும் அதன் பின்னர் மதுப் புட்டியோடும் பச்சை இறைச்சியோடும் வரும் பலர் காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கி, பாறை இடுக்கில் அடுப்புக்கூட்டி, ஓடை நீரை முகர்ந்து இறைச்சியை வேகவைத்து உண்டு, மது அருந்திய பின்னர் அப்புட்டியை பாறைகள் மீது எறிந்து உடைத்துவிட்டு, அருவியில் குளித்து மகிழ்ந்து, பொருள்களைக் கொண்டுவந்த நெகிழிப்பைகளை அங்கேயே வீசிவிட்டுச் செல்கின்றனர் என அங்கிருக்கும் கோயில் பூசாரி கூறியதாகத் தெரிவித்தனர்.  ஆக அந்த அலுவலரின் கானகத்தைக் காக்கும் ஆர்வம் அந்த ஒரு நாளோடு முடிந்துவிட்டது. 

சேரள மாநிலம் கும்பமுருட்டி அணையின் நுழைவாயிலில் உள்ள எச்சரிக்கை

இந்த நிலைதான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அருவிகளிலும் காடுகளிலும் நிலவுகிறது.  ஆனால் அண்மையில் இருக்கும் சேரள மாநிலத்தில் கானகத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ்வரும் சுற்றுலா இடங்களில் உள்ள கடைகளில் நெகிழிப் பைக்குள் பொதியப்பட்ட தின்பண்டங்களை வாங்கினால், அக்கடைக்காரர் நெகிழிப் பையின் முனையை வெட்டி தின்பண்டத்தை  வேறொரு தாட்பையில் (Paper bag) கொட்டிக் கொடுப்பதை கால் நூற்றாண்டிற்கு முன்னரே கண்டிருக்கிறேன்.  ஆண்டுதோறும் சித்திரை திங்கள் முழுமதிய நாளில், குமுளிக்கு அருகில், கானக நடுவில் அமைந்திருக்கும் மங்களதேவி கோவில் வழிபாட்டிற்குச் செல்பவர்களிடம் இருந்து பறித்த நெகிழிப் பொருள்களை கானகத்தின் நுழைவாயிலில் மலைபோல குவித்து வைத்திருப்பதைக் காணமுடியும். நெகிழிப் பொருள்களை கானகத்திற்குள் கொண்டுசெல்வதைத் தடுப்பதற்காக, பொதுப்பயனுந்தில் (Jeep) செல்லும் அனைவரையும் ஓரிடத்தில் இறக்கி சோதனை செய்வர். அக்காட்சியை,மாற்று நாட்டின் எல்லைப் பகுதிக்குள் நுழைபவர்களைச் சோதிப்பதைப்போல அவர்கள் சோதிக்கிறார்கள்என வெறுப்பைத் தூண்டும் குரலில் தமிழகத் தொலைக்காட்சிகள் சில ஒளிபரப்பினாலும் கானகத்தைக் காப்பதில் அக்கானகத் துறை மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பாராட்டிற்கு உரியவை.

சேரள கானகத் துறையின் அறிவிப்புப் பலகை
 சேரள மாநில கானகத் துறையினர், பள்ளி மாணவர்களை கானகப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று மூன்று நாள்கள் தங்க வைத்து சூழலியல் விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கிறார்கள் என அறிந்து பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இடுக்கி மாவட்ட கானகத் துறையிடம் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அப்பயிற்சியை வழங்க வேண்டும் என வேண்டினோம்.  அவ்வேண்டுகோளை ஏற்ற அவர்கள் பேரியாற்றின் கரையில் உள்ள தேக்கடியில் அமைந்திருக்கும் கானகத்துறைக்குச் சொந்தமான பயிற்சி நடுவத்தில் 30 மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்தார்கள். சூழலியல் வல்லுநரின் உரை, கலந்துரையாடல், கானக உலா, செயற்றிட்டம் என வடிவமைக்கப்பட்டு இருந்தது அப்பயிற்சி.  அதில் கலந்துகொண்ட மாணவர்கள் தம் ஊருக்குத் திரும்பிய பின்னர் நெகிழிப்பை தவிர்ப்பு, பொது இடத் தூய்மை, நீர் சேமிப்பு ஆகியன பற்றிய பரப்புரையில் தாம் வேலை தேடி வேறு ஊர்களுக்குச் செல்வது வரை ஈடுபட்டார்கள். காட்டிற்குள் சென்று சுள்ளி பொறுக்குவோர், சட்டத்திற்கு உட்பட்டு கானக சிறுவிளைபொருள்களை விற்பனைக்குத் திரட்டுவோர், மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்ப்போர் மீது வழக்குப் போடுவதை மட்டுமே செய்யாமல் அம்மாநில கானகத் துறை பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் சூழலியல் விழிப்புணர்வின் விளைவுகளை அங்குள்ள சுற்றுலா இடங்களில் இன்றும் கவனிக்க இயலும். 

சேரள கானகத்துறை வழங்குவதைப் போன்ற விழிப்புணர்வுப் பயிற்சியை மேலும் பல மாணவர்களுக்கு வழங்க இயலுமா என தமிழக கானகத் துறை அலுவலர்களை அணுகியபொழுது அவர்களில் பலருக்கு அதில் ஆர்வமோ அக்கறையோ இல்லை.  மாறாக அவர்களில் பலர், காட்டினை ஒட்டிய ஊர்களில் வாழும் மக்களே அக்காடுகளை அழிப்பதாகவும் அருவிகளிலும் ஓடைகளிலும் மதுப்புட்டி, நெகிழிப்பொருள்கள் போன்றவற்றை வீசுவதாகவும் குற்றம் சாட்டினர்.  முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஓங்கி உயர்ந்த மரங்களால் நிறைந்திருந்த சுருளி அருவி போன்ற இடங்கள், இன்றைக்கு பொட்டல் காடுகளாக மாறியிருப்பதற்கும் அண்மைக் காலம் வரை பெரியகுளம் – தேனி நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பயணம் செய்பவர்களால் கோடைக்கானல் மலைப்பகுதியில் தீப்பிழப்புகள் ஆங்காங்கே  எரிந்துகொண்டு இருப்பதைக் காண முடிந்ததற்கும் அப்பகுதியில் உள்ள சிற்றூர் மக்கள்தான் காரணிகளா என வினவினால், ‘அமைதி’தான் அவர்களது விடையாக இருக்கிறது. 

கும்பமுருட்டி அணைக்கு மது, நெகிழி ஆகியவற்றை சுற்றுலாவினர் கொண்டு செல்லாமல் தடுக்க அருவிக்கான பாதையில் காத்திருக்கும் சேரள கானகத் துறை ஊழியர்கள்.
 தமிழகத்தில் உள்ள எல்லா சுற்றுலா இடங்களும் குப்பைமேடுகளாகவே காட்சி அளிக்கின்றன. அதிலும் கானகத்தை ஒட்டிய அமைந்துள்ள சுற்றுலா இடங்கள் ஆபத்தான குப்பை மேடுகளாக மாறி வருகின்றன. அவற்றால் அங்கிருக்கும் உணவுச் சங்கிலி சிதைந்து, உணவு வலை அறுந்து, பல்லுயிர் பெருக்கம் அழிவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே கானகத்தைக் காக்க வெற்று ஆதிக்கக் கூச்சலை ஒதுக்கி வைத்துவிட்டு, விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய பெரும்பணி நம்முன் இருக்கிறது. அவற்றை குழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக் காலத்திலேயே தேர்வு, மதிப்பெண் என அச்சுறுத்தாமல் கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் ஒன்றாகத்தான் சூழலியல் கல்வி என்னும் பாடம் பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகம் செய்யப்பட்டு, கிழமைக்கு ஒரு பாடவேளை அதற்கென ஒதுக்கப்பட்டது. ஆனால் சூழலியலில் அடிப்படையே அறியாத ஆசிரியர்கள் அதனைக் கற்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் விளைவு, அப்பாடவேளையில் கணித விடையையோ அறிவியல் விடையையோ ஆங்கிலக் கட்டுரையையோ மாணவர்கள் மனப்பாடம் செய்துகொண்டு இருக்கிறார்கள். சூழலியல் கல்வி நூலோ அட்டை கூட புரட்டப்படாமல் பத்திரமாக இருக்கிறது.  பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் முறையாக சூழலியலைக் கற்பிக்கவும் இடையறாது விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டிய வேலையைச் செய்யாமல், ஏதோ ஒரு நாள், இன்பவுலா வந்த மாணவர்களைப் பிடித்து, குப்பைகளை அள்ளச் சொல்லிவிட்டு நாளிழதலுக்கு ஒளிப்படத்தோடு செய்திகொடுப்பதால் என்ன பயன் விளையப் போகிறது?

மாறாக, ஆழிப்பேரலைக்குப் பின்னர் தீயணைப்புத் துறையினர் பள்ளிக் கல்வித் துறையோடு இணைந்து கடலூர், நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் ஒவ்வொன்றிலும் செம்மையாகத் திட்டமிட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களுக்கு  பேரிடர் மேலாண்மைப் பயிற்சிகளை பல அமர்வுகளாக வழங்கியதைப் போல கானகத் துறையானது பள்ளிக் கல்வித் துறையோடு இணைந்து தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தக்க வல்லுநர்களைக்கொண்டு சூழலியல் கல்வியையும் கானக, சுற்றுலா இட நன்னட்டத்தைகளையும் (Tourist spot etiquette) கானக உலா ஏர்பாடுகளையும் செம்மையாகத் திட்டமிட்டுக் கற்பித்தால் சில ஆண்டுகளுக்குப் பின்னர் உரிய பயனைத் தர வாய்ப்பு இருக்கிறது. 

மேலும் சுற்றுலா இடம், கானகத்தை ஒட்டிய அருவி ஆகிய இடங்களில் முறையாகச் சோதனை செய்து நெகிழிப் பொருள்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள், மதுப்புட்டிகள் போன்றவற்றைக் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டுமே அன்றி, வெறும் சடங்கிற்காக ஏதோ ஒரு நாள் அவ்விடங்களுக்கு அன்றைக்கு  வந்திருப்பவர்களை மிரட்டுவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதனை பெரும்மதிப்பிற்குரிய நம் அரசு அலுவலர்கள் உணர்வார்களாக! 

அம்ருதா 2015 சனவரி இதழில் வெளிவந்த கட்டுரை

காலத்தின் கையில் நான் சுற்றுகிறேன்

ராசம் கிருட்டிணன்

மாமியார்மருமகள் சண்டையையும் அண்ணன்தங்கை பாசத்தையும் கணவனைத் திருத்தும் மனைவியின் பொறுமையையும் திரும்பத் திரும்ப எழுதுகிறவர்களாகவே பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என நான் எண்ணிக்கொண்டிருந்த எனது பதின்பருவத்தில் சிறுகதை எழுத்தாளரும் நண்பருமான பீர்முகமது அப்பாவின் வழியாக ராம் கிருட்டிணனின் பெயர் எனக்கு அறிமுகமானது. 1984 அல்லது 1985ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒருங்கிணைத்திருந்த புதினம் படைத்தல்என்னும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க இருந்த அவர், அதற்கான முன்னாயத்தமாக சில புதினங்களைப் படித்துக்கொண்டு இருந்தார். அவருக்குக் கிடைக்காத புதினங்கள் சிலவற்றைத் தேடியெடுத்துக் கொடுக்கும்படி என்னிடம் வேண்டினார். அவ்வாறு அவர் கொடுத்த பட்டியலின் வழியாகத்தான் ராம் கிருட்டிணனின் பெயர் எனக்கு அறிமுகம் ஆனது.  பட்டியலில் இருந்த பத்து புதின எழுத்தாளர்களில் இவர் மட்டுமே பெண் எழுத்தாளராக இருந்தார். இதுவே, ‘அவருடைய புதினத்தில் அப்படி என்ன இருக்கிறது?’ என்னும் ஆர்வத்தைக் கிளற, அவருடையகூட்டுக்குஞ்சுகள்புதினத்தை நூலகத்தில் இருந்து தேடியெடுத்துப் படித்தேன். பருவ இதழ்களில் பெண் எழுத்தாளர்கள் தொடராக எழுதிக்கொண்டு இருந்த நெடுங்கதைகளில் இருத்து அப்புதினம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. சிறந்த எழுத்துகள் என அதுவரை எனக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்த படைப்புகளில் இல்லாத வாழ்க்கையையும் மக்களையும் களத்தையும் அப்புதினம் பேசியது. அதன் பின்னர் நூலகங்களில் கிடைத்த அவருடைய படைப்புகளைப் படிக்கத் தொடங்கினேன்ஓரிரு சிறுகதைத் தொகுப்புகளும் பல புதினங்களும் கிடைத்தன. அவற்றின் வழியாக அறிமுகமான மாந்தர்கள், நாளும் என்னுடைய வாழ்வில் நான் சந்திக்கும் மாந்தர்களைக் கவனிக்கும்படி தூண்டினார்கள். நாளாக நாளாக அக்கதைகள் வெறும் கதைகளை மட்டுமல்ல, அரசியலையும் பேசுகின்றன என்பது புரிபடத் தொடங்கியது. அவருடைய படைப்புகளைப் பட்டியல்போட்டு தேடிப்படிக்கத் தொடங்கினேன்.

அவற்றுள் சிலவற்றைப் பற்றி, அப்பொழுது பணி ஓய்வுபெற்று கம்பத்தில் வந்து குடியேறிய தமிழ்நாடு பொதுநூலக இயக்குநர் வே. தில்லைநாயகத்திடம் (வேதி) அவ்வப்பொழுது கலந்துரையாடுவேன். நூலகத்தில் கிடைக்காத சில நூல்களை அவர் தன்னுடைய நூலகத்தில் இருந்து எடுத்துக்கொடுத்தார். அவ்வாறுதான் கலைமகளில் ராம் கிருட்டிணன் எழுதிய குறிஞ்சித்தேன்தொடரின் கட்டுமத் தொகுப்பு அவரிடமிருந்து எனக்குக் கிடைத்தது. அவர் ஒவ்வொரு முறை சென்னை சென்று திரும்பும்பொழுதும் ராம் கிருட்டிணனின் அண்மைப் படைப்புகளை வாங்கிவந்து கொடுத்தார்அவ்வாறுதான் ராம் கிருட்டிணனின் அல்புனைவு (Non Fiction) ஆக்கங்கள் எனக்கு அறிமுகம் ஆயினகாலந்தோறும் பெண், காலந்தோறும் பெண்மை, யாதுமாகி ஆகிய அல்புனைவு நூல்கள் சுடச்சுட வேதியிடம் இருந்து எனக்குக் கிடைத்தன. புதினங்களில் உள்ளுறையாகப் பொதியப்பட்டு இருந்த பெண்ணியச் சிந்தனைகள் இந்நூல்களில் விரிவாக விளக்கப்பட்டு இருந்தன. பெரியாரது பொழிவுகளைப் படித்து அறிந்திருந்த பெண்ணியக் கருத்துகளை இந்நூல்கள் சமூக அறிவியல் அடிப்படையில் வலுப்படுத்தினஇந்நிலையில் நூல் பதிப்பு, பொது நூலகங்களுக்கு நூல் வாங்குதல் தொடர்பாக ஒருநாள் வேதியுடன் கலந்துரையாடியபொழுது அவைபற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ளவரும் பத்தாண்டுகளில் தமிழ்ப்புத்தக வெளியீடுஎன்னும் நூலைக் கொடுத்தார்இந்திய தேசிய நூல் அறக்கட்டளையின் (National Book Trust, India) சார்பில் எழுத்தாளர் ஆதவன் சுந்தரம் நூல் பதிப்பு பற்றி ஒருங்கிணைத்திருந்த கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு அந்நூல்அதில் எழுத்தாளர், பதிப்பாளர், நூல் விற்பனையாளர், பொது நூலக அலுவலர், படிக்குநர் என நூல் ஆக்கம் தொடங்கி நுகர்வு வரை உள்ள வழங்கற்பாதையின் ஒவ்வொரு கண்ணியிலும் இருப்பவர்கள் தம் கருத்துகளைப் பதிவுசெய்த கட்டுரைகளின் தொகுப்பு அது. அதில் ராம் கிருட்டிணனும் வேதியும் தத்தம் நிலையில் இருந்து எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. ராம் கிருட்டிணனின் கட்டுரை பொதுநூலகத் துறையில் வேதி அறிமுகம் செய்திருந்த 16பக்கங்களைக் கொண்ட ஒவ்வொரு மடிப்பிற்கும் இவ்வளவு தொகை என்னும் விலைக் கொள்கையையும் ஓராண்டில் ஒரு நூலில் 500 படிகளே பொது நூலகத்திற்கு வாங்கப்படும் என்னும் கொள்முதல் கொள்கையையும் விமர்சிப்பதாக இருந்ததுவேதியின் கட்டுரையோ, ‘பதிப்பாளருக்கு நூல் ஒரு விற்பனைப் பொருள். நூலகத்துறை அப்பொருளை வாங்கும் நிறுவனம். எனவே பொருளுக்கு ஏற்ற விலை.’ என எடுத்துரைத்தது. அந்நூலைப் படித்த பின்னர் வேதியுடன் நிகழ்த்திய உரையாடலில், அக்கருத்தரங்கில் கட்டுரைகள் வாசிக்கப்பட்ட பின்னர் அவர்கள் இருவருக்கும் அரங்கில் நடந்த அனல் பறந்த கருத்தாடல்களைப் பற்றியும்  இறுதிவரை ராம் கிருட்டிணன் தன்னுடைய கருத்தையே வலியுறுத்தி, மாற்றுக் கருத்தை ஏற்கவே இல்லை என்பதும் தெரிந்தது. இந்நிகழ்வு ராம் கிருட்டிணன் ஒரு பிடிவாதக்காரராக இருப்பாரோ என்னும் எண்ணத்தை என்னுடைய மனதில் விதைத்தது.

சில ஆண்டுகள் கழித்து, நீல. பத்மநாபன் எழுதிய தேரோடும் வீதியிலே புதினம் வெளிவந்தது. அப்புதினம் முழுக்க முழுக்க புனைவு என அவர் எவ்வளவுதான் கூறியிருந்தாலும் தமிழிலக்கிய உலகம் அதில் வரும் கதைமாந்தர் ஒவ்வொருவரும் ஓர் எழுத்தாளரைச் சுட்டுகின்றனர் என நம்பியது. இந்த எழுத்தாளர்தான் இந்தக் கதைமாந்தராக வருகிறார் என பட்டியல்களும் வெளியிடப்பட்டனநானும் நந்தன்ஶ்ரீதர் உள்ளிட்ட நண்பர்கள் சிலரும் அப்புதினத்தின் கதைமாந்தர்கள் சுட்டும் எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டில் ஈடுபட்டோம்அதில் சுற்றுலாச் செல்லும் எழுத்தாளர் குழுவில் இடம்பெறும் வயதான பெண் எழுத்தாளரான கதைமாந்தர் ராசம் கிருட்டிணனையே சுட்டக்கூடும் என எண்ணினோம்ஆண்களை வெறுக்கிற பெண்ணியலாளராக, சண்டைக்காரராக அவர் இருப்பாரோ என்னும் எண்ணத்தை என்னுள் அக்கதை உருவாக்கியது. அவரது படைப்புகளில் வெளிப்படும் அன்பும் நேசமும் அவரின் கற்பனைதானோ என்னும் ஐயத்தை இவ்விரு செய்திகளும் மனதின் ஓரத்தில் விதைத்தன. இருப்பினும் ராம் கிருட்டிணனின் புதினங்களையும் அல்புதினங்களையும் கிடைக்கும் பொழுதெல்லாம் தொடர்ந்து படித்துக்கொண்டு இருந்தேன்

எனது கல்லூரிக் கல்வி முடிந்த பின்னர், 1992ஆம் ஆண்டில் நாளிதழ் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. திருநெல்வேலியில் அப்பணியை மேற்கொண்டேன். அப்பொழுது அவ்வூருக்கு வருகிற இலக்கியவாணர்களை  நேர்காணல் செய்து, அவ்விதழின் சனிக்கிழமை மலரில் வெளியிடும் வழக்கத்தைத் தொடங்கினேன்வரவேற்பையும் வசவையும் ஒரே நேரத்தில் அம்முயற்சி எனக்கு பெற்றுக்கொடுத்ததுஅப்பொழுது நெல்லை மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராகப் பொறுப்பேற்ற முனைவர் வசந்திதேவி பாடப்புத்தகங்களுக்கும் வகுப்பறைக்கும் அப்பால் இருக்கும் உலகத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டார். அவற்றில் ஒன்றாக நெல்லையில் இராமகிருட்டிண மடத்தின் கீழ் இயங்கும் சாரதா பெண்கள் கல்லூரியில் பெண்ணியக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார்பேராசிரியர்கள் சேசுதாசனும் கணபதிராமனும் அக்கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்கள்அக்கருத்தரங்கிற்கு ராம் கிருட்டிணன் வர இருப்பதாக கணபதிராமன் தெரிவித்தார்ராம் கிருட்டிணனுடன் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யுமாறு கணபதிராமனிடம் வேண்டினேன்அவரும் ஒப்புக்கொண்டார்

கருத்தரங்கின் முதல் நாள் மாலையில் ராம் கிருட்டிணனைக் காண விழைந்தேன். சாரதா கல்லூரி, நெல்லையின் புகழ்பெற்ற விடுதிகள், கருந்தரங்கில் பங்கேற்ற பிற சொற்பொழிவாளர்கள் தங்கிருந்த அரசினர் விருந்தினர் மாளிகை என எங்கும் அவரைக் காணவில்லை. ஒருங்கிணைப்பாளர்களான சேசுதாசனுக்கும் கணபதிராமனுக்குமே அவர் எங்கே தங்கியிருக்கிறார் எனத் தெரியவில்லை.  ‘சென்னைக்கு திரும்பிவிட்டாரா?’ என கண்பதிராமனிடம் வினவினேன். ‘இல்லை. இன்றைக்கு முழுக்க கருத்தரங்கில் பார்வையாளராகத்தான் இருந்தார். நாளைக்கு மதியம்தான் அவர் பேசுகிறார். எனவே இங்குதான் எங்காவது அவர் தங்கியிருக்க வேண்டும்என்றார்தேரோடும் வீதியிலே புதினத்தினத்தில் சுற்றுலாவின்பொழுது தங்குமிடம் குறித்த அவருடைய எதிர்வினை பற்றிய பதிவுதான் அவரைப் பற்றி சண்டைக்காரர் என்னும் படிமத்தை எனக்குள் உருவாக்கி இருந்ததுபல்கலைக் கழகத்தில் யாருக்கும் அவர் எங்கு தங்கியிருக்கிறார் எனத் தெரியாததால் இரவு ஒன்பது மணிக்கு துணைவேந்தரின் இல்லத்திற்கு தொலைபேசினேன். துணைவேந்தர் பேசினார்ராம் கிருட்டிணன் அவர் வீட்டில் தாங்கியிருப்பதாகவும் காலையில் 8.30 மணிக்கு வந்தால் அரை மணிநேரம் நேர்காணலுக்கு அவரால் நேரம் ஒதுக்க முடியும் எனவும் கூறினார்.

மறுநாள், 1992 ஆகத்து 23ஆம் நாள் காலை 8.30.மணிக்கு பாளையங்கோட்டை மகாராச நகரில் இருந்த துணைவேந்தரின் இல்லத்தின் அழைப்பு மணியை அழுத்தினேன். ராம் கிருட்டிணனைப் பற்றி அவர் பிடிவாதக்காரர், சண்டைக்காரர், ஆண்களை வெறுக்கும் பெண்ணியலாளர் என்னும் படிமங்கள் ஒரு பக்கமும் மாந்த குலத்தின் மீது அன்பும் நேயமும் கொண்டவர், உழைக்கும் மக்களின் மீது கரிசனை உடையவர் என அவருடைய படைப்புகளைப் படித்ததால் உருவான படிமங்கள் மறுபக்கமும் எனது மனதிற்குள் ஊடாடிக்கொண்டு இருந்தன. அழைப்புமணி ஓசையைக் கேட்டு துணைவேந்தர் வந்து கதவைத் திறந்தார். வரவேற்பறையில் காத்திருக்குமாறும் ராம் கிருட்டிணன் சில மணித்துளிகளில் வந்துவிடுவார் என்றும் கூறிச் சென்றார். ஐந்து மணித்துளிக்குப் பின்னர் ராம் கிருட்டிணன் அந்த அறைக்குள் புன்னகையோடு நுழைந்தார். ‘கருத்தரங்கத்திற்கு கிளம்ப வேண்டும். தலைமுடியைச் சீவிக்கொண்டு உங்களோடு பேசலாம் இல்லையா?’ எனக் கேட்டார்.  ‘பேசலாம்எனக் கூறிவிட்டு, அன்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் சுபமங்களா இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் திருக்குறளைத் திருத்த வேண்டும் என்றும் பாரதிதாசனும் பெண்களை நுகர்பொருளாகத்தான் பார்த்தார் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்ததில் இருந்து உரையாடலைத் தொடங்கினேன்அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். தலைமுடியை அவசரமாக ஒழுங்கு செய்தார். திருக்குறளை ஏன் திருத்த வேண்டும் என விளக்கத் தொடங்கினார்.  ‘ஒரு படைப்பை அதன் காலத்திலும் இடத்திலும் வைத்தல்லவா பார்க்க வேண்டும். இன்றைய பெண்ணியப் பார்வையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளில் தேடுவது எப்படிச் சரி?’ என வினவ, ‘அப்படியானால் திருக்குறளை ஏன் எல்லாக் காலத்திற்கும் ஏற்ற நூல் எனக் கூறுகிறீர்கள்? அப்படிக் கூறாதீர்கள்என்றார். பாரதிதான் பெண்விடுதலைப் பேராளி என்றும் பாரதிதாசன் கோரிக்கை யற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலாஎன பெண்ணை நுகர்பொருளாகவே பார்த்தவர் என்றும் வாதிட்டார். எனக்கு அக்கருத்து உடன்பாடாக இல்லை. உரையாடல் மெல்ல மெல்ல விவாதமாக உருமாறிக்கொண்டு இருந்ததுதேசிய நூல் அறக்கட்டளையின் கருத்தரங்கம் பற்றி பேச்சு திரும்பியது. அல்புனைவு நூல் ஒவ்வொன்றின் இறுதியிலும் சான்றடைவும் சொல்லடைவும்  இடம்பெற வேண்டும் என்பன போன்ற நூலாக்க நெறிமுறைகள் பற்றிய வேதியின் கருத்துகள் பலவற்றோடு அவர் உடன்பட்டார்குறிஞ்சித்தேன் புதினத்தை கலைமகளில் தொடராக எழுதியபொழுது அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு செய்திக்கும் தான் அடிக்குறிப்பாக சான்றுகளை எழுதியதையும் புதினத் தொடருக்கு சான்றடைவு கொடுக்கும் மரபு இல்லை எனக் கூறி கி.வா.சகந்நாதன் அதனை நீக்கிவிட்டதாகவும் கூறி, புனைவிலக்கியத்திற்கே சான்றடைவு கொடுக்க முடியும் என்றால் அல்புனைவிற்கு கொடுக்க முடியாதா என வினவினார். அதே வேளையில் பொது நூலகத்துறையின் விலைக் கொள்கையையும் கொள்முதல் கொள்கையையும் கடுமையாக விமர்சித்தார்

இந்த விவாதம் நடந்துகொண்டு இருக்கும்பொழுதே துணைவேந்தர் வசந்திதேவியும் அ.மங்கையும் கருத்தரங்கிற்குச் செல்ல ஆயத்தமாகி அங்கே வந்தனர். எங்கள் பேச்சு அறுபட்டது. .மங்கையை ராம் கிருட்டிணன் அறிமுகம் செய்துவைத்தார்அதற்குள் துணைவேந்தரின் மகிழுந்து வீட்டிற்கு வெளியே இருந்து ஒலி எழுப்பியது. கடிகாரத்தைப் பார்த்தேன் 9.30 ஆகியிருந்தது. துணைவேந்தர், ‘கிளம்பலாமா?’ என்பதைப் போல ராம் கிருட்டிணனின் முகத்தைப் பார்த்தார்.  “நான் மதியம்தானே பேச வேண்டும். நீங்கள் போய் இறங்கிக்கொண்டு வண்டியை அனுப்புங்கள். நான் இவரிடம் இன்னும் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்என்றார்அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றார்கள். ‘ஒரு நிமிடம் இருங்கள். வந்துவிடுகிறேன்எனக் கூறி இராம் கிருட்டிணன் வீட்டிற்கு உள்ளே எழுந்து சென்றார்நான் என்னுடைய வினாநிரலைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் இரண்டு கோப்பைகளில் தேனீரோடு வந்த அவர், ஒரு கோப்பையை என்னிடம் நீட்டினார்தேனீரை அருந்திக்கொண்டே எங்கள் உரையாடலை விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார்தேசிய நூல் அறக்கட்டளை நூலும் அக்கருத்தரங்கில் நடந்த கலந்துரையாடலும் எனக்கு எப்படித் தெரியும் என வினவினார். வேதி தெரிவித்தார் என்றதும் அவரைப் பற்றி நலம் விசாரித்தார். அவரது தொலைபேசி எண்ணையும் முகவரியையும் பெற்றுக்கொண்டார். சென்னைக்குச் சென்றதும் அவருடன் பேசுவதாகத் தெரிவித்தார். பேச்சு மீண்டும் இலக்கியம், பெண்ணியம் எனத் திரும்பியதுஆறுவகையான பெண்ணியங்களைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். அதில் சோசலிச பெண்ணியத்தின் தேவையை எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார்உரையாடல் மெல்ல மெல்ல வகுப்பறையாக மாறத் தொடங்கியதுஐயங்களுக்கு பொறுமையாகவும் புரியும்படியும் விளக்கினார். துணைவேந்தரின் மகிழுந்து திரும்பி வந்து ஒலி எழுப்பியது. நான் உரையாடலை முடித்துக்கொண்டு, என்னிடம் இருந்த கலைமகள் இதழில் இருந்து கத்தரித்து எடுத்து கட்டுமம் செய்யப்பட்டு இருந்த குறிஞ்சித்தேன் புதினத்தைக் கொடுத்து அவரின் கையொப்பத்தை இட்டுத்தரும்படி வேண்டினேன். பழைய இதழைப் பார்த்ததும் பெரிதும் மகிழ்ந்தார். தாள்களை இங்கும் அங்கும் புரட்டி, தடவிப் பார்த்தார். அதிலிருந்த ஓவியங்களை வரைய ஓவியர் ரெஸாக் மெனக்கெட்டதை நினைவுகூர்ந்து பாராட்டினார்.   பின்னர் கையொப்பம் இட்டுக் கொடுத்தார்கடிகாரம் மணி 10.30 என்றது. நான் கிளம்பினேன்மனதின் ஒரு மூலையில் இருந்த பிடிவாதக்காரர், சண்டைக்காரர், ஆண்களை வெறுப்பவர் என அவரைப் பற்றி உருவாகியிருந்த படிமங்கள் முற்றிலும் கலைந்து இருந்தன.

அலுவலகத்திற்கு வந்து நேர்காணலை நீண்ட கட்டுரையாக எழுதிக் கொடுத்தேன். துணையாசிரியர் கபிலன் அதில் பெரும்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு மீதமுள்ள பகுதிக்கு, “திருக்குறளைத் திருத்த வேண்டும்எனப் பெயரிட்டு அடுத்த சனிக்கிழமை வெளிவந்த மலரில் வெளியிட்டார்அதன் ஒருபடியை ராம் கிருட்டிணனுக்கு அனுப்பி வைத்தேன்அதன் பின்னர் அவரை நேரில் சந்திக்கவே இல்லை.

அவருடைய படைப்புகளை தொடராகவும் நூலாகவும் படித்துக்கொண்டு இருந்தேன்.  2006ஆம் ஆண்டில் ஆவணப்பட இயக்குநரும் நண்பருமான கெளதம், உப்பளத் தொழிலாளர்களுடைய வாழ்க்கைச் சிக்கல்களை ஆவணப்படமாக எடுக்க ஆயத்தம் ஆகிக்கொண்டு இருந்தார். அவரிடம் கரிப்புமணிகள் புதினத்தை அறிமுகம் செய்து, ராம் கிருட்டிணனைச் சென்று சந்தியுங்கள் எனக் கூறி என்னிடம் இருந்த அவருடைய முகவரியைக் கொடுத்தேன்ஓரிரு நாள்கள் கழித்து தொலைபேசியில் அழைத்த கெளதம் அந்த முகவரியில் ராம் கிருட்டிணன் இல்லை எனத் தெரிவித்தார்.   சில நாள்கள் கழித்து அவர் உறவினர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டார், முதியோர் இல்லத்தில் இருக்கிறார், பேரூர் மருத்துவமனையில் இருக்கிறார் எனத் தகவல்கள் கிடைத்தனமுதியோர் இல்லத்தில் தங்க அவர் விரும்பவில்லை; எனவே மருத்துவமனையிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன.


கடந்த செப்டம்பர் திங்களில் மதுரையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் அண்மையில் வெளிவந்த அவரதுகாலம்என்னும் நூலை வாங்கினேன்பல நாள்கள் கழித்து ஓரிரவில் அதனைப் படித்து முடித்தேன்கண்ணிவிலகாத சங்கிலியைப் போல ஒன்றையடுத்து ஒன்று என சீராகச்செல்லும் ராம் கிருட்டிணனின் எழுத்துநடை அந்த நூலில் இல்லை; துண்டுதுண்டான நினைவுச் சிதறலாக அந்நூல் இருந்தது. இருப்பினும் அவருக்கே உரிய நறுக்குத் தெறித்தாற் போன்ற கருத்துவெடிப்புகளும் அன்பும் நேசமும் அதில் விரவிக்கிடந்தனஅவற்றை அசைபோட்டவாறே படுக்கைக்குச் சென்றுவிட்டு, மறுநாள் இணையத்தைத் திறந்தபொழுது ராம் கிருட்டிணன் மறைந்தார் என்னும் செய்திதான் கண்ணில் முதலிற்பட்டது.  “காலத்தின் முடிச்சு யாராலும் அவிழ்க்க முடியாதது. கடிகார முள் சுற்றுவதுபோல், காலத்தின் கையில் நான் சுற்றுகிறேன்என அந்நூலின் நிறைவில் அவர் குறிப்பிட்டதுதான் நினைவில் மிதந்தது

(2014 திசம்பர் அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை)

நூலக அந்தணர் வே.தில்லைநாயகம்

  யார் ? “‘ ஊருக்கு ஒரு நூலகம் ; ஆளுக்கு ஒரு நூல் - அதுவும் நான்கு பேர் - தாய் , தந்தை , மகள் , மகன் ஆகிய நான்குபேர் - நடுவீட்டில் நன்றாய...